விட்டில் – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்துக் கொண்டே வந்தான். வழி நெடுக இருளை ஒழித்துக் கொண்டிருந்த விளக்குகளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவை அவனுக்குப் பிடித்த, மிகவும் பிடித்த இருளைத் தின்றவாறிருந்தன.

அவனிடம் ஃபோன் கிடையாது. ஆமாம், எட்டாம் வகுப்பு படிக்கு மாணவனுக்கு, எந்த கீழ் நடுத்தரவர்கத்து வீட்டில்தான் ஃபோன் வாங்கித் தருவார்கள். எல்லா பதின்வயதினருக்கும் வரும் பிரச்சனைதான் அவனுக்கும். என்ன பிரச்னை? அரும்பு மீசைத் துளிர்க்கும் நேரம் பெற்றோர் எதிரியாகும் பிரச்னைதான்.

அப்பாவும் அம்மாவும் அவனைப் பற்றிக் கவலை கொள்வதேயில்லை என்று நினைத்துக் கொண்டான். பள்ளிக்கு தினமும் தவறாமல் சென்றாலும் அவனால் முழுமையாக படிக்க முடிந்தாலும் எதோ ஒன்று அவனை “சராசரி” மாணவனாகவே வைத்திருந்தது. அது எதுவென்று அவனுக்குப் புரியவே இல்லை. அவனுக்கு அவ்வளவுதான் அனுபவம்.

Representational Image

வீட்டிற்கு ஒரே பிள்ளை. அப்பாவும் அம்மாவும் ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட காலம் தொட்டு சென்னையில் வாழ்கிறார்கள். இவன் பிறந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் தான் அம்மாவின் அம்மாவே இவர்களைப் பார்க்க வந்தார். அம்மாவின் உறவினர்களையும் அப்பாவின் உறவினர்களையும் அவ்வப்போது எங்காவது விசேஷங்களால் சந்தித்ததோடு சரி.

மாதாமாத வீட்டு செலவுகளை ஒப்பேற்றி ஓட்டும் அளவு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்பர்வைஸராக வேலை செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. அதில்தான் இப்போது பிரச்சனை. சரியாக இவனின் பள்ளிக்குப் ஃபீஸ் பணம் கட்டும் நேரமாகத்தான், அப்பாவின் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று அப்பாவின் அண்ணன் ஃபோன் செய்து சில ஆயிரங்களை வாங்கி சென்றுவிட்டார்.

ஃபீஸ் கட்டுவதற்கென்று எடுத்து வைத்திருந்த பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்த அப்பாவால் உடனடியாக அதே அளவு பணத்தைப் புரட்டி கட்டணம் கட்ட வேண்டிய கடைசி தேதிக்குள் கட்ட முடியவில்லை.

முதல் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த பள்ளி நிர்வாகம், மூன்றாம் நாள் பள்ளியில் வேலை செய்யும் பியூன் மூலமாக ஒரு கடிதத்தை அனுப்பி, “மறுநாளுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால், பையனை பள்ளியிலிருந்து நீக்கிவிடுவோம” என்று அப்பாவை அச்சுறுத்தியிருக்கிறது. இது அவனுக்குத் தெரியாது. சரி!!

அப்பாவால் அடுத்த நாளும் பணம் புரட்ட முடியவில்லை. நடுத்தரவர்கத்தினரை நம்பி குறைந்த வட்டியில் காசு கொடுக்கும் தனவான்கள் எத்தனைப் பேர் உண்டு? கடைசி 90களில், மீட்டர் வட்டியில் பணம் வாங்கி சிலந்தி வலையில் சிக்கிய விட்டில் பூச்சியாக விழுங்கப்பட்டவர்கள் கொஞ்ச நஞ்சமானவர்களா? அப்பா அதற்குதான் பயந்திருக்க வேண்டும். அவர் எங்கெங்கோ கேட்டுப் பார்த்தும், அன்றும் பணப் புரட்ட முடியவில்லை.

மறுநாள் காலை, பள்ளிக்கு சென்றவன், முதல் பீரியட் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில்,

“ராஜகுமாரன்.கே உங்க பையையெல்லாம் எடுத்துக்கிட்டு  ஆஃபீஸ் ரூமுக்கு கிளம்புங்க” என்ற அறிவிப்பு கேட்டு  திகைத்தான், ஒனறுமே புரியவில்லை.

ஆஃபீஸ் ரூமுக்கு செல்லும் வழியில் தலை குனிந்தவாறு வேகமாக நடந்து கொண்டிருந்தான் ராஜகுமாரன். உடன் வந்து  கொண்டிருந்த பியூன் அண்ணா,

“தம்பி! ஃபீஸ் கட்ட முடியலைன்னா அப்பாக்கிட்ட சொல்லி அரசு  பள்ளியில சேர்த்துவிட்டு படிக்க வைக்க சொல்லேன்பா?” என்று சொல்லும்போதுதான் அவனுக்குப் பிரச்சனை புரிந்தது.

ஆஃபீஸ் ரூமிலிருந்து அவனை வீட்டுக்கு அனுப்பினாலும், அவன் நேராக வீட்டுக்கு செல்லவில்லை. மாறாக, அன்று நோட்டு  புத்தகங்கள் வாங்க அம்மாவிடம் பெற்றிருந்த 200 ரூபாயை  எடுத்துக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு ரயில்வே  ஸ்டேசனுக்கு சென்றான்.

சைக்கிளை ஸ்டேசனுக்கு வெளியே நிறுத்திவிட்டு பூட்டியதும்,  மெயின் ஸ்டாண்டு போட்டு ரோட்டோரமாக நிறுத்திவிட்டு,  குனிந்த தலை நிமிராமல் டிக்கெட் கவுண்டருக்கு சென்று  “லோகல் ரயில்ல கடைசி ஸ்டேசனுக்கு ஒரு டிக்கெட் கொடுங்க”  என்றதும் டிக்கெட் கவுண்டர் பெண் அவனை ஒரு மாதிரி  விநோதமாகப் பார்த்தவாறே, கடைசி ஸ்டேசனுக்கு டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தார்.

வேகவேகமாக படிக்கட்டு ஏறியவன், பிளாட்ஃபாரத்தின்  சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்து கொண்டு “நம்ம அப்பா ஏன்  இப்படி இருக்காங்க! ஃபீஸ் கட்ட முடியாதுன்னு முன்னாடியே  சொல்லியிருந்தா நான் ஸ்கூலுக்கேப் போயிருக்க மாட்டேன்ல?  என்னை ஸ்கூலுக்கு அனுப்பி என் கிளாஸ் பசங்க முன்னாடி ஏன் இப்படி அவமானப்படுத்தனும்?” என்று மனசுக்குள் கருவிக்  கொண்டே இருந்த மயக்கத்தில் தன் கண்கள் கலங்குவதைக்  கவனிக்க மறந்தான். ரயில் வந்தது. வெண்டர்ஸ்  கம்பார்ட்மெண்டில் ஏறினான். 

ரயில் நகரத் துவங்கியது…

ராஜகுமாரனுக்கு நண்பர்கள் என்று யாருமில்லை. வெளி  சமூகத்துடன் அதிகமாக பழகாத இன்டிரோவர்டாகவே வளர்ந்து கொண்டிருந்தான். அவன் அம்மாவுக்கோ அல்லது அப்பாவுக்கோ அதைப் பற்றியேத் தெரியாது. இருவருமே அதிகமாக  படிக்காதவர்கள். பள்ளி காலத்திலிருந்தே காதலித்து, கல்லூரிக்கு செல்லும்  வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டு நடுத்தர வாழ்வுடன் சமர் செய்யத் துவங்கியவர்கள். இன்டிரோவெர்ட்  எக்ஸ்டிரோவர்ட் பற்றியெல்லாம் அதிகம் புரிதலில்லாதவர்கள்.

பையனை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று  பொத்தி பொத்தி வளர்த்ததும் அவன் இன்டிரோவெர்ட்டாக ஒரு  காரணம் என்றாலும், ராஜகுமாரனின் அப்பா அம்மாவுக்கும்  பெரிதாக நட்பு வட்டமோ அல்லது உறவினர்கள் குடும்பங்களுடன் பற்றோ இல்லாத காரணத்தால் அவனுக்கு நெருங்கிய  மனிதர்களென்று யாருடனும் பழகும் வாய்ப்பில்லாமல்  போய்விட்டது.

பள்ளியில் உடன் படிக்குள் பசங்களுடன் எப்போதுமே ஒரு  தொலைவை கடைப்பிடித்து பழகுவான் கூட. நண்பர்களே  இல்லாத ஒருவன் என்றுதான் அவறை சொல்ல வேண்டும்.  அப்படியென்றால் அவன் ஏன் அவமானப்படுத்தப்பட்டதாக உணர வேண்டும்? 

அந்த வயதிலிருந்து இன்னும் சில ஆண்டுகளில் அவன்  அடையப்போகும் வளர்ச்சிக்கு இந்த அவமான உணர்ச்சி  வித்தாகவும் இருக்கலாம்? விஷமாகவும் இருக்கலாம்…

ரயில் ஸ்டேசனில் நின்றபோதே, ஸ்டேசனுக்குப் பக்கத்தில்  எதோவொரு கோயிலில் விசேஷம் என்று புரிந்து கொள்ளும்  அளவிற்கு பாடல் ஒலி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ரயில்  கடைசி ஸ்டேசனுக்கு வரவில்லை என்று அவனுக்குத் தெரியும்.  ஆனால், அந்த கோயிலிலிருந்து கசிந்து கொண்டிருக்கும் “மாரியம்மா! எங்கள் மாரியம்மா!!” பாடலின் குயல் அவனை என்னமோ செய்தது. ரயிலிலிருந்து இறங்கி ஸ்டேசனுக்கு வெளியே  நடந்தான். நிறைய  கடைகள், கோயில் திரிவிழா பேனர்கள்.

காசு கொஞ்சம் இருந்தது. இரண்டு வாழைப்பழம் வாங்கி வேக  வேகமாக விழுங்கினான். பெட்டிக் கடைக்காரர்,  ‘இந்த யூனிஃபாரம் எந்த ஸ்கூல் யூனிஃபாரம்?’ என்று  யோசித்தபடியே பழத்தைக் கொடுத்ததை ராஜகுமாரன்   கவனிக்கவில்லை.  அவன் காதில் விழுந்ததெல்லாம்,

“என்னப்பா இன்னைக்கு ராத்திரி திருவிழா கூத்துக்கு வர  வேண்டிய ட்ரூப்பு வர முடியாம போயிருச்சுன்னு, வேறு எதோ  ட்ரூப்புக்கிட்ட கெஞ்சி வர வச்சிருக்காங்களாம்? உண்மையா?”  என்று யாரோ ஒருவர் கேட்டதுதான் ஒலித்தது. திரும்பி முகத்தை நிமிர்த்தி கடையிலிருந்து இரண்டு அடி தள்ளி நின்ற பேனரில்  பார்த்தால்,

” மேஜிக் ஃபெல்லோஸ் நாடக குழு” என்ற பெயர்  போடப்பட்டிருந்தது. அவர்கள்தான் வரவில்லை போல, வேறு  யாரோ வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு பழத்தை  விழுங்கினான். 

“அண்ணா! கோயிலுக்கு எந்த வழியாண்ணா போகனும்?”என்று  அந்த அண்ணனிடமே கேட்டான். அவர் சொன்ன வழி நோக்கி  கால் நகர்ந்தது. போகும் வழியில் இருந்த பெரிய காவாய் மதகின் ஓரம் இருந்த குட்டிசுவற்றில் சிறிது நேரம் உட்கார்ந்து இருள்  கவிழ்வதைப் பார்த்தான்.

“இந்த மாலை எவ்வளவு அழகாக இருக்கிறது? இன்றுதானா இது  இவ்வளவு அழகாக இருந்து தொலைய வேண்டும்? நான் இருக்கும் மனநிலையில் இதை ரசிக்கக் கூட முடியவில்லையே?” என்று  வருந்திய ஒரு மனசாட்சியிடம்,

“சார்! அப்படி கப்பலை கவுத்துட்டு அதுல இருந்த ஆயிரம் பேரை சாவடிச்சுட்டு வந்து இங்கே துக்கமா உட்கார்ந்திருக்காரு, இப்போதான் ரசிக்க முடியலையாம். நேரா பாருடா வெண்ணேய்!! நீ இங்க வந்து இப்படி உட்கார்ந்துட்டு இந்த மாலையை அனுபவிக்கதான் இவ்வளவும் நடந்துருக்கு… அதை புரிஞ்சுக்காம ரசிக்க  மாட்டேன்னு அடம் புடிக்காத!” என்றது எதிர் மனசாட்சி.

மனசு இலகுவாவதை நினைத்து சற்றே மலைத்துப் போனான். “எப்படி அவ்வளவு அவமான எண்ணமும் வருத்தமும் ஒரு ரயில்  பயணத்தின் முடிவில் வந்தமர்ந்து கொண்ட இந்த பெயர்  தெரியாத மக்கள் வாழும் ஊரி என்னிலிருந்து பெயர்த்தெடுத்தது?” என்று அவனுக்குப் புரியவில்லை.

எழுந்து கோயிலை நோக்கி மீண்டும்  நடந்தான். கோயில் அருகில் பெரிய குளம். அதை சுற்றிலும் படித்துறைக்கு மேல் நிற்கும் மதில் சுவர். மதில் சுவர் மேல் அகல் விளக்குகள் விட்டில்களாய்  மினுமினுத்தவாறிருந்தன. அரையிருளிலிருந்து முழு இருளுக்குத் தாவியிருந்தது மாலை!! இப்போது அதன் பெயர் இரவு!!

தெருவெங்கும் கூட்டம் கூட்டமாய் மக்கள். பாதி பேருக்கு மேல்  அர்ச்சனைக் கூடைகளுடன் பிரசாத பைகளுடன்  திரிந்தவாறிருந்தார்கள். கடைகளில் வியாபாரம் “திருவிழா  வியாபாரமாக” களைகட்டியிருந்தது.

ராஜகுமாரன் அங்குலம் அங்குலமாக அவன் முன் பரந்து விரிந்த கிடந்த அந்த இரவை ரசிக்கத் துவங்கினான். அவன் கண்களுக்கு முன், வண்ணமயமாக ஒளித்துகள்கள் சிதற ஒரு பேரழகான  காட்சி பரவி கிடந்தது. மனம் முழுவதும் குதூகலம் பொங்கியது. அவனைத் திட்ட யாருமில்லை! கேட்க யாருமில்லை!! தடுக்க  யாருமில்லை!! நினைத்ததை செய்யலாம் என்ற தைரியம்  துளிர்விட்டது.

தனக்குத் தானே சிரித்துத் கொண்டு, சுற்றியிருக்கும்  உயிர்களையெல்லாம் காட்சிகளாய் பிரதியெடுத்துக்  கொண்டான்.

இந்த இரவு இதுநாள் வரை அவனுக்கு வாய்க்காத இரவு!  இதுவொரு அற்புதம் என்றே உணர்ந்தான். நேரம் போனது  தெரியாமல் கோயிலைச் சுற்றிச் சுற்றி இரவைத் தின்று  செமித்தான்!! அவனால் அவனையேக் கட்டுப்படுத்த முடியாத  நிலை என்று, வெகுநேரம் கழித்துதான் உணர்ந்தான். கோவில்  குளத்தின் படித்துறையில் அமர்ந்திருந்தவன், படிக்கட்டுகளிலும் சுவர்களிலும் ஏற்றப்பட்டிருந்து விளக்குகளை மீண்டும்  ஒருமுறைப் பார்த்தான்!!

“ஏய் விளக்குகளே!! எனக்கான இரவை நீங்கள் தின்பதா?” என்று  தன் மனசுக்குள் சொல்லிக் கொண்டவன், ஒவ்வொரு  விளக்குகளாக ஊதிக் கொண்டே சென்றான், ஊதி அணைத்து  முடிக்கவே முடியாத அளவுக்கான விளக்குகளை அந்த இரவு  அவனுக்குக் கொடுத்தபடியே இருந்தது… ஒவ்வொரு விளக்கின்  அணைதலிலும், விளக்கிலிருந்த ஒளி அவனுக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தவாறிருந்தது… அவன் மகிழ்ச்சிக் கூட கூட, அவனின்  கழுத்து நேராகி, இனி குனியவே குனியாத நிலைக்கு  வந்துருந்தது!

இவையெதுவுமே அவனுக்கு இன்னும் தெரியாது!! எல்லாம்  அவனைச் சுற்றி எதேச்சையாக நிகழ்ந்தபடி இருக்கிறது!!  அவன் இத்தருணத்துக்குள் பறக்கும் விட்டிலாகி மினுமினுக்கத்  துவங்கியிருந்தான். இரவு முடியும் போது, இன்றைய  ராஜகுமாரனாக நாளையிலிருந்து அவன் இருக்க மாட்டான்  என்பது நிச்சயம்!!

-குமரகுரு.அ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.