Vinesh Phogat: 'சவாலளித்த பா.ஜ.க; சங்கடமளித்த உட்கட்சி சீனியர்கள்!' – எப்படி வென்றார் வினேஷ் போகத்?

ஹரியானாவில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்திருந்தாலும் அவர்கள் சார்பில் நட்சத்திர வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் வென்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியே பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் பா.ஜ.கவின் ‘Social Engineering’ யுக்திகளையெல்லாம் கடந்து வினேஷ் போகத் வென்றிருக்கிறார். இத்தனைக்கும் கடந்த தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வெறும் 12000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இப்படி ஒரு சவாலான தொகுதியில் வினேஷ் போகத் எப்படி வென்றார்?

Vinesh

ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கத்துக்கான போட்டிக்கு முன்பாக வெறுமென ஒரு 100 கிராம் எடைதான் வினேஷூக்கு எமனாக மாறியிருந்தது. அந்த சம்பவம் நடந்து இப்போது இரண்டே மாதங்களில் தேர்தலை சந்தித்திருக்கிறார். முதலில் சில சுற்றுகளின் முடிவில் வெறும் 200 வாக்குகள் வித்தியாசத்திலெல்லாம் வினேஷ் முன்னிலையில் இருந்தார். திடீரென 2000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவையெல்லாம் சந்தித்தார். மல்யுத்த போட்டிகளைப் போலவே நெருக்கமாக போட்டி செல்லுமோ என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசியில் கிட்டத்தட்ட 6000 வாக்குகளுக்கு மேலாக முன்னிலை எடுத்து வினேஷ் போகத் வென்றிருக்கிறார். கடைசி நிமிட பரபரப்புகள் எதுவும் இல்லாத சௌகரியமான வெற்றி.

ஜூலானா தொகுதியே காங்கிரஸூக்கு கொஞ்சம் சவாலான தொகுதிதான். 2005 இல் காங்கிரஸ் ஹரியானாவில் 67 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருந்தது. பூபேந்திர சிங் ஹூடா முதலமைச்சர் ஆகியிருந்தார். அந்தத் தேர்தலில்தான் கடைசியாக காங்கிரஸ் ஜூலானா தொகுதியை கைப்பற்றியிருந்தது. ஷேர் சிங் ஷெராவத் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகியிருந்தார். ஹரியானா மாநிலமாக ஆக்கப்பட்டதிலிருந்தே பாரம்பரியமாக காங்கிரஸூக்கு அங்கே பெரிய இடம் இல்லை. 1967 இல் முதல் தேர்தலில் காங்கிரஸ் வென்றிருக்கும். அதன்பிறகு இடைத்தேர்தலில் தோற்று 1972 இல் மீண்டும் வென்றிருக்கும். அதன்பிறகு 2000 வரைக்கும் காங்கிரஸ் கையில் இந்தத் தொகுதி இல்லை. ஷேர் சிங் ஷெராவத் தான் மீண்டும் தொடர்ச்சியாக இந்த தொகுதியை வென்று கொடுக்கிறார். 2009, 2014 இந்தத் தேர்தல்களில் இந்திய தேசிய லோக் தள கட்சியை சேர்ந்த பர்மீந்தர் சிங் துல் என்பவர் கையில் தொகுதி இருந்தது. 2019 தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சியை சேர்ந்த அமர்ஜீர் தண்டா என்பவர் இங்கே வென்றிருந்தார்.

Vinesh

தாங்கள் பெரிதாக வெற்றிகளைப் பெறாத சவாலான தொகுதியையே காங்கிரஸ் வினேஷ் போகத்துக்கு கொடுத்திருந்தது. ஒலிம்பிக்ஸில் அவருக்கு நடந்த விஷயங்கள் மூலம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் அவர் ஈர்த்ததால் கடினமான இந்தத் தொகுதியை வினேஷ் போகத்தால் வென்று கொடுக்க முடியும் என காங்கிரஸ் நம்பியது. இதற்குப் பின்னால் சில காரணங்களும் இருந்தது. விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த ஜாட் சமூகத்தினர் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருப்பார்கள் என்பதால் அவர்களின் வாக்கு வங்கியைத்தான் காங்கிரஸ் ஹரியானாவில் பெரிதாக நம்பியிருந்தது.

ஜூலானா தொகுதியுமே ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் தொகுதிதான். இதனால்தான் ஜாட் சமூகத்தை சேர்ந்த வினேஷை காங்கிரஸ் இங்கே களமிறக்கியது. அதுபோக, வினேஷ் இந்த ஜூலானா தொகுதியின் மருமகளும் கூட. இதெல்லாம் அவருக்கு சாதகமான விஷயங்களாக பார்க்கப்பட்டது.

ஆனால், கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்துமே நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஜூலானா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் சீனியர்கள் உட்பட 86 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். தேர்தலுக்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன்பாக ராகுல் காந்தியை சந்தித்து கட்சியிலும் இணைந்து உடனே ஜூலானா டிக்கெட்டை தட்டிச் சென்றுவிட்டதால் உள்ளூர் காங்கிரஸ்க்காரர்களே கடும் அதிருப்தியில் இருந்திருக்கின்றனர்.

Vinesh

பர்மீந்தர் துல், ரோஹித் தலால் போன்ற முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் கொஞ்சம் ஒதுங்கியே இருந்திருக்கின்றனர். மேலும், பா.ஜ.கவும் வினேஷ் போகத்தை தோற்கடிக்கும் முனைப்பில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வந்த கேப்டன் யோகேஷ் பைரகி என்பவரை களமிறக்கியது. 9 ஆண்டுகளாக இராணுவத்தில் பணியாற்றிய இவரை வைத்து தேசப்பற்று ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என்பது பா.ஜ.கவின் திட்டம். அதுபோக, எல்லா மாநிலங்களிலும் செய்வதைப் போல ‘Social Engineering’ என்ற பெயரிலான சாதிய சமன்பாடுகளையும் யோகேஷ் பைரகியின் பின்னால் பா.ஜ.க வைத்திருந்தது. ஜூலானா தொகுதியில் போட்டியிட்டதில் இந்த யோகேஷ் பைரகியை தவிர அமர்ஜீத் தண்டா, ஆம் ஆத்மியின் கவிதா ராணி, இந்திய தேசிய லோக் தளத்தின் சுரேந்தர் என வினேஷ் உட்பட அத்தனை பேருமே ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள். யோகேஷ் பைரகி ஜாட் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.

ஜூலானாவில் கிட்டத்தட்ட 81000 ஜாட் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஜாட் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் கிட்டத்தட்ட 64000 பேர் வாக்காளர்களாக இருந்தனர். ஜாட் சமூகத்தின் வாக்குகள் உடையும், மற்ற சமூகத்தினரின் வாக்குகளை யோகேஷ் பைரகி சிந்தாமல் சிதறாமல் அள்ளி வருவார் என பா.ஜ.க எதிர்பார்த்தது. ஆனால், நடந்திருப்பதோ வேறு. எதிர்பார்த்ததை போல வினேஷூக்கும் யோகேஷூக்கும்தான் சவாலான போட்டி நிலவியது. ஆனாலும் கிட்டத்தட்ட 60000 வாக்குகளை வினேஷ் பெற்றிருக்கிறார். ஏறக்குறைய 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லவும் செய்திருக்கிறார். அத்தனை சமூகத்தினரையும் ஈர்க்கும் வகையில் இஸ்லாம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் வினேஷ் கூடுதலாக பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார்.

Vinesh

தனக்கு ஒலிம்பிக்ஸில் அநீதி இழைக்கப்பட்டது. திரை மறைவில் நடந்தவற்றைப் பற்றியெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஆனால், அந்த சம்பவங்களால்தான் நான் அரசியலுக்கே வந்தேன் என பிரசாரத்தை முன்னெடுத்தார். இந்த ஜூலானா தொகுதி 73 கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் 2000 ஊக்கத்தொகை போன்ற காங்கிரஸ் அளித்த முக்கியமான 7 வாக்குறுதிகளை வினேஷ் முன்னெடுத்துச் செல்கையில் அது இன்னும் அதிக தாக்கத்தை களத்தில் ஏற்பட்டது. மக்கள் மத்தியில் வினேஷூக்கு அதிக செல்வாக்கு இருந்ததால் எதிர் வேட்பாளர்களுமே தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிப்பதை தவிர்த்தனர். யோகேஷ் பைரகி கூட வினேஷை நாட்டிற்கு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த சகோதரி என்றே பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேசியிருந்தார்.

மல்யுத்த களத்தைப் போன்ற பெரும் சவால்மிக்க ஜூலானா களத்தில்தான் வினேஷ் போகத்தை காங்கிரஸ் களமிறக்கியிருந்தது. தொகுதியின் வரலாறு உட்கட்சி பூசல்கள், பா.ஜ.கவின் சாதிய சமன்பாடுகள் என பல தடைகளையும் தாண்டியே வினேஷ் போகத் இப்போது வென்றிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.