முதலில் சீர்திருத்தம்; அதன் பிறகே தேர்தல்: வங்கதேச தலைமை ஆலோசகர் யூனுஸ்

டாக்கா: வங்கதேசத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தேர்தல் நடத்தப்பட்டால் அது தவறாகிவிடும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள முகம்மது யூனுஸ், “நாங்கள் யாரும் நீண்ட காலம் அதிகாரத்தில் இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், சீர்திருத்தங்கள் முக்கியமானவை. தேர்தலை நடத்துங்கள் என்று சொன்னால் நாங்கள் தேர்தலை நடத்த தயார். ஆனால் முதலில் தேர்தலை நடத்துவது தவறு.

வங்கதேசத்தில் பொது நிர்வாகம் என்பது முற்றிலும் சீர்குலைந்துள்ளது. எதேச்சதிகாரம் திரும்புவதைத் தடுக்க விரிவான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. சீர்திருத்தங்கள் என்பது கடந்த காலத்தில் நடந்ததை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு தடுப்பதற்கான அமைப்பை கட்டமைப்பதுதான்.

ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏராளமான அரசியல்வாதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியம். எனவே பத்திரிகையாளர்கள் தங்கள் விருப்பப்படி எழுத வேண்டும். நீங்கள் தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் எழுதாவிட்டால், என்ன நடக்கிறது அல்லது நடக்கவில்லை என்பதை நாங்கள் எப்படி அறிவோம்?” என தெரிவித்துள்ளார்.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக ராணுவ விமானம் மூலம் டாக்காவில் இருந்து புதுடெல்லிக்கு தப்பி வந்தார். தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை அடுத்து அந்நாட்டின் ராணுவத் தளபதி நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதாக அறிவித்தார். இதையடுத்து, இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ராணுவத் தளபதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும், வேறு யாரை நியமித்தாலும் அதனை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் ஆகஸ்ட் 8-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.