ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியுடன் பாஜக ஆட்சி; ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா!

புதுடெல்லி: ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாலை 4.30 மணி நிலவரப்படி 50 தொகுதிகளில் வெற்றியை நெருங்குவதால் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 50 தொகுதிகளை நெருங்குவதால் உமர் அப்துல்லா தலைமையில் அங்கு கூட்டணி அரசு அமைய உள்ளது.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்களில் ஒரு கோடியே 38 லட்சத்து 19 ஆயிரத்து 776 வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக். 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

தேர்தல் முடிவுகள்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, மாலை 4.30 மணி அளவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 22 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 2 தொகுதிகளில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் வகிக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 50 இடங்களை கைப்பற்ற உள்ள நிலையில், தேமாக துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 4.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் இந்தக் கட்சி 42 இடங்களை கைப்பற்றுகிறது. இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தத்தில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இக்கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

முதல்வராகிறார் உமர் அப்துல்லா: இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட முடிவை (சட்டப்பிரிவு 370 நீக்கம்) மக்கள் ஏற்கவில்லை என்பதும் இந்த தேர்தலில் தெளிவாகி இருக்கிறது என குறிப்பிட்டார்.

62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தத்தில் 29 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. மெகபூபா முஃப்தி தலைமையிலான கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

ஜம்மு காஷ்மீரைப் பொருத்தவரை, இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது; முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் இந்துக்கள் என்பதும் இண்டியா கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.