BB Tamil 8 Day 2: `வெடிகுண்டு இல்லடா வெறுங்குண்டு' – உப்பு சப்பில்லாமல் அணைந்த நெருப்பு

ஆண் போட்டியாளர்களை மட்டும் வைத்து ஒரு பிக் பாஸ் சீசன் நடத்தினால் எப்படியிருக்கும்? என்கிற விபரீதமான கற்பனை எனக்குள் ஓடியது. அந்த சீசன் பயங்கரமாக போர் அடித்து இரண்டே நாட்களில் ஊத்தி மூடி விடும் நிலைமை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

தர்ஷிகா

அதே பெண்களை மட்டும் வைத்து ஒரு சீசன் ஆரம்பித்தால்?… நிச்சயம் ஒரு வருடத்திற்கு மேலாக கூட ஓட்டலாம். அப்படியொரு ரணகளமான விஷயங்கள் நடக்கும். ‘பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை’ என்று எழுதியாகி விட்ட பிறகு சொல்ல என்ன இருக்கிறது?

அது இன்பமோ, துன்பமோ.. பெண்கள்தான் ஓரிடத்தை உயிர்ப்புள்ளதாக மாற்றுகிறார்கள் என்பதற்கான உதாரணம், இந்த எபிசோடு.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 2

“ரவியண்ணாவிற்கு உடம்பு சரியில்லையாம்.. ஊர்ல பேசிக்கறாங்க.. 15 வருஷம் கழிச்சு நேத்துதான் ஓடினாராம்” என்று தர்ஷாவிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் தர்ஷிகா. பிறகு ரவீந்தரை பார்க்கச் சென்ற கேப்டன் தர்ஷிகா, “உடம்பைப் பார்த்துக்கோங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்கண்ணா” என்று அவரிடம் பரிவாக சொல்லிக் கொண்டிருந்தார். வெளியில் படுத்துறங்குவதின் மூலம் தனது ‘ஒத்துழையாமைப் போராட்டத்தை’ வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருந்தார் ஜாக்குலின்.

‘கருகரு கருப்பாயி’ என்கிற அட்டகாசமான பாடலோடு நாள் 2 விடிந்தது. (தேவா தேவாதான்…!) ‘ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு. நீதான் எனக்குப் பிரெண்டு’ என்று காமிராவின் வழியாக கவித சொல்லி பிக் பாஸிடம் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார் சுனிதா. (இந்த இம்சைக்கு இல்லையா ஒரு எண்டு?!).

BB8

என்னதான் ஆண்களும் பெண்களும் தனித்தனி வீட்டில் இருக்க வேண்டும் என்கிற மாதிரி பாவ்லா காட்டினாலும் தொடர்ந்து அப்படியாக இந்த சீசனை ஓட்டவே முடியாது என்பது தெரிந்த விஷயம்தான். எதையாவது கோக்குமாக்கு செய்து ஒன்றாகத்தான் விளையாட விடுவார்கள். அப்போதுதானே தேவையான ஃபுட்டேஜ் கிடைக்கும்?! எனவே அதற்கான வேலையை ஆரம்பித்தார் பிக் பாஸ்.

ஆண்கள் அணியிலிருந்து ஒருவரும் பெண்கள் அணியிலிருந்து ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு புகுந்த வீட்டில், அதாவது ‘எதிர் வீட்டில்’ சென்று வாழ வேண்டுமாம். இப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் அணியின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையைப் பெற்றவராக இருக்க வேண்டுமாம். இவருக்கு ஒரு பவர் வழங்கப்படும். ஒருவரை நேரடியாக நாமினேஷன் செய்யும் சக்தி இவருக்குக் கிடைக்கும்.

கண்ணீரும் கம்பலையுமாக சண்டை போட்ட பெண்கள் அணி

இது போதாதா? அடுத்த குடுமிப்பிடிச் சண்டை நடப்பதற்கு? நோ.. நோ… இரண்டு அணியிலும் இதற்கான வாக்குவாதமும் சண்டையும் நடக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. ஆண்கள் அணியில் எந்தவொரு சச்சரவும் இல்லாமல் முத்துக்குமரனை ஜாலியாகத் தோ்ந்தெடுத்து விட்டார்கள். ஆகவே இந்த போர்ஷன் வேஸ்ட். ஒன்றும் வேலைக்கு ஆகாது.

பெண்கள் அணியில்தான் பயங்கரமான களேபரமும் கண்ணீர்க் காவியங்களும் நடந்தேறின. “நான்தான் பெண்கள் அணியோடு அதிகம் சேராமல் வெளியில் படுத்திருக்கேன். என்னை அனுப்பினா, அவங்களுக்கு சந்தேகம் வராது. இந்த ஆப்ரேஷனுக்கு தகுதியான ஆள் நான்தான்” என்று தனது கார்டை வலுவாக இறக்கினார் ஜாக்குலின். ‘நான் இந்த கேமை இன்ஸ்ரஸ்டிங்கா ஆடறேன். அதனாலதான் நாமினேட் ஆகியிருக்கேன்’ என்கிற தற்பெருமை வேறு.

தர்ஷிகா –

‘அதெல்லாம் செல்லாது.. செல்லாது.. உன்னையெல்லாம் நம்ப முடியாது’ என்று சுனிதா சொல்லி விட குண்டூசி பட்ட பலூன் போல ஜாக்குலினின் உற்சாகம் உடனே இறங்கியது. “நான் ஒரு சிறந்த ஸ்லீப்பர் செல்லா இருப்பேன்” என்று எதிரி நாட்டுக்கு உளவு பார்க்கச் செல்வது போல ஒரு பிட்டைப் போட்டுப் பார்த்தார் பவித்ரா. எனவே காற்று அவர் பக்கம் சற்று வீசியது. ‘ஒருவேளை பவித்ரா கேப்டனோட பிரெண்டுன்றதால இந்த வாய்ப்பு கிடைக்குதோ?” என்று அதற்கு செக் பாயிண்ட் வைத்தார் தர்ஷா. எனவே பவித்ராவிற்கான வாய்ப்பு நழுவ ஆரம்பித்தது.

ஆண்கள் அணிக்குச் செல்ல தேர்வான பவித்ரா

இப்படி ஆளாளுக்கு பேசியதில் சிறிது நேரத்திலேயே சண்டை மூள ஆரம்பித்தது. ‘அங்க போறவங்க பாவமா மூஞ்சை வெச்சுக்கணும்’ என்று ஒருவர் ஐடியா கொடுக்க, “அப்படில்லாம் பாவமா நடிக்கத் தேவையில்லை” என்று ஜாக்குலின் இதை ஆட்சேபிக்க, பவித்ராவிற்கும் ஜாக்குலினுக்கும் இடையே முட்டிக் கொண்டது. இடையில் சுனிதாவுடன் வேறு மல்லுக்கட்டினார் ஜாக்குலின். கோபம் வந்து கண்ணீர் சிந்தியபடி பாத்ரூம் நோக்கி ஓடினார் பவித்ரா. சிறிது நேரத்தில் ஜாக்குலினும் கண்ணீர் சிந்தியபடி இன்னொரு பாத்ரூமிற்கு ஓட அவரை வழியில் தடுத்து நிறுத்திய ஜெஃப்ரி கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்க முயன்றார்.

ஜாக்குலின் – சுனிதா

வாக்கெடுப்பு நடத்தியதில் தர்ஷாவிற்கும் பவித்ராவிற்கும் இடையில் சமமான வாக்குகள் வந்தன. இரண்டு பேரும் அமர்ந்து பேசியதில் “அவங்களுக்கு சந்தேகம் வராம நடந்துக்கணும். பெண்கள் அணிக்கு துரோகம் செய்யக்கூடாது. இப்படி பல சூட்சுமங்கள் இருக்கு” என்று பவித்ரா விவரித்துக் கொண்டே போக ‘யம்மா.. தாயி.. நீயே போயிட்டு வா. இன்னொரு முறை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத’ என்று தர்ஷா விட்டுக் கொடுத்து விட்டார். ஆக ஆண்கள் அணிக்குச் செல்வதற்காக அழுது புரண்டு தேர்வானவர் பவித்ரா.

கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள் அணியில் இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்க, ஆண்கள் அணியில் என்ன நடந்தது தெரியுமா? ‘வசீகரா’ பாடலைப் பாடிய படி ஜாலியாக சறுக்கி சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். (புவர் ஃபெல்லோஸ்!).

உப்புப் பெறாத விஷயத்திற்கும் வாக்குவாதம்

கிச்சன் ஏரியாவின் அதிகாரம் எந்த அணிக்கு கிடைக்கும் என்பதற்கான விடை கிடைத்தது. இரண்டு அணியும் தனித்தனியாக சமையல் செய்து கொள்ள வேண்டுமாம். இதற்காக ஒவவொரு அணிக்கும் தலா ரூ.13,500 மதிப்புள்ள சமையல் பொருட்களை ஷாப்பிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார் பிக் பாஸ். ஒவ்வொரு அணியில் இருந்தும் மூன்று நபர்கள் ஷாப்பிங் செல்லலாம். தரப்பட்டிருக்கும் மதிப்பிற்கு மேல் பொருட்களை எடுத்தால், அதிகமான தொகையின் சதவீதத்திற்கு ஏற்ப பொருட்களை இழக்க வேண்டியிருக்கும் என்று முன்பே எச்சரித்திருந்தார் பிக் பாஸ்.

bb8

இரண்டு அணியிலிருந்தும் மூன்று நபர்கள் சென்று ‘பருப்பு எடு… மிளகா எடு’ என்று பரபரப்பாக பொருட்களை அள்ளினாலும், அதிக மதிப்பில் எடுத்தால் அபராதம் என்கிற பயத்தின் காரணத்தாலும் குறுகிய அவகாசமே இருந்ததாலும் பட்ஜெட்டில் சொதப்பினார்கள். ஆண்கள் அணி ரூ.5490 மதிப்பிற்கும் பெண்கள் அணி ரூ.6010 மதிப்பிற்கும் மட்டுமே பொருட்களை எடுத்தார்கள். இதில் ஆண்கள் அணி கடைசி நேரத்தில் ‘அடடா… உப்பு எடுக்க மறந்துட்டமே?’ என்று பதறினார்கள்.

சாமர்த்தியமாக இரண்டே இரண்டு உப்பு பாக்கெட்டுகளை மட்டும் மார்க்கெட்டில் வைத்திருந்தார் பிக் பாஸ். பெண்கள் அணி அதை எடுத்துக் கொண்டதால் ஆண்கள் அணி உப்பை இழந்தது. (ஆக உப்பை வைத்து அரசியல் செய்யும் வெள்ளைக்காரனின் பழக்கம் இன்னமும் தொடர்கிறது),

‘எங்க ஏரியா.. உள்ள வராத’ – இரண்டு அணிகளும் போட்ட ரூல்ஸ்

இரண்டு அணிகளும் தங்களின் வீட்டிற்கான விதிமுறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். முதலில் பெண்கள் அணி. “எங்களின் அனுமதியில்லாமல் ஆண்கள் அணியிலிருந்து எவரும் எங்கள் பகுதிக்கு வரக்கூடாது. விளையாட்டாக யாராவது வந்து விட்டால் நாங்கள் சொல்லும் வரை இங்கிருந்து போகக்கூடாது” என்றெல்லாம் விதிமுறைகள் போட்ட பெண்கள் அணி சாமர்த்தியமான அயிட்டம் ஒன்றையும் கூடவே சேர்த்திருந்தது.

ஆண்கள் அணி கன்ஃபெஷன் ரூமிற்கு வர அனுமதி வேண்டுமென்றால் ‘ஒரு வாரத்திற்கு அவர்களை நாமினேட் செய்யக்கூடாது’ என்று முதல் நாளில் போட்ட டீலை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் இதில் இருந்த மாஸ்டர் ஸ்ட்ரோக்.

bb8

பதிலுக்கு ஆண்கள் அணியும் இதே மாதிரியான விதிமுறைகளை ஏற்படுத்தியிருந்தார்கள் “அனுமதியில்லாமல் எங்கள் பகுதிக்கு வரக்கூடாது. சமையல் பொருட்களை எடுக்க வேண்டுமென்றால் அதற்கென்று உள்ள பொறுப்பாளர்களிடம் அனுமதி பெற வேண்டும். தண்ணீருக்கு ரவீந்தர் பொறுப்பு. எந்தவித தண்ணீர் பயன்பாட்டிற்கும் அவரிடம் அனுமதி பெற்றால்தான் தண்ணீர் கிடைக்கும். ரவீந்தருக்கு தேவைப்பட்டால் பெண்கள் வீட்டில் வந்து அமரலாம்” என்றெல்லாம் கோக்குமாக்கான விதிகள் இருந்தன.

“நான் இந்த வீட்டோட கேப்டன்.. நானுமா அனுமதி வாங்கணும்.. நல்ல கதையா இருக்கே.. ?” என்று தர்ஷிகா ஆட்சேபம் தெரிவிக்க “உங்களை நாமினேட் செய்ய முடியாம போச்சுல்ல. அதான் உங்க ஃபெனிபிட். மத்தபடி இந்த ரூல்ஸ் உங்களுக்கும்தான்’ என்று ஆட்சேபித்தார் ரவீந்தர். இந்தப் பஞ்சாயத்து பிக் பாஸிடம் சென்றது.

தாரளமாகத் தண்ணீர் தந்த ரவீந்தர்

‘ஒவ்வொண்ணுக்கும் என் கிட்ட வராதீங்க’ என்கிற சலிப்பான குரலில் இதற்கான தீர்வைச் சொன்ன பிக் பாஸ் “வீட்ல ரெண்டு அணி இருந்தாலும் ரெண்டுத்துக்குமே நீங்கதான் கேப்டன். எனவே பாரபட்சம் இல்லாம நடந்துக்கங்க.. உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்க எடுத்துக்கலாம். இது கேப்டனுக்கு மட்டுமேயான சிறப்பு அனுமதி” என்று தெளிவுப்படுத்திய பிக் பாஸ், “இருமல் வந்தா கூட தண்ணி தராம போறதுக்கு அவங்க என்ன மனிதாபிமானம் இல்லாதவங்களா?’ என்று போகிற போக்கில் ஆண்கள் அணியை லெஃப் சைடில் இடித்து விட்டுப் போனார்.

அடிப்படைத் தேவையான தண்ணீரை வைத்து விளையாடினால் தனது இமேஜ் டேமேஜ் ஆகும் என்று பயந்தாரோ, என்னமோ, “ஓகே.. அஞ்சு நிமிஷம் டைம் தரேன். பெண்கள் வந்து தேவையான தண்ணீரைப் பிடிச்சுக்கங்க” என்று கார்ப்பரேஷன் லாரி டிரைவர் மாதிரி ரவீந்தர் அனுமதி தர, பித்தளை குண்டா, அலுமினிய டபரா என்று கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கிக் கொண்டு தண்ணீர் பிடிக்கும் ஏரியாவிற்கு பெண்கள் அணி விரைந்தது.

bb8

“சமைக்கறதுக்கு எந்தப் பொருளை எடுக்கணும்னாலும் அவங்க அனுமதி தேவைப்படுது. என்ன பண்றது?” என்று பெண்கள் அணி குழம்ப “நம்ம கிட்டத்தான் உப்பு இருக்கே. அனுமதி தந்தா பதிலுக்கு உப்பு தருவோம்’ன்னு டீல் பேசுவோம்’ என்று பவித்ரா ஐடியா தர ‘செல்லம்.. அறிவு’ என்று அவருடைய அறிவுத்திறனை பெண்கள் வியந்தார்கள்.

‘கொஞ்ஞூண்டு உப்பு தர்றீங்களா?” என்று ஜெஃப்ரி வந்து கேட்க, ‘தர மாட்டோம்’ என்று முதலில் முரண்டு பிடித்த பெண்கள் அணி, “அப்படின்னா.. சமையல் பொருட்கள் எல்லாத்தையும் கொண்டு போய் பூட்டுடா’ என்று ரவீந்தர் உத்தரவு போட்டவுடன் “சரி.. சரி.. தரோம்” என்று இறங்கி வந்தார்கள். இந்த பண்ட மாற்றத்திற்கு ‘உப்பு சத்தியாகிரகப் போராட்டம்’ என்கிற பெயரை சொல்லி சுதந்திரப் போராட்டத்தின் அடையாளத்தை வேறு அசிங்கப்படுத்தினார்கள். “ஆண்கள் டீம் இப்படியே எல்லா விஷயத்திலும் மொக்கையானா எப்படி.. சரியில்லையே?” என்று தீபக் கவலைப்பட “ஏற்கெனவே நாம அப்படித்தான் இருக்கோம்” என்கிற உண்மையை வெள்ளந்தியாக போட்டு உடைத்தார் அர்னவ்.

டாம் அண்ட் ஜெர்ரியாக மாறியிருக்கும் முத்துக்குமரன் – ஜாக்குலின்

ஜாக்குலினுக்கும் முத்துக்குமரனுக்கும் இடையில் ஏதாவது ஒன்றில் முட்டிக் கொண்டு வாக்குவாதம் வந்து விடுகிறது. “ஆக்சுவலி.. நான் ஏன் அப்படிச் சொன்னேன்னா..’ என்று ஜாக்குலின் ஒரு மணி நேரத்திற்கு விளக்கம் தர ‘அது எப்படி சரியாகும்?’ என்று ஒரே வரியில் இதை மறுத்து விடுகிறார் முத்துக்குமரன். இவர்கள் இதே மாதிரியாக ஒரு பஞ்சாயத்து பற்றி தீவிரமாகப் பேசிக் செய்து கொண்டிருக்க, இடையில் புகுந்த ஜெஃப்ரி, ‘தோசை ரெடி’ என்று ஜாக்குலினிடம் சொன்னார்.

ஜாக்குலின் – முத்துக்குமார்

இதனால் சற்று டென்ஷன் ஆன முத்துக்குமரன் ‘நாங்க பேசிட்டிருக்கம்ல’ என்று ஆட்சேபிக்க ‘ஆமாம்.. இவரு இஸ்ரேல் அதிபரு. அவங்க ஈரான் அதிபரு.. போரை எப்படி நிறுத்தலாம்ன்னு பேசறாங்க’ என்பது போல் பதிலுக்கு ஜெஃப்ரியும் அதிருப்தியடைந்தார். ‘சாப்பிடத்தானே கூப்பிட்டேன்?’ என்பது ஜெஃப்ரியின் ஆதங்கம். “அவன் என் தம்பி.. அதுவும் என்னைத்தானே கூப்பிட்டான்?’ என்று ஜெஃப்ரிக்கு ஆதரவு தந்தார் ஜாக்குலின். (இதே ஜாக்குலின்தான், முத்துக்குமரன் தன்னை ‘அக்கா’ என்று கூப்பிட்ட போது ஆட்சேபித்தவர்!).

டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி ஜாக்குலினை சீண்ட முத்துக்குமரன் முடிவு செய்து விட்டார் போல. அவர் பெண்கள் அணி வீட்டில் இருப்பதால் “ஜாக்குலினுக்கு ஆதரவு தந்து நானும் ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்துக்கலாம்ன்னு இருக்கேன். என்னண்ணே சொல்றீங்க?” என்று ரவீந்தரைப் பார்த்து கண்ணடிக்க “நீ நடத்து ராஜா” என்று சிரித்தார் ரவீந்தர். “அவங்க இந்தப் பக்கம் வரதுக்கு அனுமதி கேட்டா.. உடனே கொடுத்துடறதா.. நாம என்ன செக்யூரிட்டி கார்டா?” என்று இன்னொரு பக்கம் ஜாலியாக டென்ஷன் ஆகிக் கொண்டிருந்தார் தீபக்.

bb8

பரஸ்பர பழிவாங்கல் என்கிற அடிப்படையில் அல்லாமல், சுவாரசியமான விதிமுறைகளை ஏற்படுத்தி, அதை இன்னமும் சுவாரசியமாக செயல்படுத்தினால் நமக்கும் பார்க்க நன்றாக இருக்கும். மாறாக ‘உப்பு’ பெறாத விஷயத்திற்கு கூட இவர்கள் குடுமிப்பிடிச் சண்டை போடுவதால் இன்றைய எபிசோடில் சூடும் இல்லை. சுவையும் இல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.