Rohit Sharma: ரோஹித் சர்மாவின் ஓய்வு எப்போது? வெளியானது முக்கிய தகவல்!

Rohit Sharma Retirement: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது. தோனிக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை வென்றது இந்திய அணி. இந்த வெற்றிக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி வரை ரோஹித் சர்மா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடுவார் என்று அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி பைனலில் தோல்வியடைந்தது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதி போட்டிக்கு சென்றது இந்தியா, இருப்பினும் பைனலில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரோஹிர் சர்மாவின் குழந்தை பருவ பயிற்சியாளர், ரோஹித்தின் எதிர்காலம் குறித்த அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

“2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரின் வயதை காரணமாக வைத்து டெஸ்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறலாம். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் மட்டும் முழு கவனத்தை செலுத்துவார். அவருக்கான இடம் அணியில் நிரந்தரமாக உள்ளது. 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா நிச்சயம் விளையாடுவார் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரோஹித் சர்மா, டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஏன் ஓய்வை அறிவித்தேன் என்று பகிர்ந்து கொண்டார். “நான் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு ஒரே காரணம் மற்ற பார்மெட்டில் கவனம் செலுத்த தான்.

நான் 17 வருடமாக இந்த பார்மெட்டில் விளையாடி வருகிறேன். உலகக் கோப்பையை வென்ற போது ஓய்வை அறிவிக்க இது தான் சரியான நேரம் என்று தோன்றியது. இளைஞர்களுக்கு வழி விட வேண்டிய நேரம் இது.  இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படக்கூடிய பல நல்ல வீரர்கள் உள்ளனர். உங்கள் உடலை நீண்ட நாட்கள் இளமையாக வைத்திருக்க முடியாது. ஆனால் உங்கள் மனதை வைத்து கொள்ள முடியும். என் மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்று எனக்குத் தெரியும், எனக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது” என்று ரோஹித் கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை 2-0 என்று கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.