முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் பதுக்கிய ஆயுதங்களை தேடும் இலங்கை ராணுவம்

ராமேசுவரம்: இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியுடன் அந்நாட்டு ராணுவத்தினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக 2009-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின்னரும் தமிழ் போராளிகள் புதைத்து வைத்த ஆயுதக் குவியல்கள்களை அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தேடி அழித்து வருகிறது. தமிழகத்திலும் இலங்கை தமிழ் போராளிக் குழுக்கள் விட்டுச் சென்ற ஆயுதக் குவியல் முதன்முறையாக கடந்த 28.08.2014 அன்று சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள பச்சமலை காப்புக்காட்டில் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து தங்கச்சிமடத்தில் 25.06.2018 அன்று ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்திலும் கிணறு தோண்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது ஆயுதக் குவியல் ஒன்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், இலங்கையிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அகழ்வுப் பணிகளுக்கு கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதி கோரப்பட்டிருந்தது.

நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில், ராணுவத்தினர், போலீஸார், சிறப்பு அதிரடிப் படையினர், கிராம அலுவலர், தொல்லியல் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உதவியுடன் அகழ்வுப் பணிகள் செவ்வாய்கிழமை துவங்கியது. புதன்கிழமையான இன்றும் இரண்டாவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்ந்த நிலையில், அப்பகுதியில் எவ்விதமான ஆயுதங்களும் கண்டறியப்படவில்லை. இதனால் இன்று மாலை பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மூன்றாவது நாளாக நாளையும் அகழ்வுப் பணிகள் தொடர உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.