டெலிவரிமேன் தொழிற்சங்கம் அக்.26-ல் வேலை நிறுத்தம்: சிலிண்டர் விநியோகம் முடங்கும் அபாயம்

மதுரை: அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் அக்டோபர் 26-ம் தேதி வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கியாஸ் சிலிண்டர் விநியோகம் முடங்கும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு முழுவதுமுள்ள இந்தியன், எச்பி, பாரத் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களின் கீழ் சிலிண்டர்களில் டெலிவரி செய்யும் டெலிவரிமென், மெக்கானிக், ஓட்டுநர்கள், குடோன் கீப்பர், சிலிண்டர் லோடுமேன்கள், அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களுக்கும் சட்டப்படி நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாகவும், அகவிலைப்படி முறையாக தொடர்ந்து உயர்த்தி வழங்க வேண்டும், சட்டப்படி வழங்கவேண்டிய தீபாவளி போனஸ் ரூ.12 ஆயிரமாக வழங்கவேண்டும், ஒருநாள் சம்பளத்துடன் வார விடுமுறை வழங்கவேண்டும், அரசு விடுமுறை நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கவேண்டும், ஆண்டுக்கு 15 நாள் சம்பளத்துடன் கூடிய ஆண்டு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 26-ம் தேதி தமிழக அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் தமிழக முழுவதிலும் இருந்து 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க இருப்பதாக மாநில தலைவர் சிவக்குமார், துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

மதுரையில் இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: “எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்கள் ஏஜென்சியின் கீழ் சிலிண்டர்கள் டெலிவரி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். இந்த ஏஜென்சிகள் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில்லை. இது தொடர்பாக எல்பிஜி நிறுவனத்திடம் கேட்டால் ஏஜென்சியிடம் கேளுங்கள் என கூறுகின்றனர். ஆனால் ஏஜென்சிகள் சில தொழிலாளர்களை மட்டும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் என அடையாளம் காட்டி ஊதியம் வழங்குகின்றனர்.

ஏராளமான தொழிலாளர்களை வெறும் சீருடைகளை மட்டும் வழங்கிவிட்டு ஊதியம் வழங்காமல் ஏமாற்றுவதால் தொழிலாளர்களின் உழைப்பு வீணாகிறது. இது தொடர்பாக ஏஜென்சிகளிடம் கூறினால் பணிக்கு வர வேண்டாம் என கூறி மிரட்டுகின்றனர். இதன் காரணமாக தொழிலாளர்களின் நலன்கருதி ஏற்கனவே சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி அக். 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதிலும் முடிவு கிடைக்காவிடில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவோம்” என தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.