Sangitha: "சினிமாவிலிருந்து விலகக் காரணம் இதுதான்.." – நடிகை 'பூவே உனக்காக' சங்கீதாவின் பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம் நடிகை ‘பூவே உனக்காக’ சங்கீதா.

‘பூவே உனக்காக’ சங்கீதா

“எனக்கு இஷ்டமில்லாத எந்தவொரு விஷயத்தையும் நான் பண்ண மாட்டேன். குறிப்பா, கிளாமரா நடிக்கணும்ங்கிற கண்டிஷனுக்காகவே நான் ‘நோ’ சொன்ன படங்கள் அதிகம். நிறைய படங்கள்ல நடிக்கணும்ங்கிறதைவிடவும், எனக்குப் பிடிச்ச படங்கள்ல நடிக்கணும்ங்கிறதுல எப்பவுமே உறுதியா இருப்பேன்!” – இப்படியொரு போல்டான ஸ்டேட்மென்ட்டைக் கொடுத்தது வேற யாருமில்லைங்க… ‘பூவே உனக்காக’ சங்கீதாதான்(!)

‘பூவே உனக்காக’ படத்துல வர்ற ‘லால லல்ல லல்லா…’னு ஒலிக்கிற இந்த மியூசிக்கைக் கேட்கிறப்போல்லாம், எல்லாருக்கும் முதல்ல நியாபகத்துக்கு வர்றது சங்கீதாதானே(!) இருக்காதா பின்ன… ‘ஹோம்லி கேரக்டர்ல நடிக்க ஹீரோயின் வேணும்… கூப்பிடுங்க சங்கீதாவை’ அப்படினு சினிமாத்துறையில வலியுறுத்தி சொல்ற அளவுக்கு, 1990-கள்ல முன்னணி ஹீரோயினா இருந்தவங்கதான் நடிகை சங்கீதா.

1980-கள்ல நடிகை நதியா தனக்குன்னு ஒரு ஹோம்லி ரூட்டை செட் பண்ணி, பக்காவா ஸ்கோர் பண்ண மாதிரி, 1990-கள்ல அதே ஹோம்லி ரூட்டை பல தமிழ்த் திரைப்படங்கள்ல நடிச்சு ரசிகர்களோட இதயத்தைக் கொள்ளை கொண்டாங்க சங்கீதா. வெறும் அஞ்சு வருஷங்கள் மட்டுமே ஹீரோயினா இவங்க நடிச்சிருந்தாலும், அந்தக் குறுகிய காலத்துலயே சினிமால தனக்கான இடத்தை அழுத்தமா பதிவு செஞ்சாங்க. குறிப்பா, நடிகர் விஜய்க்கு முதல்முதலா பெரிய பிரேக் கொடுத்த ‘பூவே உனக்காக’ படத்துல இவங்க ஹீரோயினா நடிச்சு, தன் பெர்ஃபார்மன்ஸால பட்டையைக் கிளப்பினதால, ‘பூவே உனக்காக’ சங்கீதாவா மக்கள் மனசுல நிலையான இடம் பிடிச்ச இவங்களோட சுவாரஸ்யமான சினிமா பயணத்தைதான் இந்த நேர்காணல்ல பாக்கப் போறோம்.

‘பூவே உனக்காக’ சங்கீதா

சங்கீதா கேரளாவைச் சேர்ந்தவங்க. ஆனா, இவங்க வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். தன் அஞ்சு வயசுல மலையாள சினிமால குழந்தை நட்சத்திரமா அறிமுகமான சங்கீதா, அடுத்தடுத்து நிறைய மலையாளப் படங்கள்ல சைல்டு ஆர்டிஸ்ட்டா நடிச்சாங்க. ஆனா, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில 1989-ம் வருஷம் பாக்யராஜ், மீனாட்சி சேஷாத்ரி நடிப்புல வெளிவந்த ‘என் ரத்தத்தின் ரத்தமே’ படத்துல குழந்தை நட்சத்திரமா நடிச்சு, கோலிவுட்ல அறிமுகமானாங்க. ‘இதயவாசல்’, ‘தாலாட்டு’, ‘கேப்டன் மகள்’, ‘மகாநதி’ உட்பட பல படங்கள்ல டீன் ஏஜ் பெண்ணா கேரக்டர் ரோல்கள்ல நடிச்சாங்க.

‘சின்ன பிள்ளையா பார்த்தது… ஆத்தி… இப்போ பெரிய மனுஷியா நெடுநெடுனு வளர்ந்துட்டாலே’னு கிராமங்கள்ல ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிற டீன் ஏஜ் பெண்களைப் பார்த்து சொல்ற மாதிரியே, ‘எல்லாமே என் ராசாதான்’ படத்துல சங்கீதாவைப் பார்த்த தமிழ் மக்களும் ஆச்சர்ய பார்வையோடு சிலாகிச்சாங்க. ஏன்னா, அதுவரைக்கும் குழந்தையாவும், சின்னச் சின்ன கேரக்டர்கள்லயும் சங்கீதாவைப் பார்த்த ரசிகர்கள், 1995-ல் வெளியான அந்தப் படத்துல நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியா, ‘அழகான மஞ்சப்புறா… அதன் கூட மாடப்புறா’னு காதலும் தாய்மையும் ஒருசேர பாடி அசத்திய சங்கீதாவின் நடிப்புத் திறனையும் அழகையும் பார்த்துச் சொக்கிப்போனாங்க.

அந்தப் படம் உருவான நேரத்துல, ‘பார்க்க பச்சப் புள்ள மாதிரி இருக்கே; இந்த பவர்ஃபுல் கேரக்டரை எப்படி ஹேண்டில் பண்ணுவாங்க?’ அப்படிங்கிற பேச்சு வந்திருக்கு. ஆனா, இதுக்கெல்லாம் தன் மெச்சூர்டான நடிப்பு மற்றும் பாந்தமான லுக்குன்னு ‘ராணி’ங்கிற அந்தக் கதாபாத்திரத்துல ரொம்பவே பொருந்திப்போய், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினாங்க. அந்தப் படம் சூப்பர் ஹிட். அதன்பிறகு, பார்த்திபன் நடிப்புல வெளியான ‘புள்ளகுட்டிக்காரன்’ படத்துல நடிச்ச சங்கீதா, ‘சீதனம்’ படத்துல ‘வந்தாலப்பா வந்தாலப்பா’ அப்படினு பிரபுவுக்கு ஜோடியா டூயட் பாடினாங்க.

‘பூவே உனக்காக’ சங்கீதா

இப்படிச் சில தமிழ்ப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சிருந்தாலும், விக்ரமன் டைரக்‌ஷன்ல வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ‘பூவே உனக்காக’ திரைப்படத்துல இவங்க நடிச்ச நிர்மலா மேரி கதாபாத்திரம்தான் சங்கீதாவைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்துச்சு. விதவிதமா சுடிதார், டிசைன் டிசைனா புடவை, க்யூட் ஹேர் ஸ்டைல்னு அப்போதைய இளம் பெண்களோட ஸ்டைல் ஐகானா இவங்க மாறினாங்க.

குறிப்பா, இந்தப் படத்துல தன் கணவர்னு சொல்லி நடிகர் விஜய்யை வம்பிழுத்து கலாய்க்கிறதாகட்டும், ‘துள்ளுவதோ இளமை’னு குறும்புகள் பண்றதாகட்டும், சங்கீதாவின் நடிப்பும் ரியாக்‌ஷன்களும் ரொம்பவே ரசிக்கும்படியா இருக்கும். அந்தப் படத்துல, விஜய்யுடன் இவங்க டூயட் ஆடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடல், அப்போதைய இளைஞர்களின் இதயத்துக்கு நெருக்கமான காதல் பாடலா அமைஞ்சது.

இந்தப் படத்தைப் பத்தி ரசிகர்கள் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னன்னா, ‘பூவே உனக்காக’ படத்தோட கிளைமாக்ஸ் ரெண்டு விதமா எடுக்கப்பட்டிருக்கு. அதாவது விஜய்யும் சங்கீதாவும் கிளைமாக்ஸ்ல ஜோடி சேர்ற மாதிரியும், படத்துல இடம்பெற்றதுபோல விஜய் தன் காதலியின் நினைவுகளோடு விடைபெறுவதுபோலவும் ஷூட் பண்ணியிருக்காங்க. விஜய்யும் சங்கீதாவும் ஜோடி சேராம போனாலும், அந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினாங்க.

‘பூவே உனக்காக’ பட வாய்ப்பு வந்த அதே நேரத்துலதான் ‘காதல் கோட்டை’ திரைப்படத்துல நாயகியா நடிக்கிற வாய்ப்பும் சங்கீதாவுக்கு வந்திருக்கு. கால்ஷீட் பிரச்னையால, அஜித்துடன் ஜோடி சேரும் வாய்ப்பை மிஸ் பண்ண இவங்க, அந்தப் படத்தோட கன்னட ரீமேக்கான ‘யாரே நீனு செலுவே’ங்கிற படத்துல அதே ‘கமலி’ங்கற கேரக்டர்ல நடிச்சு பிரமாதப்படுத்தினாங்க.

‘பூவே உனக்காக’ சங்கீதா

‘பூவே உனக்காக’ வெற்றிக்கு அப்புறமா, ‘கங்கா கெளரி’, ‘பொங்கலோ பொங்கல்’னு அடுத்தடுத்து நிறைய ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள்ல நடிச்ச சங்கீதா, கோலிவுட்டின் பிஸியான ஆர்டிஸ்ட்டா மாறினாங்க. ஹீரோயினா கலக்கிட்டிருந்த அந்த நேரத்துலயே, ‘வள்ளல்’ திரைப்படத்துல சத்யராஜோட செல்ல மகளா கொஞ்சம் நெகட்டிவ்வான ரோல்லயும் ஸ்கோர் பண்ணாங்க. ஏதோ ரெண்டு பாட்டு, ஒரு சீன்ல வந்து போனோம்னு இல்லாம, தன் நடிப்புத் திறமைக்குத் தீனி போடுற மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்ச சங்கீதாவுக்குப் பெரும் புகழை வாங்கிக் கொடுத்துச்சு, 1998-ம் வருஷம் வெளிவந்த ‘சிந்தவிஷ்டாய சியாமளா’ அப்படிங்கற மலையாளப் படம். பிரபல மலையாள நடிகர் சீனிவாசன், எழுதி, இயக்கி, நடிச்ச இந்தப் படத்துல நாயகியா நடிக்க இவரை சிபாரிசு பண்ணது நடிகர் மோகன்லால்.

பொறுப்பில்லாத கணவர் மற்றும் ரெண்டு குழந்தைகளோடு போராடுற சியாமளா அப்படிங்கற பெண்ணா… தன் உணர்வுபூர்வமான நடிப்பை இந்தப் படத்துல அவ்வளவு சிறப்பா கொடுத்திருப்பாங்க. மலையாள சினிமாவோட சிறந்த பெண் கதாபாத்திரங்கள்ல ஒண்ணா இன்னைக்கும் இந்தப் பாத்திரம் திகழுது. அதுமட்டுமில்லாம கேரளா அரசின் சிறந்த நடிகைக்கான மாநில விருதும் இந்தப் படத்துக்காக சங்கீதாவுக்குக் கிடைச்சது. தொடர்ந்து மலையாளப் படங்கள் பலவற்றுலயும் சங்கீதா நடிச்சாங்க. அதேசமயம், 1990-களின் இறுதியில இவங்க நடிச்ச தமிழ்ப் படங்கள் பெரிசா வெற்றி பெறலை. இந்த நிலையிலதான், 2000-ம் வருஷம் தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் சரவணனை இவங்க காதல் திருமணம் செஞ்சுக்கிட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துச்சு.

‘பூவே உனக்காக’ சங்கீதா

சங்கீதாவின் கணவர் சரவணன், ‘பூவே உனக்காக’ திரைப்படத்துல கேமராமேனா வேலை செஞ்சவர்னு பலருக்கும் தெரியாது. இவங்களோடது லவ் மேரேஜ்தான். ‘பூவே உனக்காக’ படம் வெளியான நேரத்துலதான் நடிகர் விஜய், தன் மனைவி சங்கீதாவை திருமணம் செய்யவிருந்தாரு. அதனால நடிகை சங்கீதாவுக்குத் திருமணம்னு நியூஸ் வந்ததும், ‘பூவே உனக்காக’ சங்கீதாவைத்தான் விஜய் திருமணம் செஞ்சுக்கப் போறார்னு ரூமர்ஸ் பரவ ஆரம்பிச்சது. ஆனா, ஒளிப்பதிவாளர் சரவணனும் நடிகை சங்கீதாவும்தான் திருமணம் செஞ்சுக்கப் போறாங்கங்கிற விஷயம் ஏற்கனவே நடிகர் விஜய்க்குத் தெரியும் அப்படிங்கறதால, நடிகர் விஜய் அந்த வதந்திகளைப் பெரிசா எடுத்துக்கலை. சங்கீதாவின் காதல் கல்யாணத்துல சுவாரஸ்யங்கள் இல்லாம இருக்குமான்னு பலரும் கேட்கலாம். இதுக்கு சங்கீதாவே ஒருமுறை பதில் சொல்லியிருக்காங்க.

“நானும் சரவணனும் ‘ஐ லவ் யூ’ன்னு புரப்போஸ் செய்தெல்லாம் எங்க காதலை வெளிப்படுத்தலை. ‘பூவே உனக்காக’ படத்துல வேலை செஞ்சதுக்கு அப்புறமா ரெண்டு பேருக்கும் இடையில ஒரு எமோஷனல் கனெக்ட் டெவலப்பாக ஆரம்பிச்சது. ரெண்டு பேருமே ஒருத்தர் மீது இன்னொருத்தர் வெச்சிருந்த காதலை உணர ஆரம்பிச்சோம். அதுக்கப்புறமா திருமணமும் செஞ்சுக்கிட்டோம். வார்த்தைகளைக்காட்டிலும் ரெண்டு மனசும் ஒன்றிப்போறதுதானே காதல்!” அப்படின்னு தன் காதல் கதையை வெட்கமும் நெகிழ்ச்சியுமா பேசியிருந்தாங்க சங்கீதா.

‘பூவே உனக்காக’ சங்கீதா – சரவணன்

சங்கீதா திருமணம் செஞ்சுக்கிட்டப்போ அவங்களுக்கு 22 வயசுதான் ஆகியிருந்தது. அதுமட்டுமில்லாம, அந்த நேரத்துல அவங்க தமிழ், கன்னடம், மலையாளம்னு மூணு மொழிகளிலும் பிஸியான நடிகையாவும் இருந்தாங்க. ஆனா, இது எதைப் பத்தியும் யோசிக்காம, திருமணத்துக்கு அப்புறமா டக்குன்னு சினிமாவை விட்டு விலகினாங்க சங்கீதா. இவங்களுக்கு மகள் பிறந்ததும், குடும்பம், குழந்தை வளர்ப்புன்னு பர்சனல் லைஃப்ல ரொம்பவே பிஸியானங்க. இதுக்கிடையில இவங்களோட கணவர் சரவணன், நடிகர் சிம்புவை நாயகனா வெச்சு ‘சிலம்பாட்டம்’ படத்தை டைரக்ட் பண்ணார். அந்த நேரத்துல தன் கணவரோட சினிமா வேலைகளுக்கும் இவங்க சப்போர்ட்டிவ்வா இருந்திருக்காங்க.

தொடர்ந்து பல வருஷமா சங்கீதா நடிக்காட்டியும், ‘பூவே உனக்காக’ உட்பட சங்கீதா நடிச்ச திரைப்படங்கள் டிவியில ஒளிபரப்பாகும்போதெல்லாம், ‘இவங்க எங்க போனாங்க… என்ன பண்றாங்க?’னு ரசிகர்கள் கேட்கத் தவறலை. அதுக்கெல்லாம் பதில் சொல்ற வகையில, 2014-ம் வருஷம், நடிகர் ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து ‘நகரவாரிதி நடுவில் ஞான்’ அப்படிங்கற மலையாள சினிமால கம்பேக் கொடுத்தாங்க சங்கீதா. அதுக்கப்புறமா இவங்க தொடர்ந்து நடிப்பாங்கன்னு ரசிகர்கள் நினைச்ச நிலையில, மறுபடியும் பெரிய பிரேக் எடுத்தாங்க. ஒன்பது வருஷங்கள் கழிச்சு, போன வருஷம் மலையாளத்துல மறுபடியும் கம்பேக் கொடுத்த சங்கீதா, மலையாள சினிமால மட்டும் இப்போ செலக்ட்டிவ்வா நடிச்சுக்கிட்டிருக்காங்க.

‘பூவே உனக்காக’ சங்கீதா

சென்னையில தன் குடும்பத்தோட மகிழ்ச்சியுடன் வாழுற சங்கீதாவுக்கு இருபது வயசுல ஒரு மகள் இருக்காங்க. தோளுக்கு மேல வளர்ந்த மகள் இருந்தாலும், ‘பூவே உனக்காக’ திரைப்படத்துல பார்த்தா மாதிரியே இன்னமும் அதே இளமையான லுக்ல இவங்க எனர்ஜிடிக்கா இருக்கிறது ஆச்சர்யம். இவங்க 90’ஸ் காலகட்ட சினிமாவுக்குக் கிடைச்ச நதியானு சொல்ற அளவுக்கு, ‘வயசானாலும் அழகும் பொலிவும் குறையாம நீங்க அப்படியே இருக்கீங்களே’ அப்படின்னு ரசிகர்கள் சங்கீதாவைப் பாத்து வியக்க, “நீங்க வேற… என் மகளோட ஃபிரெண்ட்ஸ் என்னை ஆண்ட்டின்னு கூப்பிடுறாங்க” அப்படின்னு கொஞ்சலா சொல்லுவாங்க.

அதெல்லாம் சரி, ‘நீங்க மறுபடியும் தமிழ் சினிமால எப்போ கம்பேக் கொடுக்கப் போறீங்க’னு ரசிகர்கள் கேட்டா, “நல்ல கதை அமைஞ்சா கண்டிப்பா தமிழ்லயும் கம்பேக் கொடுப்பேன்”னு புன்னகையுடன் சொல்லுறாங்க. தமிழ் சினிமால மறுபடியும் தன் சிறகுகளை விரிச்சு வலம் வருமா… தன் நடிப்பால் ரசிகர்களை மகிழ்விக்குமா… பொறுத்திருந்து பார்க்கலாம்!

– நாயகிகள் வருவார்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.