கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து: 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து விசாரிக்க, 5 உயரதிகாரிகளை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆய்வு செய்து, ரயில்வே துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணி அளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீஸார், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதவிர, 3 பயணிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கவரைப்பேட்டை அருகே திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பயணிகளை பேருந்துகள் மூலமாக, பொன்னேரி நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து இரண்டு மின்சார ரயில்கள் மூலமாக சென்ட்ரலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை இந்த பயணிகளை சிறப்பு ரயிலில் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. இதில் இயந்திரவியல், இயக்கவியல், தண்டவாள பராமரிப்பு துறை, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு, ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். விபத்துக்கு சிக்னல் தொழில் நுட்ப பிரச்னையா அல்லது மனித தவறா, வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உள்ளனர். மேலும், ரயில்வே போலீஸாரும் வழக்குப் பதிந்து,விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.