Health: மழைக்காலம் வந்திடுச்சு; உங்க வீட்ல இந்த கீரை வாங்கிட்டீங்களா?

மழைக்காலம் வந்துவிட்டது. இனி சளி, இருமல், தும்மல், தொண்டை கரகரப்பு, தொண்டைப்புண் என குளிர்கால நோய்களும் வந்துவிடும். அவை வராமல் தடுக்க, வந்தால் சரி செய்ய உதவுவது தூதுவளை. இதை எப்படியெல்லாம் சமைத்து சாப்பிடலாம் என்று கற்றுத்தருகிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா.

இருமல்

தூதுவளை கசாயம்

ஒரு டம்ளர் தண்ணீர், பத்து தூதுவளை இலைகள், உடன் சுக்கு அல்லது இஞ்சி சிறு துண்டு, சிறிது சிறிதாக நறுக்கிய பூண்டு பல் இரண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டினால் தூதுவளை கசாயம் ரெடி. தொண்டைக்கு இதமான உணர்வைத் தரும் இந்தக் கசாயம். தவிர, பருவ நிலை மாற்றம் காரணமாக நமக்கு தொல்லைக் கொடுக்கிற வைரஸ்களுக்கு எதிராக, உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாசிக்குள் நுழைகிற கண்ணுக்குத் தெரியாத தூசியை நம்முடைய எதிர்ப்பாற்றல் கோழை வழியே வெளியேற்ற ஆரம்பிக்கும். அப்படி வெளியேற்றுவதற்கு தூதுவளை கசாயம் பெரிதும் உதவும். மாலை வேளையில் தேநீருக்கு பதிலாக ஒரு டம்ளர் தூதுவளை கசாயத்தை ஏழு நாள் தொடர்ச்சியாக அருந்த, கபம் வெளியேறும்.  

தூதுவளை துவையல்

சிலருக்கு நாட்பட்ட சளியினால் அதன் நிறம் மாறி மஞ்சளாகவோ, பச்சையாகவோ கட்டிக்கட்டியாக வெளியேறும். இந்த நிலையில் உள்ளவர்கள் தூதுவளையை துவையலாக அரைத்து சாப்பிட குணமாகும். தூதுவளையுடன் உளுந்து, தேங்காய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட சளி இளகி, மலம் வழியே வெளியேறும். சளித்தொல்லை இல்லையென்றாலும் தூதுவளை துவையல் சாப்பிடலாம். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

தூதுவளை

சைனசைட்டிஸ் இருக்கிறதா?

தலைபாரம், மூக்கடைப்பு என சைனசைட்டிஸ் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு தூதுவளை கசாயம், துவையல் இரண்டுமே நல்ல பலன் தரும். நீராவியில் வேது பிடிக்கும்போது தூதுவளையையும் சேர்த்து உபயோகிக்க தலையில் கோத்திருக்கும் நீரை வெளியேற்றி தலைவலியை குறைக்கும்.

தொண்டையில் கரகரப்பா?

நீராவியில் வேது பிடிப்போம் இல்லையா? அப்போது, வாயை நன்றாக திறந்து தொண்டையில் நீராவி படும்படி  ஆவியை உள்ளிழுக்க வேண்டும். தொண்டையில் உள்ள கிருமித்தொற்று சரியாகும். தொண்டையில் கரகரப்பு அல்லது தொண்டை புண் இருந்தால், தூதுவளை இலைகளை அப்படியே வாயில் போட்டு மெல்ல குணமாகும். ஆனால், மெல்வதற்கு முன்னால் இலையில் இருக்கிற முட்களை கவனமாக நீக்கி விட வேண்டும். வாய் துர்நாற்றத்தையும் நீக்கும் இந்த தூதுவளைச் சாறு.

சளி

மூச்சுவிட சிரமமாக இருக்கிறதா?

கைப்பிடியளவு தூதுவளை இலைகளை முள் நீக்கி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதை, சின்ன வெங்காயத்தோடு சேர்த்து நல்லெண்ணெயில் லேசாக வதக்கி, ஐந்து நாள்களுக்கு சிறிய நெல்லிக்காய் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர, ஆஸ்துமா காரணமாக மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

இயற்கை மருத்துவர் யோ. தீபா

புற்றுநோயை தடுக்கும்!

சிலருடைய வாய்க்குள் லிச்சன் பிளானஸ் (lichen planus) எனப்படும் கருமை மற்றும் வெண்ணிறக் கோடுகள் இருக்கும். இது, எங்கோ சிலருக்கு ஓரல் கேன்சராக மாற வாய்ப்பிருக்கிறது. தூதுவளை இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும்போது தொண்டையில் படும்படி கொப்பளித்து துப்ப, ஓரல் கேன்சர் வராமல் தடுக்கும். புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த நோய்களில் தூதுவளையின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருமளவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-ப. அரவிந்த்பிரசாத்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.