‘வேட்டையன்’ படத்தில் அடிமை மனோபாவ, அறிவுக்கு ஒவ்வாத கருத்து: தமிழக பாஜக விமர்சனம்

திருச்சி: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் மெக்காலே கல்வி முறைக்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பது பிற்போக்குத்தனமானது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழக பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருச்சி மக்கள் அனைவரும் நேற்று இரண்டு மணி நேரமாக பதட்டத்தில் இருந்தனர். பாதுகாப்பாக விமானத்தை தரை இறக்கிய விமானிக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். கும்மிடிப்பூண்டி அருகில் ரயில் விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ச்சியாக இதுபோன்ற ரயில் விபத்துக்கள் நடப்பது சதிச்செயலா என்று ரீதியில் என்ஐஏ விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக கடவுளை வணங்க செல்பவர்களுக்கு மனதைப் புண்படுத்தும் வகையில் பெரியார் சிலையில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே உள்ள பெரியார் சிலை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். அந்த இடம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமானது. தி.க.,வினர் சொந்த காசில், சொந்த இடத்தில் வைத்து அந்த சிலையை வைக்க வேண்டும். அப்போது கூட இந்த மாதிரி வாசகம் வைக்க கூடாது. திராவிட கழகத்துக்கு முன்பாக திராவிடர் திடலுக்கு வருபவர்கள் மூளை குறைபாடு உள்ளவர்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா. ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் மெக்காலே கல்விமுறை வந்த பிறகுதான் இந்தியாவில் சமூகநீதி வந்தது என்று கருத்து கூறப்பட்டுள்ளது. இது அறிவுக்கு ஒவ்வாத கருத்து. அடிமை மனோபாவம் கொண்ட கருத்து. அச்சில் இருப்பதுதான் அறிவு என்பதுதான் மெக்காலோ கல்வித் திட்டம். புதிய கல்விக் கொள்கையில், மாற்றி கேள்வி கேட்டு மாணவர் புரிந்து கொண்ட பின்பு தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கொண்டு வருகிறோம்.

நீட் என்ற தேர்வு வந்த பின்பு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக வர முடிந்தது. இதுபோன்ற பிற்போக்கான கருத்துக்களை உச்சத்தில் இருக்கும் நடிகர் இருக்கும் திரைப்படத்தில் பரப்புவது என்பது ஆபத்தானது. வெளிநாட்டு கார்ப்பரேட், இந்தியன் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்துவது ஆபத்தானது. மெக்காலே கல்விக்கு ஆதரவாக பேசுவது ஒரு பிற்போக்குத்தனமாகும்” என்றார். அப்போது, திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.