அணுசக்தி தளங்களின் ரகசிய தகவல்கள் திருட்டு: இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதலில் ஸ்தம்பித்தது ஈரான்

தெஹ்ரான்: இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. அப்போது இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டு தணிந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்காக ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதுவரை ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படவில்லை.

எனினும் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்க அரசு, அந்த நாட்டின் மீது நேற்று முன்தினம் புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இதன்படி ஈரானில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் 10 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் ஈரான் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், சட்டப்பேரவை நிர்வாகம் மற்றும் நீதித் துறை நிர்வாகத்தை குறிவைத்து இஸ்ரேல் உளவுத் துறை தொடர் சைபர் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இதன் காரணமாக ஈரான் அரசின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள், எரிசக்தி, மின் விநியோக கட்டமைப்பின் செயல்பாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் முடங்கி உள்ளன. ஏடிஎம் மையங்களில் இருந்து பணம்கூட எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி, ஈரான் இன்டர்நேஷனல் என்ற ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. மிக முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு உள்ளன. ஈரானின் அணுசக்தி தளங்கள், எண்ணெய் குழாய் கட்டமைப்பு, போக்குவரத்து, துறைமுகங்கள் ஆகியவற்றின் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. ஈரான் அணுசக்தி தளங்களின் ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டு உள்ளன. ஈரான் முழுவதும் குழப்பமான சூழல் நிலவுகிறது.இவ்வாறு பெரோஸ்பாடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்வதேச சைபர் நிபுணர்கள் கூறியதாவது: கடந்த செப்டம்பர் 17-ம் தேதி லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதன்பிறகே இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இடையிலான மோதல் தீவிரமடைந்தது. தற்போது லெபனான் மீது இஸ்ரேல் நேரடியாக போர் தொடுத்திருக்கிறது.

இதற்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டில் இஸ்ரேலின் மொசாட் உளவுத் துறை நடத்திய சைபர் தாக்குதல் மூலம் ஈரானின் அணு ஆயுத திட்டம் முடங்கியது. அப்போது ஈரானின் நடான்சு நகரில் உள்ள அணுசக்தி தளத்தின் கணினிகளில் ஸ்டக்ஸ்நெட் என்ற வைரஸை பரப்பி அந்த அணுசக்தி தளத்தை இஸ்ரேல் உளவுத் துறை முற்றிலுமாக முடக்கியது.

தற்போது அதே பாணியில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலோ, ஈரான் தரப்பிலோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் நிர்வாகம் நிலைகுலைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு சர்வதேச சைபர் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

சீனாவின் தொழில்நுட்ப உதவி: மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகின்றன. குறிப்பாக சீனா, ஈரானுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.

இஸ்ரேல் உளவுத் துறையால் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே ட்ரோன் தாக்குதல்களில் இருந்து அவரை காப்பாற்ற சீன அரசு சார்பில் அதிநவீன லேசர் தடுப்பு சாதனம் ஈரானுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் காமெனி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பெரிய மசூதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராணுவ வாகனங்களில் பொருத்தப்பட்ட சீன லேசர் தடுப்பு சாதனங்கள் மூலம் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

ஈரானின் அணுசக்தி தளங்களை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, சீன அரசு சார்பில் ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவற்றை மீறி இஸ்ரேல் உளவுத் துறை ஈரான் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.

முன்னதாக, துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் பங்கேற்றனர். அப்போது மத்திய கிழக்கு நிலவரம் குறித்து இரு தலைவர்களும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.