மைசூருவில் தசரா திருவிழா கோலாகலம்: ஜம்பு சவாரி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார், போரில் வென்றதை முன்னிட்டு விஜயதசமி காலகட்டத்தில் தசரா விழாவை 10 நாட்கள் கொண்டாட தொடங்கினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசுவிழாவாக‌ தசரா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

414-வது ஆண்டாக தசரா விழா கடந்த 3-ம்தேதி மைசூரு சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதனால் மைசூரு மாநகரமே விழாக்கோலம் பூண்டது. இளைஞர் தசரா விழாவின் சார்பாக கடந்த 9-ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினரின் இசை கச்சேரியும்,10-ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மைசூருவில் முதல் முறையாக இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்ததால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தனர். தமிழரான இளையராஜா கன்னட திரைத்துறை குறித்த சுவாரசியமான தகவல்களை கன்னட‌த்திலே சரளமாக பேசி, கன்னட பாடல்களை இனிமையாக பாடியதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தசரா விழாவின் இறுதி நாளான நேற்று மன்னரும் மைசூரு பாஜக எம்.பி.யுமான‌ யதுவீர், அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு பூஜை செய்தார். பிற்பகல் 5 மணியளவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜம்பு(யானை) சவாரி ஊர்வலத்துக்காக சிறப்பு பூஜை செய்து, சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கினார். அவருடன் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மைசூரு பொறுப்பு அமைச்சர்ஹெச்.சி. மஹாதேவப்பா ஆகியோரும் வழிபாடு நடத்தி, ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து அபிமன்யூ யானை ராஜ வீதியில் ஊர்வலமாக சென்றது. அதனை தொடர்ந்து சைத்ரா, லட்சுமி உள்ளிட்ட யானை படையும்,குதிரை மற்றும் ஒட்டக படையும் ஊர்வலமாக சென்றன. இந்த கண்கொள்ளா காட்சியை அரண்மனை வளாகத்தில் 50 ஆயிரம் பேர்கண்டுகளித்தனர். இதுதவிர பிரதான சாலைகளிலும், வீதிகளிலும் லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இரவு 8.30 மணியளவில் பன்னி மண்டபத்தில் நடந்த தீப்பந்து விளையாட்டையும், வாணவேடிக்கை நிகழ்வையும் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.