கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது மரம் சாய்ந்து விபத்து: தப்பிய சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் மூலையாறு அருகே சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில், காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. சனிக்கிழமை கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் சிரமத்திறகுள்ளாகினர்.

இடைவிடாது மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருந்த விடுதியைவிட்டு வெளியே வரமுடியவில்லை. காரில் பயணித்தவர்கள் காரை விட்டு இறங்கி சுற்றுலா தலங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாததால் வருத்தத்திற்குள்ளாகினர். படகு சவாரியும் கனமழையால் நிறுத்தப்பட்டது. வெள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளநீர் தொடர்ந்து கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஓரளவு மழை குறைந்து அவ்வப்போது மட்டும் பெய்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுற்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். இந்நிலையில் கேரள மாநிலம், கோட்டையம் பகுதியில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள், சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று காலை கொடைக்கானலில் இருந்து கோட்டையம் திரும்பினர். காரில் 5 பேர் பயணித்தனர். இவர்களது கார், கொடைக்கானல் -வத்தலக்குண்டு மலைச்சாலையில் மூலையாறு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரம் ஒன்று முறிந்து கார் மீது விழுந்தது.

இதனால் காரில் இருந்தவர்கள் காரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கி மரம் விழுந்ததில் சிக்கிக்கொண்ட காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் காரில் பயணித்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயமடைந்தனர்.

இவர்களை சிகிச்சைக்காக பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தால் மலைச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் காரின் மீது விழுந்த மரங்களை அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழைபெய்து வருவதால் சாலையோரம் உள்ள உயரமான மரங்களை அகற்ற முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.