Hong Kong Sixes: அணிக்கு 6 பேர்; வேடிக்கையான விதிமுறை; 12 ஆண்டுகளுக்கு பின் இந்தியா! – முழு விவரம்

ஹாங்காங் சிக்சஸ் தொடர்

* ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஹாங்காங் சிக்சஸ் என்ற தொடர் 7 வருடங்கள் கழித்து மீண்டும் நடக்க இருக்கிறது. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 1992-ல் துவங்கப்பட்ட இந்த தொடர் கடைசியாக 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது மீண்டும் நடைபெற இருக்கும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட முன்னணி அணிகளோடு மொத்தமாக 12 அணிகள் கலந்துகொள்கின்றன. நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் இந்த ஹாங்காங் சிக்சஸ் தொடர் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடர் பற்றிய முழு தகவல்கள் இங்கே!!!

ஹாங்காங் சிக்சஸ் தொடர்

தொடரின் ஹைலைட்ஸ்

* இந்த ஹாங்காங் சிக்சஸ் தொடரின் ஹைலைட் என்ன வென்றால் ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே ஆட முடியும். ஒரு அணிக்கு 5 ஓவர்கள்தான் வழங்கப்படும். அணியின் விக்கெட் கீப்பரை தவிர அத்தனை வீரர்களும் பந்துவீச வேண்டும். லீக் போட்டியில் ஒரு ஓவருக்கு 6 பந்துகள்தான். அதேநேரத்தில் இறுதிப்போட்டியில் ஒரு ஓவருக்கு 8 பந்துகள். அதேமாதிரி, ஒரு பேட்டர் 31 ரன்கள் எடுத்துவிட்டால் அவர் ரிட்டையர் அவுட் ஆகிவிட வேண்டும். அணியின் எல்லா வீரர்களும் அவுட் ஆன பிறகு அவர் மீண்டும் பேட்டிங் ஆடலாம். அணிக்கு 6 வீரர்கள் எனில் 5 வீரர்கள் அவுட் ஆனவுடன் வழக்கமாக இன்னிங்ஸ் முடிந்துவிட வேண்டும். ஆனால், இங்கே அந்த கடைசி வீரரும் தனியாக நின்று பேட்டிங் ஆடலாம். அதேமாதிரி ஒயிடு, நோ – பால் போன்ற எக்ஸ்ட்ராக்களுக்கு 2 ரன்கள் வீதம் வழங்கப்படும். ஒய்ட் மற்றும் நோபால் பந்துகள் 2 ரன்களாக கருதப்படும்.

களம் காண இருக்கும் 12 அணிகள்

* 29 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 12 அணிகள் களம் காண இருக்கின்றன. இந்த 12 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் தங்களுக்குள் மோதிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகளைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதியிலிருந்து அப்படியே அரையிறுதி. அடுத்து இறுதிப்போட்டி. எஞ்சியிருக்கும் அணிகள் தங்கள் இடத்தை நிர்ணயம் செய்துகொள்வதற்கான போட்டிகளில் ஆடுவார்கள்.

ஹாங்காங் சிக்சஸ் தொடர்

ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்திய ஜாம்பவான்கள்

* இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர், தோனி, கும்ப்ளே, ராபின் சிங் போன்ற முன்னணி ஆட்டக்காரர்கள் ஹாங்காங் சிக்சஸ் தொடரில் விளையாடி இருக்கின்றனர். குறிப்பாக தோனி 2004 இல் நடைபெற்ற ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்று இருந்தார். அப்போது அவர் இந்திய அணிக்கு அறிமுகம் கூட ஆகவில்லை. அந்தத் தொடரில் அதிரடியாக விளையாடி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 8 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்தார். 5 சிக்சர்களை அடித்து மிரட்டியிருந்தார். அந்தத் தொடரில் தோனி 112 ரன்களை அடித்திருந்தார். அந்தத் தொடரில் இந்தியா சார்பில் அதிக ரன்களை அடித்திருந்த வீரர் தோனிதான். ஆனால் அந்தத் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா ஒருமுறை ராபின் சிங் தலைமையில் கோப்பையை வென்றிருக்கிறது.

தோனி

12 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி:

* மிகச் சிறிய அளவிலான இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா பல ஆண்டுகளாக விளையாடி வருகிறது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு பங்கேற்று இருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்திய அணி ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் விளையாட இருக்கிறது. 2024 ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துவிட்டது. ராபின் உத்தப்பா தலைமையில் மனோஜ் திவாரி, ஷபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ஸ்டூவர்ட் பின்னி, கேதர் ஜாதவ் மற்றும் பாரத் சிப்லி உள்ளிட்ட ஏழு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்தியா vs பாகிஸ்தான்

* இந்த முறை இந்தியாவும் பங்கேற்க உள்ளதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. முதல் போட்டியிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்திய அணி

டிக்கெட் விலை

* இந்த தொடர் நடைபெற உள்ள மூன்று நாட்களும் 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான டிக்கெட் விலை மூன்று நாட்களுக்கும் வெவ்வேறு விதமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது முதல் நாளில் டிக்கெட் விலை 150 டாலர்களாகவும் இரண்டாவது நாளில் 250 டாலர்களாகவும் மூன்றாவது நாளில் 350 டாலர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மூன்று நாள் பாசை ஒட்டுமொத்தமாக வாங்க நினைப்பவர்களுக்கு 580 டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஹாங்காங் சிக்சஸ் தொடரை எதில் பார்க்கலாம்?

* 7 வருடங்களுக்கு பிறகு, மொத்தம் 12 அணிகள் மோத இருக்கும் இந்த ஹாங்காங் சிக்சஸ் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம்.

ஹாங்காங் சிக்சஸ் தொடர்

வேடிக்கையான விதிமுறைகளை கொண்ட இந்தத் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தத் தொடரை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் தொடரில் களம் காண இருக்கும் இந்தியா வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.