மும்பையில் மின்சார ரெயில் தடம்புரண்டு விபத்து

மும்பை,

மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட்டில் இருந்து காலி மின்சார ரெயில் ஒன்று நேற்று மதியம் 12.30 மணி அளவில் பணிமனை நோக்கி புறப்பட்டு சென்றது. மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடம்புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதன் காரணமாக சர்ச்கேட்டில் இருந்து மும்பை சென்ட்ரல் இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒரு சில ரெயில்கள் சர்ச்கேட்டில் இருந்து போரிவிலி செல்லும் ஸ்லோ வழித்தடத்தில் இருந்து விரைவு வழித்தடம் வழியாக திருப்பி விடப்பட்டது. மற்ற ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.ரெயில் காலியாக பணிமனைக்கு சென்றதால் இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினித் அபிஷேக் தெரிவித்தார். இதற்கிடையே சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு பணி நிறைவு பெற்று தடம்புரண்ட ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் பிறகு அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரானது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.