“போதைப் பொருட்களுக்கான நுழைவு வாயிலாக குஜராத் மாறிவிட்டதா?” – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: போதைப் பொருட்களுக்கான நுழைவு வாயிலாக குஜராத் மாறிவிட்டதா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மும்தாஜ் படேல் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மகள் மும்தாஜ் படேல், “போதைப் பொருட்களுக்கான நுழைவு வாயிலாக குஜராத் மாறிவிட்டதா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் ரூ.1,300 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் கைப்பற்றிய போதைப் பொருட்களில் 30% குஜராத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நாள்தோறும் நடக்கின்றன. தற்போதுதான் குஜராத் அரசு போதைப் பொருட்களுக்கு எதிரான சட்டத்தை இயற்ற முயல்கிறது. போதைப்பொருள் பழக்கம் சமூகத்தை கடுமையாக பாதிக்கிறது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் போராடிக் கொண்டிருக்கிறது. பஞ்சாபில்தான் போதைப் பொருள் புழக்கம் அதிகம் என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், குஜராத்தில்தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பாஜகதான் குஜராத்தை 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது” என குற்றம் சாட்டினார்.

டெல்லி போலீஸாரும் குஜராத் போலீஸாரும் இணைந்து நேற்று (அக். 13) நடத்திய சோதனையில் 516 கிலோ எடையுள்ள ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருள் ஒழிப்பு இயக்கம் மற்றும் போதைப் பொருள் இல்லா பாரதம் இயக்கம் ஆகியவற்றின் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. குஜராத்தின் அங்லேஷ்வர் நகரில் உள்ள அவ்கார் மருந்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கடந்த 1-ம் தேதி மஹிபால்பூரில் உள்ள துஷார் கோயல் கிடங்கில் டெல்லி சிறப்பு போலீஸ் படை நடத்திய சோதனையில் 562 கிலோ கொகைன் போதைப் பொருளும், 40 கிலோ எடைகொண்ட கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 13,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.