"அப்பா இல்லைங்கிற குறை தெரியாம வளர்த்தேன்" – ஒரு சிங்கிள் பேரன்ட்டின் கதை!

ஒரு பெண்ணின் பாசிட்டிவ் வைராக்கியம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் நங்கநல்லூரில் வசிக்கும் மங்களம் அவர்களின் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும். கேட்டரிங் பிசினஸ், சில சமூகத்தினரின் திருமணங்களில் மட்டும் கட்டாயம் இடம்பெறும் விதவிதமான மனோகரம் தயாரித்தல் எனச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் 65 வயது மங்களம் அவர்களிடம் ஒரு மாலை நேரத்தில் உரையாடினோம். 

“எனக்கு அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும்போதே எங்க அம்மா தவறிட்டாங்க. அண்ணன், தம்பி, அக்கா, நான்னு ஒருத்தருக்கொருத்தர் துணையா வளர்ந்தோம். நான் படிச்சது அந்தக்கால எஸ்.எஸ்.எல்.சி. 1975-ல பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு, ஹோட்டல் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்த அண்ணனுக்கு ஒத்தாசையா இருந்தேன். அந்த வகையில நான் சமையல் கத்துக்கிட்டதே என் அண்ணன்கிட்ட இருந்துதான். 

கூடுக்குள் மனோகரம்

1987-ல எனக்குக் கல்யாணமாச்சு. ஒரு பிள்ளையும் பிறந்தான். ஆனா, என்னோட திருமண வாழ்க்கை அவ்வளவு நிம்மதியா இல்ல. குடும்பம் நடத்துறதுக்குக்கூட அவர் பணம் கொடுக்க மாட்டார். என் பிள்ளை அப்போ ஆறு மாசக் கைக்குழந்தை. அந்த நேரத்திலேயும் என் கணவர் அவரோட இயல்புல இருந்து மாறவே இல்லை. என்ன நம்பி கையில ஒரு பச்சை மண்ணு. இதுக்கு மேலயும் இவரை நம்பி இருந்தா, என் குழந்தை பசியில தவிப்பான்ங்கறது எனக்கு புரிஞ்சுப்போச்சு. என்னையும் என் கையில இருந்த கைக்குழந்தையையும் காப்பாத்திக்க வேற வழி தெரியாம, அவர விட்டு விலகி என் அண்ணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். 

என் கூடப் பொறந்த அண்ணனும் தம்பியும் என்னோட கொடுப்பினைன்னு சொல்லணும். கைக்குழந்தையோட கணவரை விட்டுட்டு நான் வந்து நின்னப்ப, என்னை ஆதரவா தாங்கிப் பிடிச்சது அவங்க ரெண்டு பேரும்தான். அன்னைக்கு மட்டும் இல்லைங்க, இன்னைக்கு வரைக்கும் அவங்க என்னையும் என் மகனையும் பாசத்தால தாங்கிப் பிடிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க” என்றவர், தன் கேட்டரிங் பிசினஸ் ஆரம்பித்த கதையை விவரிக்க ஆரம்பித்தார். 

தேன்குழலை நொறுக்குகிறார்

“பிறந்த வீட்டுக்கு வந்த பிறகு நான் சும்மா உட்காரல. கையிலதான் சமையல்ங்குற ஒரு கலை இருக்கே. அதனால வெளியில சமையல் வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். ஆரம்ப காலத்துல எல்லாம் நல்லாதான் போயிட்டிருந்துச்சு. ஆனா, பிள்ளை வளர்ந்து ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்ச பிறகு சூழ்நிலை வேற மாதிரி மாற ஆரம்பிச்சது. சமையல் வேலைக்குப் போறப்போ எல்லாம் பிள்ளையை ஸ்கூலுக்கு லீவு போட வச்சு கூட்டிட்டுப் போற மாதிரி இருந்துச்சு. எத்தனை நாள் பிள்ளையை அப்படி கூட்டிட்டுப் போக முடியும். பிள்ளையோட படிப்பு கெட்டுடாதா… அதனால, வெளியில சமையல் வேலைக்குப் போறத நிறுத்திட்டு சின்னதா சாப்பாட்டுக் கடை ஆரம்பிச்சேன்.

அதுக்கும் அண்ணனும் தம்பியும்தான் உதவிக்கு நின்னாங்க. கூடவே, மனோகரமும் செய்ய ஆரம்பிச்சேன். அதோ இதோன்னு 30 வருஷம் ஓடிப்போச்சு. சின்ன சாப்பாட்டுக் கடையா ஆரம்பிச்சது இப்போ மெஸ்ஸா வளர்ந்து நிக்குது. காலை, ராத்திரி ரெண்டு வேலையும் டிபன் கிடைக்கும். கூடவே, கல்யாண ஆர்டர்களும் எடுக்கிறேன். தவிர, மனோகரம் ஆர்டரும் எடுக்கிறேன்” என்றவர், தன்னோட ஸ்பெஷலான மனோகரம் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். 

“வேர்க்கடலை, பொட்டுக்கடலை, தேன்குழல், முந்திரிப்பருப்பு அல்லது ஆரஞ்சு மிட்டாயை வெல்லப்பாகு அல்லது சர்க்கரைப்பாகுல கலந்து, கூம்பு வடிவுல மடிச்ச அலுமினிய பேப்பர்ல கொட்டி, நல்லா இடிச்சி செட் செஞ்சா மனோகரம் தயாராகிடும். எங்க வீட்டுத் திருமணங்கள்ல இந்த மனோகரம் கட்டாயம் இடம்பெறும்கிறதால, கல்யாண சீசன்ல இந்த ஆர்டர் நிறைய வரும். கூடவே, மத்த கேட்டரிங் நடத்துறவங்களும் அவங்களுக்கு வருகிற மனோகரம் ஆர்டர்களை எனக்குத் தருவாங்க” – பேசியபடியே, மடித்த அலுமினிய பேப்பருக்குள் வெல்லாப்பாகையும் உடைத்த தேன்குழலையும் போட்டு தட்டித்தட்டி சமன் செய்கிறார். 

உறவினருடன் மங்களம்

“சில நாள்கள்ல காலையில அஞ்சு மணிக்கு 500 இட்லி, ஆயிரம் இட்லி, சட்னி, சாம்பார் டெலிவரி பண்ண வேண்டியது வரும். அதுக்கெல்லாம் நடுராத்திரி ஒரு மணிக்குச் சமையல் ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும். கூட அக்கா, மாமி, தம்பி பொண்டாட்டின்னு உதவிக்கு நிப்பாங்க. கடுமையான உழைப்பு, கௌரவமான சம்பாத்தியம்… மகனை நல்லா படிக்க வச்சேன். அவனுக்குக் கல்யாணம் செஞ்சு ரெண்டு பேரப் பசங்ககூட பொறந்துட்டாங்க. இதுக்கு நடுவுல என் கணவர் என்னையும் பார்க்க வரல; கைக்குழந்தையைத் தூக்கிட்டுப் போனாளே…. அந்தக் குழந்தை எப்படி இருக்குன்னு என் மகனையும் பார்க்க வரல. நானும் அவரைத் தேடி போகல. என் மகன் கல்யாணத்தப்போ, அவனுக்கு அஞ்சு பவுன், மருமகளுக்கு அஞ்சு பவுன், கூடவே வைரத்தோடு, வைர மூக்குத்திப் போட்டு நிறைவா கல்யாணம் செஞ்சேன்.

என் மகனுக்கு அப்பா இல்லை என்கிற குறையே தெரியாம வளர்த்து, ஜாம் ஜாம்னு கல்யாணமும் செஞ்சு வச்சுட்டேன். எல்லாம் ஒரு வைராக்கியம்தான்” என்று சிரிக்கிற மங்ளத்தின் தன்னம்பிக்கை வார்த்தைகள், சிங்கிள் அம்மாக்களுக்கு அவர் செய்கிற மனோகரம் போலவே இனிக்கும் என்றே நம் மனதுக்குப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.