சீரற்ற காலனிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் –   84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு 

தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

சீரற்ற காலநிலை காரணமாக 16 மாவட்டங்களின் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 40,516 குடும்பங்களைச் சேர்ந்த 158,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன்,  2,470 குடும்பங்களைச் சேர்ந்த 10,369 பேர் தற்போது 79 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சமைத்த உணவு, இரண்டு வேளை தேநீர், மருத்துவ வசதிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு இரண்டு வேளை பால் மா போன்றவற்றை  வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் இன்று 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

முக்கியமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு 33 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் மொத்தமாக 84 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, மேலதிகமாக 60 மில்லியன் ரூபா அமைச்சிடம் உள்ளதாகவும், அந்தத் தொகையை தேவைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்

அத்துடன் அனர்த்தத்தின் ஊடாக 3 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், 2 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். ஒரு வீடு மொத்த சேதமடைந்துள்ளது. மற்றும் 405 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.