ஜியோவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! சேவை வழங்க தடைவிதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஜியோ நிறுவனம் சேவை வழங்க தடை விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட நெமிலிக்குடி ஊராட்சி, வடகுளவேலி மற்றும் தென்குளவேலி கிராமங்களைச் சேர்ந்த நடனசிகாமணி, ராஜ்குமார், ஷேக் அப்துல்லா, ரமேஷ், நடராஜன், வெங்கடேஷ், கோகுல்ராஜ், மதியழகன் இவர்கள் அனைவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

சேவை குறைபாடு

வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட தங்களுடைய ஊர்களில் ஜியோ நிறுவனத்தின் செல்போன் நெட்வொர்க் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை, 4ஜி மற்றும் 5ஜி அதிவேக இணையதள சேவைகள் சரிவர கிடைப்பதில்லை என்று மனுதாரர்கள் புகார் தெரிவித்திருந்தனர். நெட்வொர்க் சிக்னல் கிடைக்காததால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்த மனுதாரர்கள், தங்களில் பலர் இணையதளய சேவையை நம்பியே தொழில் மற்றும் வியாபாரம் செய்து வருவதாகவும், அது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இமெயில் மூலம் தொடர்ந்து புகார்கள் அனுப்பியும் நெட்வொர்க் சிக்னல்களை ஜியோ நிறுவனம் மேம்படுத்தவில்லை, தொடர்ந்து பாதிப்புகள் இருந்த வண்ணமே இருந்ததால் தான், கடந்த மே மாதம் பாதிக்கப்பட்ட அனைவரும் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது வழக்கு தொடுத்தனர்.

இந்த சேவை குறைபாடு வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், சம்பந்தப்பட்ட ஜியோ நிறுவனம் இணையதள சேவை மற்றும் இணைய வேகம் குறைவாக உள்ள வலங்கைமான் வட்டத்தில் தங்களது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வரை ஜியோ நிறுவனம் தங்களின் சிம் கார்டுகளை விற்பனை செய்யக் கூடாது  என்று தீர்ப்பளித்தனர்.

அத்துடன், புகார்தாரர்கள் தங்கள் இணைப்பைப் பெற்ற தேதியிலிருந்து இன்று வரை செலுத்திய கட்டணத்தை 9% ஆண்டு வட்டியுடன் திரும்பத்தர வேண்டும் என்றும், புகார்தாரருடைய மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தலா ரூபாய் 20,000/- மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000/- வீதம் இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனுதாரர்களுக்கு, இழப்பீட்டுத் தொகையை 30 நாட்களுக்குள் வழங்குமாறு ஜியோ நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகளின் தீர்ப்பை மக்கள் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டண உயர்வால் பெரும் பாதிப்பில் இருக்கும் பொதுமக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பை வரவேற்றுள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.