Chess : செஸ் விளையாட்டில் கோலோச்சும் இந்தியா; சாம்பியன்களின் தலைநகராகும் தமிழ்நாடு!

பொற்காலம் என்போமே… அப்படியொரு காலத்தில்தான் இந்திய சதுரங்கம் கம்பீரமாகக் கால் பதித்திருக்கிறது.

45-வது செஸ் ஒலிம்பியாடில் இந்தியா பொதுப்பிரிவு மற்றும் பெண்களுக்கான பிரிவு என இரண்டிலுமே வென்று வந்திருக்கிறது… இரண்டு தங்கப் பதக்கங்களை! 80-களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி எப்படி கிரிக்கெட்டில் ஜாம்பவனாக வலம் வந்ததோ… அதேபோல 50, 60-களில் செஸ்ஸில் சோவியத் ரஷ்யா (பிரிவினைக்கு முன்) வலம் வந்தது. இப்போது அந்தப் பெருமை… இந்தியாவுக்கு!

தங்கப்பதக்கத்துடன் செஸ் மகளிர் அணி – chess olympiad 2024

வரலாற்று வெற்றி!

சர்வதேச அளவில் எந்தவொரு செஸ் டோர்னமென்ட் என்றாலும் இப்போது நம் இந்திய செஸ் இளம்படையினரே கோலோச்சுகின்றனர். ஒருபுறம் பிரக்ஞானந்தா நார்வே செஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனையே வீழ்த்துகிறார். மறுபுறமோ, 20 வயதைக் கூடத் தாண்டாத குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று முஷ்டி முறுக்குகிறார். இவர்களோடு இம்முறை அர்ஜுன் எரிகைசியும் இணைந்தது பதக்க வாய்ப்பை ஏறக்குறைய தொடருக்கு முன்பாகவே முடிவு செய்துவிட்டது. ஓப்பன் பிரிவில் தொடரின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆதிக்க நாயகனாகவே வலம் வந்த இந்தியா, இறுதியில் 21 புள்ளிகளோடு முதலிடத்தைக் கைப்பற்றியது. அடுத்த இடங்களைப் பிடித்த ஐந்து அணிகள் தலா 17 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தன. பெண்கள் பிரிவில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் வென்று கிரீடம் சூடினர் தங்க மகள்கள்.

பொதுப்பிரிவு மற்றும் பெண்களுக்கான பிரிவு என இரண்டிலுமே இந்தியா தங்கம் வென்றிருப்பது இதுதான் முதன்முறை. ஒரே ஒலிம்பியாடில் இது நிகழ்வது அபூர்வம். இதற்கு முன்பாக, இது சோவியத் ரஷ்யாவும் சீனாவும் மட்டுமே நிகழ்த்தியிருந்த அரிய சாதனை. இது மட்டுமன்றி, இரு பிரிவிகளிலும் மேலும் நான்கு தனிநபர் தங்கங்களையும் இந்திய வீரர்கள் வென்றிருக்கின்றனர். இந்தியாவின் செஸ் கிராஃபில் இதுவே உச்சகட்டம் என்று கூறிவிட முடியாது. வெற்றிகள் தொடர வேண்டும். என்றாலும், இது கொண்டாடித் தீர்க்க வேண்டிய தருணம்.

விதை… விஸ்வநாதன் ஆனந்த் போட்டது!

விஸ்வநாதன் ஆனந்த்

இந்த வரைபடம் ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கியதன் ஆரம்பப்புள்ளி… விஸ்வநாதன் ஆனந்த். ஒரு பிரமாண்ட சாதனைக்கு ஊக்கமளிக்க தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான வெற்றி அவசியம். இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான ஆனந்த் அதைத்தான் இந்திய சதுரங்க உலகிற்குச் செய்திருக்கிறார். இந்திய செஸ்ஸில் வி. ஆ. முன், வி. ஆ. பின் எனக் காலக்கோடு வரைந்து பேசும் அளவிலானது அவரது சாதனையும் அதன் விளைவாக இந்திய செஸ் பெற்றிருக்கும் வளர்ச்சியும்.

1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக விஸ்வநாதன் ஜொலித்தார். அது நடந்து அடுத்த 12 ஆண்டுகளில், அதாவது 2000-ம் ஆண்டு மொத்தம் ஐந்து கிராண்ட் மாஸ்டர்களை இந்தியா பார்த்திருந்தது. அடுத்த 12 ஆண்டுகளில், 2012-ல் இது 29 ஆக இருந்தது. 2024-ல் இது 85 ஆக உயர்ந்திருக்கிறது. வியக்க வைக்கிறதல்லவா?! இப்போதுள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர், அதாவது 48% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதிலேயே தெரியும் எந்தளவு ஆனந்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பது.

இந்தியாவில், குழந்தைகள் செஸ்ஸை நோக்கி நகர்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெற்றோர்களும் அவர்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். பள்ளியின் இணைச் செயல்பாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக செஸ் இடம்பிடித்துள்ளது. தனி வகுப்புகளுக்கும் மாணவர்கள் செல்கிறார்கள். 2022-ல் சென்னையில் பல சவால்களையும் தாண்டி நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட், இன்னமும் அதிகளவிலான ஆர்வத்தை சிறார்களிடையே தூண்டியுள்ளது. அடுத்த 12 ஆண்டுகளில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 200-ஐ எட்டாவிட்டால்தான் ஆச்சர்யம். தமிழகத்தில் உள்ள 31 கிராண்ட் மாஸ்டர்களும், பிரக்ஞானந்தா, வைஷாலி, முகேஷின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வெற்றிகளும் பலரையும் செஸ்ஸை நோக்கி ஈர்க்கும்.

பெண்கள் படை!

பெண்கள் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்றிருக்கிறது இந்தியப் பெண்கள் படை. ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், சச்தேவ் என அவர்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாக, வந்திகா மற்றும் திவ்யா தேஷ்முக் இருவரது இணையில்லாத ஆட்டம் தங்கத்தை இந்தியாவின் வசம் சேர்த்தது. அதுவும், இந்தியாவின் முதல் நிலை வீரரான கோனேறு ஹம்பி இல்லாமலேயே இதனைச் சாத்தியமாக்கி இருக்கிறது மகளிர் படை.

வெல்கம் நவம்பர்!

2025-ம் ஆண்டை சமூக செஸ் ஆண்டாக அறிவித்திருக்கும் சர்வதேச செஸ் ஃபெடரேஷன், ஆன்லைன் செஸ் உட்பட பலதரப்பட்ட நிலையிலான செஸ் போட்டிகளை அடுத்த ஆண்டு முழுவதும் திட்டமிட்டுள்ளது. இச்சூழலில், பிரபல செஸ் வீரரான ஹங்கேரியின் ஜுடித் போல்கர், பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கும் கிராண்ட் மாஸ்டர் டைட்டில்களை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். ’ஆண்களுக்கு சமமாக சவால் விடுமளவு நாங்களும் ஆயத்தமாக உள்ளோம்’ என்பதே அதில் உள்ள செய்தி.

மொத்தத்தில், செஸ் ஒலிம்பியாடில் வென்ற நட்சத்திரங்களை, முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய அணியின் கடும் முயற்சிக்கான பலன் இது. அடுத்து… உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் குகேஷ், சீனாவின் டிங் லிரனை சந்திக்கப் போகும் த்ரில் நிமிடங்களைக் கொண்ட நவம்பர் மாதத்துக்காகக் காத்திருப்போம்.

சியர்ஸ் சாம்ப்ஸ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.