அத்தியாவசியம் – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

செல்விக்கு அரசுப் பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என்பது ஆசை, ஆனால் அவள் கல்லூரி படிக்கும் போதே, அவளின்‌ பெற்றோர் மூன்று பெண் குழந்தைகள் இருப்பதால் அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளை கிடைத்ததும் அவசரமாய் மூத்த மகள் செல்விக்கு திருமணம் செய்து வைத்தனர்.

பிறந்த வீட்டில் இரண்டு தங்கைகளுடன் சிக்கனமாய் வாழ்ந்த செல்விக்கு புகுந்த வீடு ஒன்றும் நிம்மதியான வாழ்வை தரவில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை இடைவெளி இல்லாமல் வீட்டு வேலைகள் இருக்கும். இத்தனைக்கும் அந்த வீட்டில் அவளை சேர்த்து 3 பேர்‌ தான். ராமு தனது அம்மா இறந்ததால் அந்த இடத்திற்கு ஒரு மாற்று ஆளாகவே செல்வியை மணம் முடித்து வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளான்.

சித்தரிப்பு படம்

செல்வி, உடம்பு முடியாததால் படுத்த நிலையிலே இருக்கும் மாமனாருக்கு ஒவ்வொரு வேளையும் மருத்துவர் பரிந்துரைத்த அளவான உணவு மற்றும் மாத்திரையை வழங்குவது, அவரை‌ கழிவறைக்கு அழைத்து செல்வது, வாரத்திற்கு இருமுறை குளிப்பாட்டுவது என ஒரு செவிலியர் போல் பார்த்து கொள்வாள்.

அவளது கணவர் ராமு, வேலைக்கு செல்வது, வீட்டிற்கு வருவது, மளிகை கடைக்கு செல்வது மீண்டும் வேலைக்கு செல்வது என ஒரு சுழற்சி முறையில் வாழ்பவர். அவரது அப்பாவிற்கு தரும் முக்கியத்துவத்தை கூட, மனைவிக்கு அளிக்காதவர்.

அவளது பெற்றோர்களும் மூத்த மகளின் கடமை முடிந்தது என நினைத்துக்கொண்டனர். இதனாலே அவள் பெற்றோரிடம் இருந்தும் ஒதுங்கிவிட்டாள்.

அன்றைக்கு எப்போதும் போல் காலையில் கணவன் ராமுவுக்கு தோசை ஊற்றி கொடுத்தாள். அதை சாப்பிட்ட ராமு, “என்ன செல்வி தோசை இது, இவ்ளோ பெருசா இருக்கு, அப்பாக்காவது மெலிசா ஊத்தி கொடு” என்று கூறிவிட்டு, தட்டில் வைத்த 4 தோசையை சாப்பிட்டுவிட்டு மதிய உணவை எடுத்து கொண்டு வேலைக்கு புறப்பட்டான்.

சித்தரிப்பு படம்

பின் செல்வி தன்னுடைய மாமனாருக்கு தோசையை கொடுத்து விட்டு மாத்திரையும் பிரித்து கொடுத்தாள். பின் சமையலறையில் மதியத்திற்கு உணவை தயார் செய்து கொண்டிருந்தவளுக்கு பிறப்புறுப்பில் தாங்க முடியாத அளவில் வலி ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாதவள், தன் கணவனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்து, விஷயத்தை சொன்னாள்.

அலுவலகத்திற்குள் இருந்து வெளியே வந்த ராமு, “என்னாச்சு திடீர்னு, இங்க எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ வேணும்னா தனியா ஆஸ்பிட்டல் போ, நம்ப டாக்டர்கிட்ட நா பேசுறன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

திருமணமாகி 7 மாதம் ஆகியும் குழந்தை இல்லாததால் மகப்பேறு மருத்துவரிடம் செல்வியும் ராமுவும் சிகிச்சைக்கு செல்கின்றனர். அந்த பெண் மருத்துவரின் மருத்துவமனைக்கு செல்வி தாங்க முடியாத வலியுடன் தனியாகவே சென்றாள். செல்வியை பரிசோதித்த டாக்டர், பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டுள்ளதை அறிந்து அதற்கு சிகிச்சை அளித்தார். பின் செல்வியை அங்கேயே ஓய்வெடுக்க வைத்தார்.

செல்வி படுத்திருந்த படுக்கையின் அருகில் ஒரு பெண்ணை சுற்றி நிறைய உறவுகள் நின்று நலம் விசாரிப்பதை பார்த்ததும், தன்னுடைய கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீர் துளிகளை துடைக்க மனம் இன்றி வாய்க்கால் நீரை போல் கண்ணீரை ஓடவிட்டாள்.

சித்தரிப்பு படம்

பணி நேரம் முடிந்து மாலை வீட்டிற்கு வந்த ராமு, செல்வி வீட்டில் இல்லாததை நினைத்து பதறினான். என்ன ஆச்சு அவளுக்கு என்று மருத்துவரிடம் கைப்பேசியின் அழைப்பில் விசாரித்து விட்டு, அவளை தான் வந்து அழைத்து செல்வதாக கூறினான். ஆனால் அவன் வெளியே செல்வதற்கு தயாரானபோது பெரும் மழை பொழிந்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து செல்லலாம் என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றம்தான். இடைவிடாது பெய்த 3 மணி நேர மழையால் எங்கும் வெள்ளம் போல் மழை நீர் சூழ்ந்தது. பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. செல்வி மருத்துவமனையிலே தங்க வைக்கப்பட்டாள். மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

வீட்டிற்குள் டார்ச் லைட், மெழுகுவர்த்தி எங்கு உள்ளது என்று‌ தெரியாமல் தடுமாறிய ராமு, கைப்பேசி ஒளியை வைத்து சமாளித்தான். இந்த சூழலில் வெளியில் சென்று கூட உணவு வாங்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தான். பின் வீட்டில் இருந்த மாவை எடுத்து தோசை ஊற்ற முயற்சி செய்தான். அவனால் சரியாக ஊற்றி வட்டமாக்க முடியவில்லை. அப்படியே ஊற்றி வட்டமாக்கினாலும், திருப்பி போடும் போது துண்டு‌ துண்டாக சிதறின.

சித்தரிப்பு படம்

ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் கொண்டவன், என்ன கிடைத்ததோ அதை தட்டில் வைத்து கொண்டு, செல்வி வைத்து விட்டு சென்ற குழம்பை ஊற்றி அப்பாவிற்கு கொடுத்தான். அவரும் அதை மெதுவாய் மென்று விழுங்கினார்.

மருமகள் பற்றி சைகை மொழியில் கேட்டார். அவனும் அவருக்கு புரியும் வகையில் பேசினான். பின் அவனும் வெந்ததும் வேகாததுமான தோசையை சாப்பிட்டான். பின் இரவு அப்பாவிற்கு மாத்திரை கொடுக்க மருந்து பெட்டியை எடுத்து பார்த்தான். அதில் பல விதமான மாத்திரைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எதை இப்போது கொடுப்பது என்று தெரியாமல் குழம்பினான்.

கடையில் இருந்து வாங்கி வருவதோடு சரி, பின் எதுவும் அவனுக்கு தெரியாது. செல்வியிடம் கேட்கலாம் என நினைத்து கைப்பேசியை எடுத்தவன், அழைப்பு விடுக்காமல் அந்த அறையில் இருந்து சென்று விட்டான். மாத்திரை சாப்பிடாமல் அவரும் உறங்கி விட்டார்.

நள்ளிரவில் மழை சற்று ஓய்ந்ததால் நகரில் தேங்கி இருந்த மழைநீர் வடிந்தது. அடுத்தநாள் மதியம் போல் ஆட்டோவில் செல்வி வீட்டிற்கு வந்தாள். வீட்டிற்குள் சென்றதும், ராமுவிடம் மருத்துவர் பேசிக்கொண்டு இருந்தார். “ஒன்னும் பிரச்சினை இல்லை. மருந்து எடுக்காததால சுகர்‌ இன்கிரிஸ் ஆகி இருக்கு. இப்போ இன்சக்சன் போட்டு இருக்கேன், டோன்ட் வோரி” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

கணவன் – மனைவி

செல்வியை பார்த்து விட்டு ராமு எதுவும் பேசவில்லை. செல்வி, ஒருவித குற்ற உணர்ச்சியில் மாமனார் படுத்திருந்த அறைக்குள் சென்று, அவரிடம் மன்னிப்பு கேட்டாள். அவர் உன் தவறு எதுவுமில்லை, எதற்கு இதெல்லாம், என்பது போல் சைகை செய்தார். பின் தான் என்ன என்ன மாத்திரையை எப்போது சாப்பிட வேண்டும் என அவர் சைகையால் செல்வியிடம் கேட்க, செல்வியும் ஒவ்வொரு மாத்திரையின் வண்ணத்தையும் அளவையும் வைத்து காலை, மதியம், இரவு என குழந்தைக்கு பாடம் நடத்தும் ஆசிரியை போல் எடுத்து கூறினாள்.

அதை வேடிக்கை பார்த்த ராமு, சமையல் எவ்வாறு செய்வது, வீட்டில் உள்ள வேலைகளை எப்படி முடிப்பது என்று செல்வியிடம் கேட்டு அறிந்து கொள்ள நினைத்தான். எனினும் அவனது ஈகோ செல்வியிடம் பேச விடாமல் தடுத்தது.

மாமனார் அறையில் இருந்து வெளியேறிய செல்வி, சமையலறைக்குள் சென்றாள். அங்கு அடுப்பின் மேல் மாவு ஊற்றப்பட்டு இருப்பதை பார்த்து விட்டு அதை துணியால் சுத்தம் செய்தாள். வெறுமேன அலுவலகம் செல்வதை மட்டுமே செய்த நான், சின்ன சின்ன விசியங்களை கூட அறிந்து கொள்ளாமல் இருந்துள்ளேனே என்று நினைத்த ராமுவின் மனம் நீரில் நனைத்த பஞ்சு போல் கனத்தது.

பின் சமையலறைக்கு வெளியே நின்று எப்படி உள்ளே செல்வது என்று தடுமாற்றத்துடன் தவித்த ராமுவை பார்த்த செல்வி, வாழ்வின் அத்தியாவசியங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாய் சமையலறைக்குள் பாடம் கற்றுக்கொள்ள துடிக்கும் மாணவனை அழைத்தாள்.!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.