Anirudh: `வெறும் இரைச்சல் மட்டுமே அனிருத்தின் இசையா?' – அனிருத் ஏன் தவிர்க்கமுடியாத கலைஞன்

10-12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. அப்போது அனிருத்துக்கு 19 வயது இருக்கலாம். அவருடைய முதல் படமான ‘3’ படத்துக்காக இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில்தான் ரெக்கார்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இளைப்பாறும் நேரமே இல்லை. ஐந்தாறு நாட்களாக வீட்டுக்கே செல்லாமல் அனிருத் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். மகனைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டதால் அனிருத்தின் அம்மா ஸ்டூடியோவுக்கே அவரைத் தேடி வந்துவிடுகிறார். ஸ்டூடியோவில் அவர் பார்த்த அந்தச் சித்திரத்தை என்றைக்குமே மறக்க முடியாது என்கிறார் அவர். அனிருத்துக்கு சிறுவயதிலிருந்தே குளிரென்றால் ஒத்துக்கொள்ளவே செய்யாதாம். இசைக்கருவிகளைப் பக்குவமாக பராமரிக்க வேண்டும் என்பதால் ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களை ஏகத்துக்கும் குளிராக இருக்கும்படி ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள்.

Anirudh

ரஹ்மானின் அந்த ஸ்டூடியோவும் அப்படித்தான். அங்கே ஒரு கீபோர்டின் கவருக்குள் உடலை நுழைத்து சுருண்டுப் படுத்திருக்கிறார். அனிருத்தின் அம்மா உடைந்துவிட்டார். 19 வயதிலேயே அத்தனை தீர்க்கமாக இசை மீது பற்றோடு இருந்ததால்தான் அனிருத் இன்றைக்கு ஓர் உச்சத்தை எட்டியிருக்கிறார்.

விஜய் தன்னுடைய கடைசிப் படத்துக்கு அனிருத்தான் இசையமைக்க வேண்டும் என விரும்புகிறார். ரஜினி சமீபமாக தனது ஒவ்வொரு படத்திற்குமே 200% அனிருத்தான் வேண்டும் எனக் கேட்டு வாங்குகிறார்.

அனிருத் இந்தியாவின் சென்சேஷன் என ஜூனியர் என்.டி.ஆர் கொண்டாடுகிறார். அனிருத் எனக்கு மகனைப் போன்றவர் என அன்பைப் பொழிகிறார் ஷாருக் கான். இப்படிப்பட்ட உச்சத்தை வெறும் 12 ஆண்டுகளிலேயே அனிருத் எட்டியிருப்பதுதான் ஆச்சர்யம்.

ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் அந்த காலக்கட்டத்தையே தனதாக்கிக் கொண்டு கோலோச்சியிருப்பார்கள். 90 கள் வரைக்கும் இளையராஜா இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அதன்பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் ஆன்மாவைத் தழுவும் புதுத்தென்றலாக வருடிக்கொடுத்து தனக்கான ஒரு தலைமுறையை உருவாக்குகிறார். 80 களின் பிற்பகுதி மற்றும் 90 களில் பிறந்தவர்களெல்லாம் கேசட்டுகள் தேயத் தேய ரஹ்மானின் பாடல்களைக் கேட்டு லகித்திருப்பார்கள். அந்த வரிசையில் 2கே தலைமுறையின் வைப் நாயகன் அனிருத்தான் என்பதை யாராலும் மறக்க முடியாது.

அனிருத்

கிட்டத்தட்ட நான் விடலைப் பருவத்தை எட்டிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அனிருத்தும் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். ‘3’ படத்துக்கான பாடல் என தெரிவதற்கு முன்பாகவே ‘கொலவெறி’ பாடல் செம வைரல். Tamilanda.com, Tamilmp3.com என எதோ ஒரு பைரசி வெப்சைட்டிலிருந்து அந்தப் பாடலை பதிவிறக்கி கேட்டபோது அத்தனை உற்சாகமாக இருந்தது. அந்தப் பாடலில் எதுவுமே சிரமமாக இருக்காது. யார் வேண்டுமானாலும் போகிற போக்கில் அந்தப் பாடலை பாடித் திரியலாம். அதில் எந்த மேதைமையும் இருக்காது. ஆனால், நரம்புகளில் மின்னலைப் பாய்ச்சும் துள்ளல் நிறைந்திருக்கும். அங்கேயே அனிருத் பெரிதாக கவர்ந்துவிட்டார்.

அதன்பிறகு வெளியான `எதிர் நீச்சல்’ ஆல்பமெல்லாம் கேட்ட மாத்திரத்திலேயே அப்படியே இமயமலையைப் பெயர்த்து எடுத்து வந்துவிடலாம் என்கிற எனர்ஜியைக் கொடுத்தது. குறிப்பாக, அந்த டைட்டில் சாங். அனிருத், யோ யோ ஹனிசிங், ஹிப் ஹாப் ஆதி என இளம் சூறாவளிகளுடன் வாலியும் கைகோர்த்து அதகளப்படுத்தியிருப்பார். மியூசிக் சேனல்களில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் அந்தப் பாடலின் மேக்கிங்கை ஒளிபரப்பிக் கொண்டே இருப்பார்கள். காலேஜ் நண்பர்களுடன் கலாய்யும் கலகலப்புமாக ஒரு ப்ராஜெக்டை செய்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் அந்த மேக்கிங் வீடியோவும் அத்தனை ஜாலியாக இருக்கும். இதெல்லாம் ஒருவகையில் இளைஞர்களை அப்படியே அனிருத் பக்கமாகத் திருப்பியது.

இந்தக் காலக்கட்டத்தில் அனிருத் தேர்வு செய்து இசையமைத்த படங்களையும் கவனிக்க வேண்டும். அதிகமாக தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும்தான் இசையமைத்திருப்பார். இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட Boy Next Door இமேஜ் கொண்டவர்கள்.

இவர்களின் படங்களில் வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இலக்கற்று திரியும் நாயக கதாபாத்திரம் எதோ ஒரு கட்டத்தில் ஒரு உந்துதல் ஏற்பட்டு பெரிய காரியத்தை செய்ய முனையும். `வேலையில்லா பட்டதாரி’, `எதிர் நீச்சல்’, `மான் கராத்தே’ போன்ற படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மாதிரியான லைன் கொண்ட கதைகள் 18-25 வயதுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கையைப் பல இடங்களில் தொட்டுச் செல்வதைப் போல இருக்கும். தடைகளைத் தாண்டி அந்தக் கதாபாத்திரங்கள் இலக்கை நோக்கி முன்னேறும் கட்டத்தில் அனிருத் பின்னணியில் ஒலிக்கவிடும் உத்வேகமிக்க இசை பார்வையாளர்களையும் ஒரு ஹீரோவைப் போல உணர வைக்கும். வழக்கமாக யதாரத்தை மீறி சாகசம் செய்யும் ஹீரோ கதாபாத்திரங்களே பார்வையாளனுக்கு அந்த உணர்வைக் கொடுத்துவிடும்தான். ஆனால், அனிருத் இசையமைக்கும் படங்களில் திரையில் அசாத்தியங்களை நிகழ்த்தும் நாயகனைக் கடந்து அவரை தாண்டி பின்னணியில் அனிருத் இன்னும் ஒருபடி ஏறி அடித்துக் கொண்டிருப்பார். அது அந்த நாயகத்தன்மைக்கான இன்னும் வலுவாக்கிவிடும். இன்னும் அதிக எனர்ஜியையும் உந்துதலையும் ரசிகர்களுக்குக் கடத்திவிடும்.

vijay and anirudh

‘Boy Next Door’ பாணி கதாபாத்திரங்களுக்கே இப்படியென்றால் சதா அசாத்தியங்களையும் சாகசங்களையும் மட்டுமே நிகழ்த்தும் கதாபாத்திரங்களுக்கு அனி என்ன செய்வார் என சொல்லியா தெரியா வேண்டும்? அனிருத் இசையமைத்த முதல் மாஸ் திரைப்படமென்றால் கத்திதான். விஜய்யின் வழக்கமான ஓப்பனிங் சாங் பாணியிலிருந்து விலகி ஹிப்ஹாப் பாணியில் ஆதியை வைத்தே ‘பக்கம் வந்து’ என காந்தமாக ஈர்க்கும் ஸ்டைலோடு கலக்கியிருப்பார். அதேமாதிரி, மோஷன் போஸ்டரோடு வெளியான கத்தி தீமை அடிப்படையாக வைத்தே காதல் அலைகளை பரப்பிய ‘ஆத்தி..’ விஜய்யின் குரலிலேயே திரையரங்கை அதிர வைத்த ‘செஃல்பி புள்ள!’ யேசுதாஸின் குரலில் கரையச் செய்யும் ‘யாரோ..யாரோ..’ க்ளைமாக்ஸ் பாடல் என அந்த ஆல்பமே மாஸ் ஹீரோவின் பக்கா கமர்ஷியல் படத்துக்கு பூஸ்ட் கொடுக்கவும் அனிருத் தயாராகிவிட்டார் என்பதை நிரூபித்தது. அங்கிருந்துதான் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மாஸ் ஹீரோக்களுக்கான படங்களில் அனிருத் ஒப்பந்தம் ஆக ஆரம்பித்தார்.

ரசிகர்களின் பல்ஸ் என்னவென்பதை அறிந்து அவர்கள் தங்களின் நாயகனிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்கிற யதார்த்தத்தை உணர்ந்து அனிருத் மெட்டமைப்பதுதான் அவரின் மிகப்பெரிய பலம். அஜித்தின் `வேதாளம்’ படத்திற்கு இறங்கி அடித்த ஆலுமா டோலுமா, ‘மரண மாஸ்’ கமலுக்கு டிரிபியூட் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘நாயகன் மீண்டும் வரான்’ என அனிருத் மாஸ் ஹீரோக்களுக்கு செய்ததெல்லாம் பார்த்து பார்த்து செதுக்கிய வேலைப்பாடுகள்.

வெறும் இரைச்சல் மட்டுமேதான் அனிருத்தின் இசையில் இருக்கிறதென விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால், அனிருத் எங்கேயும் இளையராஜாவைப் போல ஏ.ஆர்.ரஹ்மானை போல ஆன்மாவை தொடும் இசையை படைக்கப்போகிறேன் என சொன்னதே இல்லையே. அவர் ஒரு கொண்டாட்டத்திற்காகக் குதூகலத்திற்காக இசையமைக்கிறார், அவ்வளவுதான். அவருடைய இலக்கு என்னவோ அதை இசையின் வழி அடையவும் செய்கிறார். ஒரு பெரிய இளைஞர் கூட்டமே அவரின் இசையை ரசிக்கிறது.

அனிருத்

அனிருத்தின் இசை முழுக்க முழுக்க இரைச்சலால் நிரம்பியதுதான் என்பதையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பிரகதியுடன் இணைந்து ‘வணக்கம் சென்னை’ படத்தில் அனிருத் பாடியிருந்த `ஒசக்க..ஒசக்க’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். மதன் கார்க்கியின் வரியிலிருக்கும் தேனி காத்து அப்படியே வருடி சென்றதை போல இருக்கும். வேலைக்காரன் ஆல்பம் பெரிய ஹிட். ஆனால், அதில் அதிகம் கவனிக்கப்படாமல் ‘இதயனே..’ என ஒரு பாடல் இருக்கும். நீத்தி மோகனுடன் இணைந்து அனிருத் பாடியிருப்பார். அனிருத் இசையில் அண்டர் ரேட்டட் என ஒரு பட்டியலிட்டால் இந்தப் பாடலுக்கு முதலிடம் கொடுக்கலாம். இதே அனிருத் – நீத்தி மோகன் கூட்டணி இணைந்து நானும் ரவுடிதான் படத்தின் ‘நீயும்..நானும்..’ காத்துவாக்குல ரெண்டு காதலில் சக்தி ஸ்ரீ கோபாலன், ஐஸ்வர்யா ஆகியோருடன் இணைந்து அனிருத் பாடியிருந்த ‘ரெண்டு காதல்..’ பாடலெல்லாம் உருக்கிவிடும். தெலுங்கில் நானிக்காக `ஜெர்ஸி’ படத்தில் அனிருத் செய்ததெல்லாம் அத்தனை எமோஷனலாக இருக்கும். வேலையில்லா பட்டதாரி படத்தின் ஆக்சன் காட்சிகளை தவிர்த்துவிட்டு முதல் பாதியின் வேடிக்கையான காட்சிகளுக்கு அனிருத் அமைத்திருந்த பின்னணி இசையை கேளுங்கள், ரொம்பவே இலகுவாக லேசாக இருக்கும்.

‘ஒரு இயக்குனரிடம் போய் என்னுடைய பாட்டு எப்படியிருக்கிறதென கேட்கவே மாட்டேன். க்ரூப் டான்ஸர்களில் கடைசி வரிசையில் நிற்பவர் என் பாடலை கேட்டு என்ன சொல்கிறார் என்பதில்தான் கவனம் செலுத்துவேன். படத்தை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர் பாடல்களைக் கேட்டு என்ன சொல்கிறார் என்றுதான் பார்ப்பேன். நான் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்குதான் இசையமைக்கிறேன்.’ என அனிருத் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அனிருத் தன்னுடைய இசை யாருக்கானது என்பது தெளிவான புரிதலோடு இருக்கிறார். அனிருத்தின் இசை – சாமானியர்களின் கொண்டாட்டம்!

Happy Birthday Anirudh!

உங்களுக்குப் பிடித்த அனிருந்த்தின் அண்டர்ரேட்டட் சாங்கை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.