Rain Alert: பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – ரமணன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிகாரிகள் கூட்டத்தை இரு தினங்களுக்கு முன் கூட்டியிருந்தார் தலைமைச் செயலர்

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவரும் கலந்து கொண்டார்.

இவர் வானிலை குறித்துக் கணித்து அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார். இவர் மட்டுமல்லாது இன்னும் சிலரும் கூட இப்படி வானிலை அறிவிப்பு செய்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், ’இந்த மாதிரியான ஆர்வலர்களை அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைத்துக் கருத்து கேட்பது தவறான முன்னுதாரணம் ஆகிடும்’ என்கின்றனர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சிலர். இந்த விவகாரத்தில் வானிலை மைய அதிகாரிகள் பலரும் அப்சட்டாக இருப்பதாகச் சொல்லும் அவர்கள்,

ரமணன்

“வானிலை ஆய்வு மையம்கிறது மத்திய அரசின் ஒரு துறை. அதுக்குன்னு ஊழியர்கள் இருக்காங்க. மண்டல அலுவலகங்கள் இருக்கு. பல இடங்கள்ல மாதிரிகளைச் சேகரிச்சு கூடுதலா செயற்கைக் கோள் மூலம் கிடைக்கக் கூடிய தரவுகளையும் வைத்து அறிக்கை தர்றாங்க. கணிப்புகள் எல்லா நேரமும் நூறு சதவிகிதம் துல்லியமா இருக்காது. இயற்கையை அப்படி யாரும் கணிச்சிட முடியாது. ஆனா ஒரு அரசுத் துறை தர்ற தகவல்ங்கிறதுதான் நம்பகத்தன்மை வாய்ந்ததா இருக்கும்.

சமூக ஊடகத்தினுடைய ஆதிக்கம் பெருகிட்ட காலத்துல இப்படி ஒருத்தரை அரசு அழைச்சு கூட்டத்துல கலந்து வச்சா நாளைக்கு நிறைய பேர் கிளம்பி வருவாங்க. அவங்க எல்லாம் எந்த அடிப்படையில் வானிலையைக் கணிக்கிறாங்க. பொதுமக்களுக்கு ஒரு அவசியத் தேவையான இந்தத் தகவலை சொல்லி முரணா ஏதாவது நடந்தா அதுக்குப் பொறுப்பேத்துக்குவாங்களா, முதல்ல இந்த மாதிரி பொதுநலன் சம்பந்தப்பட்ட விஷயத்துல இவங்க இப்படிச் செல்லலாமா’னு நிறைய கேள்விகள் இருக்கு.

ஏன்னா, இந்திய வானிலை ஆய்வு மையம் சர்வதேச வானிலை அமைப்புடன் டை அப் வைத்து வானிலைத் தகவலைத் திரட்டுது. தனி நபர்கள் செய்திகள், இணையம் மூலமாகவே தகவல் சேகரிக்கிறாங்கனு நினைக்கிறோம். இவங்க சொல்றதுமே சில நேரம் சரியா அமைஞ்சிடுச்சுன்னா அதை வச்சு சரினு முடிவுக்கு வந்துட முடியாது. எனவே அரசு இந்த விஷயத்துல யோசிச்சு முடிவை எடுத்திருக்கணும்’’ என்கிறார்கள் இவர்கள்.

இந்த விவகாரம் குறித்து சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணனிடம் பேசினோம் . ‘’சமூக ஊடகங்கள்ல் நிறைய பேர் இப்பெல்லாம் இப்படி வானிலை அறிக்கை வாசிக்கிறாங்க. இதைப் பத்தி நான் என்ன சொல்றதுன்னு தெரியல. எனக்கு ஒரே கேள்விதான். மழை காலத்துல எதிர்பாராத பேரிடர்லாம் ரொம்பவே சாத்தியம். அந்த மாதிரி சமயங்கள்ல இந்த மாதிரி நபர்களை ஃபாலோ செய்கிறோம்னு வச்சுக்கோங்க, அசம்பாவிதம் ஏதாச்சும் நடந்தா யார் பொறுப்பு ஏத்துக்குவாங்க? அதனால இதெல்லாம் கூடாதுதான், தவறான முன்னுதாரணமாகிடும்’’ என்ற ரமணனிடம், ’சென்ற ஆண்டு வானிலை ஆய்வு மையம் சரியாகக் கணிக்கவில்லை, அங்குள்ள உபரகரணங்கள் பழையதாகி விட்டது’ எனத் தமிழக அரசே குற்றம் சுமத்தியதே’ என்றோம். ‘மத்திய அரசு, மாநில அரசுனு அதுல ஏதாச்சும் அரசியல் இருக்கானு எனக்குத் தெரியல. ஆனா வானிலை ஆய்வு மையத்தில் கருவிகள் காலாவதியாகிடுச்சுங்கிறதையெல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன். இந்திய வானிலை ஆய்வு மையம் தன் வேலையைச் சரியாகவே செய்திட்டிருக்கு’’ என்றார் அவர். ரமணன் அவர்களின் கருத்து குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.