டெல்அவிவ்: அக்.7 இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இறந்தது அவர்தானா என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்ய இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கவும் சாத்தியம் உள்ளது. இந்த கட்டத்தில், கொல்லப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. பயங்கரவாதிகள் இருந்த கட்டிடத்தில் பணயக் கைதிகள் யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் கிடைத்தபிறகே கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியும்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக யஹ்யா சின்வர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் யஹ்யா கொல்லப்பட்டது எதேச்சையான நிகழ்வுதான் என்றும், இது உளவுத் துறை அளித்த தகவலின்படி நடந்த தாக்குதல் அல்ல என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை டிஎன்ஏ பரிசோதனையில் கொல்லப்பட்டது யஹ்யா சின்வர்தான் என்பது உறுதியானால், அது ஹமாஸுக்கு எதிரான கடந்த ஓராண்டு கால இஸ்ரேலின் போரில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படும். 80-களில் ஹமாஸ் இயக்கத்தில் சேர்ந்த யஹ்யா, அதன் ராணுவப் பிரிவில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தார். கடந்த ஜூலையில் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டபிறகு ஹமாஸின் புதிய தலைவராக யஹ்யா பொறுப்பேற்றுக் கொண்டார்.