பெங்களூருவில் கன‌மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடுகள், நிறுவனங்களில் வெள்ளம்

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இரவிலும் பகலிலும் விட்டுவிட்டு பெய்துவரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஒசூர் சாலை, ஹெப்பால் சாலை, மைசூரு சாலை ஆகியவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. எனவே அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகினர்.

ஒயிட் ஃபீல்ட், ஐடிபிஎல், மான்யதா ஆகிய‌ பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளாகத்தில் மழை வெள்ளம் புகுந்தது. அங்கு பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் காரில் செல்ல முடியாமல், முழங்கால் வரையிலான‌ நீரில் இறங்கி சென்றனர்.

மஹாதேவபுரா, மாரத்த ஹள்ளி, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலையோரங்களில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே கர்நாடக‌ வானிலை ஆய்வு மையம், ‘‘பெங்களூருவில் கடந்த 24 மணி நேரத்தில் 17.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெங்களூருவை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய உள்ளது’’ என தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.