இந்திய அணியை தூக்கிச் சாப்பிட்ட வில் ஓ ரூர்க்… ஐபிஎல் ஏலத்தில் இந்த 3 அணிகள் கொக்கி போடும்!

IPL Mega Auction 2025: ஐபிஎல் மெகா ஏலம் குறித்த விதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. அக். 31ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தாங்கள் யாரை மெகா ஏலத்திற்கு முன் தக்கவைக்கிறோம் என்ற பட்டியலை அறிவிக்க வேண்டும். அதில், யார் யாரை எந்தெந்த தொகையில் அணிகள் தக்கவைக்கிறது என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்னும் 13 நாள்களே உள்ளது என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தை நெருங்கி வருகிறது. 

ஐபிஎல் தக்கவைப்பு ஒருபுறம் இருக்க ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது எனலாம். நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதத்தின் முதலிரண்டு மாதங்களிலோ ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறலாம். 10 அணிகளும் புத்தம் புதிய வீரர்களை தங்களது அணியில் எடுக்க முட்டிமோதும் எனலாம். இந்திய வீரர்கள் ஒருபுறம் என்றால் வெளிநாட்டு வீரர்களுக்கும் நல்ல மவுசு இருக்கும்.

வெளிநாட்டு வீரர்களுக்கு ‘மவுசு’

கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் ரூ.20 கோடிக்கும் மேல் போனார்கள். தற்போது மெகா ஏலத்தில் பர்ஸ் தொகை ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மெகா ஏலத்திற்கு முன் நீங்கள் 5 வீரர்களை தக்கவைத்தால் அதற்கு ரூ.75 கோடியை செலவிட வேண்டும். எனவே, பெரும்பாலான வீரர்கள் அந்த 5 Capped வீரர்களில் 2-3 வீரர்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை ஏலத்தில் RTM மூலம் எடுக்க நினைப்பார்கள். 

இதனால் ஏலத்தில் அதிக தொகையிலும் வரலாம், RTM மூலம் ஒரு வீரரை பிடித்த தொகையில் எடுத்துக்கொள்ளலாம். RTM விதிகள் அணிகளுக்கு தலைவலியை கொடுத்தாலும் அதிலும் சில வியூகங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் ஏலத்தில் வரும் புதிய வீரர்கள் மீதும் கவனம் செல்கிறது. அந்த வகையில், பெங்களூருவில் நேற்று தொடங்கிய இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீசினார். மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் கூட ஓ ரூர்க் தனித்து தெரிந்தார். 

இந்த 3 அணிகள்

அதற்கு முக்கிய காரணம் அவரின் உயரம் எனலாம். 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட ஓ ரூர்க், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், பும்ரா ஆகியோரின் விக்கெட்டை எடுத்திருந்தார். இவரின் உயரத்தால் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்சர்கள் நேற்று விராட் கோலி போன்ற ஜாம்பவானையே நிலைகுலைய செய்ததை கவனிக்க வேண்டும். இந்நிலையில், இவரும் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் நிச்சயம் கவனிக்கப்படுவார். ஒருவேளை இவர் ஏலத்திற்கு வந்தால் இந்த 3 அணிகள் நிச்சயம் இவரை எடுக்க துடிக்கும். 

1. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மிட்செல் ஸ்டார்க் அடுத்த முறை கிடைப்பாரா என தெரியாதபட்சத்தில் கேகேஆர் இவரை எடுக்க துடிக்கும். பவர்பிளே மட்டுமின்றி மிடில் ஓவரிலும், டெத் ஓவரிலும் இவர் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. வேரியேஷன்களையும் இவர் வைத்திருந்தால் கேகேஆர் அணிக்கு ஜாக்பாட்தான். இவரை 4-5 கோடிக்குள் கேகேஆர் எடுக்க நினைக்கும்.

2. மும்பை இந்தியன்ஸ்

எப்போதுமே இடதுகை வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி செல்லும். செம்மண் ஆடுகளங்களில் ஓ ரூர்க் திறன் இன்னும் சோதிக்கப்படவில்லை என்றாலும் இவரை குறைந்த விலையில் எடுத்து குறைந்தபட்சம் பெஞ்ச்சை வலுவாக்க நினைக்கும். 

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இவரை போன்ற மற்றொரு நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஜேமீசனை ஆர்சிபிதான் அதிக தொகை கொடுத்து எடுத்தது. ஆர்சிபியின் பிளான் சரியாக இருந்தாலும் அது வொர்க் அவுட்டாகவில்லை. எனினும், வில்லியம் ஓ ரூர்க் சின்னசாமியின் செய்த மாயாஜாலத்தை கணக்கில்கொண்டு ஆர்சிபி இவரை நிச்சயம் சுமாரான தொகைக்கு எடுக்கும். வில்லியம் ஓ ரூர்க்கை பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் கூட நல்ல விலையில் எடுக்க நினைக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.