தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் – ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு முன்னேறக் கூடிய வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று புத்தசாசனம், மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மன்றம் ஆகியவற்றிற்கான பணிப்பாளர் சபையை நியமிக்கும் நிகழ்வு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் தனிப்பட்ட இலாபம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் புதிய நிர்வாக சபை தலையிட்டு நியாயமான முறையில் திரைப்படங்களை வெளியிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2004/2005 காலப்பகுதியில் அனைத்து (சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்) சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாகவும், தமிழ் சினிமாவை இந்த நாட்டில் இன்னும் ஒரு தொழில்துறையாக நிலைநிறுத்த முடியவில்லை என்றும், எதிர்காலத்தில் தமிழ் சினிமாவை இந்த நாட்டில் ஒரு தொழில்துறையாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை மன்றம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் இலங்கை மன்றத்தில் காணப்பட்ட பலவீனங்களை தடுத்து, தற்போதைய அதிகாரிகள் நேரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அங்கு, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அரசு கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.  ப்ரின்ஸ் சேனாதீர நியமிக்கப்பட்டார். மற்றும் கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன, எம்.  டி.  மஹிந்தபால, டபிள்யூ.  ஜி.  டிதிர விக்மல், சட்டத்தரணி தக்ஷிகா திசரங்கனி பெரேரா, எம்.  எஸ்.  கே.  ஜே.  பண்டார, பி.  என்.  தம்மிந்த குமார,  வை.  ஐ.  டி. குணவர்தன ஆகியோர் சக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது.

இலங்கை மன்றத்தின் தலைவராக எஸ்.எம்.  சமன் சமரக்கோன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், பேராசிரியர் கே.  எஸ்.  வன்னியாராச்சி, கலாநிதி ஏ.  எம்.  எஸ்.  அத்தபத்து, பொறியாளர் டி.  எஸ்.  கே.  எஸ்.  ஜயலத், எம்.கே.  பிரசங்க சதுரங்க, பி.டபிள்யூ.  டி.  நிசரங்கனி பெரேரா, ஜி.  எச்.  வை.  மஞ்சுள சிறிசெங்ம, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கலாநிதி எம்.கே. டி பாஸ்குவேல், மற்றும் ஐ.  ஜி. சுலக்கனா குமாரி ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.