ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? – போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுவது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், மூன்று பேருந்துகளுக்கு `TN74 N 1813′ என்ற ஒரே பதிவெண் உள்ளதாக, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவிவருகின்றன. அதில் ஒரு பேருந்து 431 திருவனந்தபுரம் எனவும், மற்றொரு பேருந்து 9-ஏ மேல்மிடாலம் எனவும்… மற்றொரு பேருந்து 9-ஏ மகளிர் விடியல் பேருந்து மேல்மிடாலம் எனவும் போர்டு வைத்து வெவ்வேறு வண்ணங்களில் இயங்குவதாக புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தன.

அரசு போக்குவரத்துக் கழகமே அரசை ஏமாற்றுவதாகவும் கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில், இதில் உண்மை இல்லை எனவும், இதனை பலர் அறியாமையால் பகிர்ந்து வருவதாகவும், நாகர்கோவில் போக்குவரத்து கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி கூறுகையில், “இந்த பேருந்து வந்த புதிதில் 08.02.2017 அன்று புறநகர் பேருந்தாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டது. அப்போது அந்த பேருந்தில் பச்சை வண்ண பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது.

ஒரே பதிவெண் கொண்ட அரசுப் பேருந்து

பிறகு, TN74 N 1813 அதே பேருந்தின் வண்ணம் மாற்றப்பட்டு எஃப்.சி காட்டப்பட்டு, 04.01.2020 முதல் நகரப் பேருந்தாக மேல்மிடாலத்துக்கு இயக்கப்பட்டது. பின்னர் அரசு ஆணைப்படி அந்த பேருந்தின் கூண்டு புதுப்பிக்கப்பட்டு 07.10.2023 முதல் நாகர்கோவில் மேல்மிடாலம் வழித்தடத்தில் மகளிர் விடியல் பேருந்தாக இயக்கப்படுகிறது.

ஒரே பதிவெண் கொண்ட பேருந்து

ஒரே பதிவெண் கொண்ட மூன்று பேருந்துகள் அல்ல, ஒரே பேருந்துதான். மூன்று கட்டங்களில், மூன்று தோற்றங்களில், மூன்று வழித்தடங்களில் ஓடியது. இதில் எந்த குழப்பமும், சர்ச்சையும் இல்லை. ஆனால் இதையே ஒரு சர்சையாக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தையும், தமிழக அரசயையும் குறை கூறி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். இப்படி பொய்யாக சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஒரே பேருந்து வண்ணம் மாறும்போதெல்லாம் போட்டோ எடுத்து வைத்துவிட்டு, இப்போது பதிவிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.