கொல்கத்தா விவகாரம்: 15வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர்கள்

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த டாக்டருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், செப். 16ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அதில் டாக்டர்கள் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை. இதனால் டாக்டர்கள் போராட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாறியது. இன்றுடன் 15வது நாளாக ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுவரை 6 டாக்டர்கள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 21ம் தேதிக்குள் மாநில அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து 8 டாக்டர்கள் தற்போது காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 22ம் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.