திருநெல்வேலி: நெல்லையில் ஜால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்தது தொடர்பாக அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ள நிலையில், அந்த மையத்தில் சமூக நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று (சனிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டனர்.
ஜால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களை பயிற்சி நிர்வாகி ஜலாலுதீன் பிரம்பால் தாக்கியது, அவதூறாக பேசியது, காலணியை வீசியது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் பற்றி அங்கு விடுதிக் காப்பாளராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலி தாழையுத்தைச் சேர்ந்த அமீர் உசேன் என்பவர் மாணவர்களை தாக்குவது போன்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் மற்றும் காலணியை மாணவி மீது வீசுவது உள்ளிட்ட சம்பவங்களை வீடியோ ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, மேலப்பாளையம் போலீசார் இளம் சிறார் நீதி சட்டம் மற்றும் ஐபிசி 150 (II), 133 உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசனும் பயிற்சி மையத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தன்ஷிகா பேகம் மற்றும் பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி உள்ளிட்ட அலுவலர்கள் இந்தப் பயிற்சி மையத்தில் இன்று (சனிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பயின்று வரும் மாணவிகள் விடுதியையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த விடுதியில் 30 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இந்தப் பயிற்சி மைய மாணவிகள் தங்கும் விடுதி அரசின் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விடுதி செயல்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு சமூக நலத்துறை சார்பில் பயிற்சி மையத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் விடுதிகள் தொடர்பான அனுமதி பெறுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கியும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான விசாரணை தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்புத் துறை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளது. காவல் துறையினரும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும், மாணவர்களின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.