ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை இண்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரன், “ஒவ்வொரு அரசியல் கட்சியும் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த தேர்தலை இண்டியா கூட்டணி தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அம்சமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகளும் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 11 இடங்களில் ஆர்ஜேடி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் போட்டியிடும்” என தெரிவித்தார்.
ஒவ்வொரு கட்சியும் போட்டியிடும் சரியான எண்ணிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஹேமந்த் சோரன், “தற்போது இதை மட்டுமே நாங்கள் முடிவு செய்துள்ளோம். சரியான தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பான பிற தகவல்கள் விரைவில் பகிரப்படும். எங்களின் கூட்டணி கட்சிகளில் சில தற்போது இல்லாததால், என்னால் அதிக தகவல்களைப் பகிர முடியாது. அவர்கள் இங்கு வந்ததும், தொகுதிகள், வேட்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் என அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்வோம்” என குறிப்பிட்டார்.
கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலின்போது ஜேஎம்எம் 43 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 இடங்களிலும் போட்டியிட்டு 16 இடங்களிலும், ஆர்ஜேடி 7 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இன்று ராஞ்சியில் ஹேமந்த் சோரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, பாஜக 68 இடங்களிலும், ஏஜேஎஸ்யு 10 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களிலும், சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.