Bhumika `'கன்னத்தில் முத்தமிட்டால்' Miss பண்ணிட்டேன்’ – `ஆப்பிள் பெண்ணே’ பூமிகா ஷேரிங்ஸ்

“நீங்கள் தேர்ந்தெடுத்து நடித்த படங்களின் தாக்கம் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது. அது அழகான நினைவுகளை தந்து கொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் உங்களுக்கு எப்படியானது?”

“நான் நடித்த படங்களின் நினைவுகள், என்றும் அழியாத அழகான அனுபவ நினைவுகளாக உள்ளது. ஏனெனில் மக்கள் நான் நடித்த அனைத்து படங்களையும் ரசித்து பார்த்து, எனக்கு நிறைய அன்பு தருகிறார்கள். இப்போதும் கூட நான் நடித்த பல படங்களை நினைவு கூர்ந்து ரசிக்கின்றனர். நான் நடித்த ‘ஆப்பிள் பெண்ணே’ பாடல் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. மக்கள் இன்றும் அதை ரசித்துப் பார்ப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இனிமையான நினைவுகள் என்னுடைய வாழ்க்கையை அழகாக, சிறப்பாக, மதிப்பு மிக்கதாக வைத்துக் கொண்டிருக்கிறது.”

“ரோஜா கூட்டம் படத்தில் வரும் ஆப்பிள் பெண்ணே பாடல் பெரிய ஹிட் ஆனது. அதேபோன்று நீங்கள் நடித்த படங்களை பார்க்கும் போது, ‘அட, இந்த படங்களில் நன்றாக நடித்திருக்கிறேன்’ என்று தோன்றும் படங்கள் குறித்து சொல்லுங்களேன்..!”

“நான் சில நேரங்களில் யோசிப்பேன். நான் என்னென்ன படங்களில் நடித்திருந்தேனோ அதில் முழுமையாக என்னுடைய உழைப்பை உணர்வுபூர்வமாக கொடுத்துள்ளேன். நான் இத்தனை வருடத்தில் மிகவும் தேர்ந்தெடுத்து ஒரு ஏழு எட்டு படங்கள் தான் பண்ணினேன். ஆனால் அந்த அனைத்து படங்களிலும் நான் நன்றாக நடித்துள்ளேன் என்று நினைக்கிறேன். அந்த நினைவுகள் எல்லாம் எனக்கு மிகவும் இனிமையானது அழகானது.”

“`சில்லுனு ஒரு காதல்’ படத்தில் வரும் “முன்பே வா” பாடல் இன்றும் அனைவருடைய பாடல் வரிசையிலும் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?”

“மிக அழகான பாடல். அதில் உள்ள இசை மிகவும் ரசிக்கத்தக்கது. நான் சமீபமாக பிரதர் (Brother) திரைப்பட படப்பிடிப்பிற்கு ஊட்டியில் இருந்து வந்து கொண்டிருக்கையில்,ஒரு இடத்தில் டீ குடிக்க நின்றோம். அப்போது ஒரு காரில் நான்கு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். என்னை பார்த்ததும் காரில் ‘முன்பே வா’ பாடலை போட்டு அதிக சத்தமாக வைத்து கேட்டனர். நாங்கள் செல்லும் வரை அதே பாடலை மீண்டும் மீண்டும் போட்டு கேட்டு கொண்டே இருந்தனர்.”

“அக்கா தம்பி பாசம் அனைவருக்குமே நன்றாக தெரியும். பிரதர் (Brother) படத்தில் அக்கா தம்பியாக உள்ள கதைகளத்தில் அக்காவாக நடித்துள்ளீர்கள். அது குறித்து..?”

“நான் எனது இயக்குநர் சொன்னபடி எல்லாவற்றையும் அப்படியே நடித்தேன். நான் எப்போதுமே இயக்குநர் என்ன கூறுகிறாரோ அதை அப்படியே செய்வேன். மற்றபடி இதை இப்படி செய்யலாம் இன்னும் கூடுதலாக நன்றாக இருக்கும் என்று தோன்றினால் மட்டும் இயக்குநரிடம் கூறுவேன். படத்தின் தலைப்பே கூறும் வகையில் இது ஒரு அழகான அக்கா தம்பி பாசத்தை காட்டும் ஒரு குடும்ப படம். சிரிப்பு, அழுகை, சந்தோஷம், நகைச்சுவை என அனைத்து விதமான உணர்வுகளையும் நீங்கள் இந்த படத்தில் பார்க்கலாம்.”

“சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை பிரியங்கா மோகன் கேட்டிருப்பார், “நீங்கள் இயக்கிய குஷி படத்தில் நடித்த மூன்று நடிகைகளில் யார் நன்றாக நடித்தனர்?” என்று, அதற்கு அவர் ஜோதிகாவை கூறினார். ஆனால் அரங்கில் இருந்த ரசிகர்கள் பூமிகா என்றனர். அப்போது எஸ்.ஜே. சூர்யாவே ரசிகர்கள் பூமிகாவை விரும்பினர் என்று வியந்தார். அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?”

“அனைவருமே நன்றாக நடித்திருந்தோம். ஜோதிகா மிகவும் அழகாக வெகுளியான அன்புடையவராக நடித்திருந்தார். எனக்கு குஷி படத்தில் ஜோதிகாவை மிகவும் பிடித்திருந்தது. நான் மிகவும் ரசித்தேன். நான் இந்த படத்தின் ரீமேக்கில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அனைத்து பாராட்டும் இயக்குநரை தான் சேரும்.”

“இயக்குநர் என்.கிருஷ்ணாவிடம் மக்கள் அனைவரும் எப்போது சில்லுனு ஒரு காதல் பாகம் 2 எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்கின்றனர். சில்லுனு ஒரு காதல் பாகம் 2 எடுப்பதாக இருந்தால் நீங்கள் நடிப்பீர்களா?”

“எனக்கு தெரியவில்லை. அது இயக்குநரையும் தயாரிப்பாளரையும் சார்ந்தது. அவர் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினால் நான் நடிப்பேன்.”

“எம்.எஸ்.தோனி(M.S.Dhoni) படம் அனைவருக்கும் நெருக்கமான படம். பல காரணங்களால் அப்படம் பிடித்து இருந்தது. ஆனால் முக்கிய காரணம் சுஷாந்த் சிங். அவர் இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய படங்கள் நம்முடன் இருக்கிறது. படத்தில் நீங்கள் அவருடைய அக்காவாக நடித்திருந்ததை எவ்வாறு உணர்ந்தீர்கள்? அவருடைய மரணத்திற்கு பிறகு தங்களுடைய தம்பியுடன் எவ்வாறு உணர்கிறீர்கள்?”

“எனக்கு சரியாக சொல்ல தெரியல. அந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம். ஏனெனில் அது நான் நடித்த இரண்டாவது வாழ்க்கை வரலாறு பற்றிய படம். முதலாவதாக ‘காந்தி மை ஃபாதர்’ (Gandhi My Father) என்பதில் நான் நடித்தேன். ஒரு நடிகையாக வாழ்க்கை வரலாறு படத்தில் நான் பங்காற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படம் அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரை பற்றியது.

நான் அவருடைய அக்காவாக நடித்திருந்தேன். மற்றபடி அப்போது நான் அக்காவாக நடிப்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் அந்த படத்தில் நான் அதை விரும்பி ரசித்து நடித்தேன். ஏனெனில் அவ்வாறு ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிது .அந்த படத்தில் அக்காவும் அவனுடைய வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாள். அதே போல் தான் என்னுடைய தம்பியுடன் நான் அனைத்தையும் பகிர்ந்து கொள்வேன், நாங்கள் தினமும் பேசிக்கொள்ள மாட்டோம். ஆனால் தொடர்பில் தான் இருப்போம். நாங்கள் இருவரும் இருவருக்குமான மதிப்பையும் புரிதலையும் வைத்துள்ளோம். என்னுடன் அவன் எப்போதும் இருக்கின்றான் இருப்பான்.”

“நீங்கள் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக யோசித்து தேர்ந்தெடுத்து நடிப்பதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் தேடி தேர்ந்தெடுத்து நடிப்பதற்கான காரணம் என்ன?”

“நீங்கள் அனைத்தையும் எப்போதுமே செய்து விட முடியாது. நீங்கள் உங்கள் மனதை அதில் முழுதாக செலுத்த வேண்டும். வெறும் வேலை நிமித்தமாக கடனுக்கு செய்யக்கூடாது. உங்களுக்கு உணர்வு பூர்வமாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் மனமகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். நாம் செய்யும் வேலை முக்கியம் ஆனால் வேலையை பொறுப்புடன் பிடித்து செய்ய வேண்டும்.”

“வாழ்க்கையில் தவறுகள் ஏற்படுவது இயல்பு. பல நடிகர்கள் ‘தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும்’ என்று நினைத்து இருப்பார்கள். பின் முடியாமல் போயிருக்கும். ஆனால் அந்த படம் பெரிய ஹிட் ஆகியிருக்கும். அப்படி நீங்கள் தவறவிட்ட பட வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா?”

“ஆம் நான் நடிக்க வேண்டும் என்று நினைத்த சில படங்கள் நடிக்க முடியாமல் போய்விட்டது. தெலுங்கில் அஷ்ட சம்மா (Ashta Chamma) என்ற படம் ஹிட்டானது. அதற்கு முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் திருமணம் காரணமாக என்னால் நடிக்க முடியவில்லை. அது போல் தமிழில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிக்கவில்லை. அப்போது நான் அம்மா கதாபாத்திரத்திற்கு ஒத்துப் போகவில்லை என்று எண்ணுகிறேன்.”

“நடிகர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வதை பற்றிய உங்கள் கருத்து என்ன?”

“ஒருவர் அவர்களின் வாழ்க்கையை எதில் கொண்டு செல்ல போகிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம். நீங்கள் உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்வதற்கு விரும்பினால் அரசியலில் வரலாம். ஆனால் உங்களுக்கு வேறு எண்ணங்கள் இருக்கிறது என்றால் அரசியலுக்கு போக தேவை இல்லை.”

“நீங்கள் ஒரு அம்மாவாக இருந்து உணர்கின்ற விஷயங்கள் என்னென்ன?”

“அம்மாவாக இருப்பது அற்புதமான சவாலான ஒன்று. ஏனெனில் நீங்கள் ஒரு குழந்தையை இந்த உலகிற்கு கொண்டு வந்து ஒரு நல்ல மனிதனாக வளர்கிறீர்கள். ஒரு ஆசிரியராக, நண்பராக, அறிவுரையாளராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நான் ஏதும் தவறு செய்கிறேனா நான் சரியாக செய்கிறேனா என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொள்வேன். நீங்கள் உங்கள் முழுமையை அம்மாவாக தரவேண்டும். அனைத்தையும் சிறப்பாக உயர்வாக கற்றுத் தர வேண்டும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.