புதுடெல்லி: “மான் வேட்டை விவகாரத்தில் எனது மகன் சல்மான் கான் மன்னிப்பு கேட்க மாட்டார்” என அவரது தந்தையான சலீம் கான் தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாபா சித்திக் மும்பையில் அக்டோபர் 12-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கான பொறுப்பை சர்வதேச குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல ஏற்கெனவே லாரன்ஸ் குறிவைத்த விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.
இதன் பின்னணியில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1998, அக்டோபரில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்ட சல்மான் மீது கிளம்பிய சிங்காரா மான் வேட்டை புகார் காரணமானது. வனம் மற்றும் வனவிலங்குகளை கடவுளாகக் கருதும் பிஷ்னோய் சமூகத்தினர், சல்மான் கான் மீது வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு, ராஜஸ்தானின் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. மான் வேட்டை சம்பவம் நடந்த போது ஐந்து வயது சிறுவனாக இருந்தார் பஞ்சாபியான லாரன்ஸ் பிஷ்னோய்.
லாரன்ஸ் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-இல் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக ஆஜரானவர் முதன்முறையாக, மான் வேட்டையாடிய சல்மானை தான் கொல்ல இருப்பதாக அறிவித்திருந்தார். பின்பு ஒருமுறை ஜோத்பூரிலுள்ள பிஷ்னோய் சமூகத்தின் கோயிலுக்கு சென்று சல்மான் மன்னிப்பு கேட்டால் விட்டு விடுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த மன்னிப்பு விவகாரமும் தற்போது கிளம்பியுள்ளது.
சல்மான் கானின் முன்னாள் காதலியான சோபி அலி, தனது சமூக வலைதளப் பதிவில் லாரன்ஸுக்கு தகவல் அனுப்பியிருந்தார். அதில் அவர், சல்மானை மன்னிக்கும்படியும், தான் லாரன்ஸிடம் பேசி விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழலில், நடிகர் சல்மான் கானின் தந்தையான சலீம் கான் மான் வேட்டை புகார் குறித்து பேட்டி அளித்துள்ளார். இதில் அவர், “எனது மகன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சலீம் கான், “மான் உள்ளிட்ட எந்த வகை வேட்டையிலும் எனது மகன் ஈடுபட்டதில்லை. இதுநாள் வரை அவர் ஒரு கரப்பானையும் கொன்றது கிடையாது.
எனது குடும்பம் வன்முறையை விரும்புவது இல்லை. விலங்குகளை மிகவும் விரும்பும் சல்மான் கான் அவற்றை கொல்ல என்றுமே முயன்றதில்லை. எனவே, யாரிடமும், எதற்காகவும் எனது மகன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எந்தவிதமானக் குற்றச் செயல்களிலும் அவர் ஈடுப்பட்டதும் கிடையாது.’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சர்வதேச குற்றவாளியான லாரன்ஸ் தனது சொந்த விளம்பரத்துக்காக பிஷ்னோய் சமூகத்தை பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்களும் கிளம்பியுள்ளன. ஜோத்பூரில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் ஊடகங்களில் லாரன்ஸை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.