இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பிளடி பக்கர்’.
இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நெல்சன், ” சிவபாலன் எனக்கு 15 வருடப் பழக்கம். ஜெயிலர் படம் வரை என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
ஜெயிலர் படத்தின்போதுதான், இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அப்படியே படத்தையும் நீங்களே தயாரியுங்கள் என்றார். அப்போது ஜெயிலர் படம் இயக்கிக் கொண்டிருந்ததால் இந்த படம் வெற்றி அடைந்தால் படம் தயாரிக்கிறேன் என்றேன். ஜெயிலர் படம் வெற்றியடைய வேண்டும் என என்னை விட சிவபாலன் அதிகம் வேண்டியிருப்பார். பிறகு ஜெயிலரும் வெற்றியடைந்தது. அதன்பின் யோசித்தேன், நான் படம் தயாரிப்பது எனக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். எனவே இந்த படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். நான் கவினை வைத்து இந்த படத்தை இயக்குகிறேன் என சிவபாலன் கூறினார்.
அப்போது ‘டாடா’ படம் கூட வெளியாகவில்லை, அந்த நேரத்தில் கவின் வேண்டாம் என முதலில் நான்தான் மறுத்தேன். உன்னுடைய நட்பை ஒதுக்கிவை என்றேன். அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால், அதை நேரம் வரும்போது நானே செய்கிறேன் என்றேன். தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களிடம் பேசலாம் என சொன்னேன். ஆனால் கவின்தான் நடிக்க வேண்டும் என சிவபாலன் உறுதியாக இருந்தார்.
அதன் பிறகு கவினுக்கு லுக் டெஸ்ட் செய்து காண்பித்தனர், பிறகு ஓரளவிற்கு நம்பிக்கை வந்தது. பெரிதாக நான் படத்தில் தலையிடவில்லை. நான் தான் தயாரிப்பாளர் என்பதற்காகப் படப்பிடிப்பு தளத்தில் சுற்றினேன். ஒட்டுமொத்த படம் முடித்த பிறகு படம் பார்த்தேன், ஆச்சர்யம் அடைந்தேன். இந்த படத்தில் சிவபாலனைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் கவின் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் கவின் நடிக்க வேண்டாம் என மறுத்தது தவறு என புரிந்து கொண்டேன்.
நான் படம் தயாரிக்கக் காரணமே புதுவிதமான கதைக்களம்தான். த்ரில்லர் கதையை டார்க் காமெடியுடன் சேர்த்து அற்புதமாகச் செய்திருக்கிறார். ‘பிளடி பக்கர்’ படத்துடன் நண்பர் சிவகார்த்திகேயனின் அமரனும், ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படம் ஒன்றாக தீபாவளிக்கு வருகிறது. மூன்று படமும் வெற்றியடைய வேண்டும்.
பணம் உள்ளதே என தயாரிக்கக் கூடாது, படம் தீர்மானிக்க வேண்டும். நண்பர்களுக்காக படம் செய்யக் கூடிய ஆள் நான் இல்லை.” என்று பேசியிருக்கிறார்.
நெல்சன் பேசியவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…