`’சார்’ போஸ்டர்.. பக்கத்துலயே அம்மாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’ – தாயை இழந்து தவிக்கும் போஸ் வெங்கட்

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் அம்மா ராஜாமணி நேற்று காலமானார். வயோதிகம் காரணமாக கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரின் உடல் அடக்கம் இன்று அவரது சொந்த ஊரான அறந்தாங்கியில் நடக்கிறது.

நேற்று போஸ் வெங்கட் இயக்கிய ‘சார்’ படம் ரிலீஸ் ஆன நிலையில் அதே நாளில் அவரது அம்மாவின் உயிரும் பிரிந்திருக்கிறது. தாயை இழந்த துயரத்திலுக்கும் போஸ் வெங்கட்-க்கு நாம் நமது இரங்கலைத் தெரிவித்தோம்.

அப்போது அம்மா நினைவுகளை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

போஸ் வெங்கட் அம்மாவுடன்

“நான் இயக்குநராகணும்னு என்னை விட அதிக ஆசைப்பட்டது எங்க அம்மாதான். சினிமாவுக்காக சென்னை வந்து பல வகையில கஷ்டப்பட்டப்பெல்லாம் எனக்கு தைரியம் தந்து ’ஒரு நாள் உன் ஆசை நிச்சயம் நிறைவேறும்’னு சொல்லிட்டே இருப்பாங்க. ‘வீட்டுல இருக்கிற மத்தவங்களைப் பத்தி யோசிச்சா, `வீட்டைப் பத்திக் கவலைப்படாம நீ அங்க வேலை பாரு; இங்க நான் பார்த்துக்கறேன்’னு சொல்வாங்க.

அவங்க தைரியம்தான் என்ன வழிநடத்துச்சுன்னே சொல்வேன்.

’கன்னி மாடம்’ படம் அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. இடைவெளி விடாம தொடர்ந்து படம் இயக்கச் சொல்லிட்டே இருந்தாங்க. நடிகர் போஸ் வெங்கட்டை விட இயக்குநர் போஸ் வெங்கட்டைத்தான் அவங்க பாக்கனும்னு ஆசைப்பட்டாங்க.

சென்னையில் எங்கூடதான் இருந்தாங்க. ‘சார்’ படம் ரிலீஸுக்கு முன்னாடியே பார்க்க ஆசைப்பட்டாங்க. ஆனா படம் முடியாம இருந்ததால அவங்களுக்குப் போட்டுக் காட்ட முடியலை. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி அவங்க சொந்த ஊருக்குப் போகணும்னு சொன்னதால கொண்டு போய் விட்டோம். அக்கா, அண்ணிங்கனு அங்கயும் எல்லாரும் அவங்களை நல்லாவே பார்த்துக்கிடுவாங்க.

angaadi

படம் ரிலீசானதும் எப்படியாச்சும் அவங்களுக்குக் காட்டிடணும்னு இருந்தேன். ஆனா ரிலீசுக்கு முந்தைய நாளே உடல் நிலை சரியில்லாம மருத்துவமனையில சேர்க்கற மாதிரி ஆகிடுச்சு.

நேத்து காலையில் படம் ரிலீஸாகி மதியவாக்குலதான் ரிசல்ட் பத்தி ஒரளவு பாசிடிவா தகவல் வரத் தொடங்குச்சு. அந்தத் தகவல் வரறதுக்கும், ‘அம்மாவுக்கு ரொம்பவே சீரியஸா இருக்கு’னு ஊர்ல இருந்து தகவல் வர்றதுக்கும் சரியா இருந்துச்சு. நான் சென்னையில இருந்து கிளம்பி போறதுக்கு முன்னாடியே அவங்க உயிர் பிரிஞ்சுடுச்சு.

டிரெய்லர் பார்த்துட்டு கொஞ்ச நாள் முன்னாடி விமலை வீட்டுக்கு வரவழைச்சு கட்டிப்பிடிச்சு கன்னத்தைக் கிள்ளிப் பாராட்டினாங்க. ஆனா படத்தைப் பார்க்காமலேயே போயிடாங்கங்கிறதை நினைக்கிறப்பதான் வருத்தமா இருக்கு. விமல் அஞ்சலி செலுத்து இன்னைக்கு ஊருக்கு வந்துட்டிருக்கார். நள்ளிரவுல நான் அறந்தாங்கி வந்து இறங்கினப்ப ஊர் முழுக்க ‘சார்’ பட போஸ்டர். ஆனா இன்னைக்கு எங்கம்மாவுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர். என்னனு சொல்றது’ என நா தழுதழுக்க பேசினார் . ஆழ்ந்த இரங்கல்கள் போஸ் வெங்கட்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.