கோவை: “மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும்,” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பாஜக மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (அக்.19) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “விமானத்தில் நான் வந்த ஒரு மணி நேரத்துக்குள் முதல்வர் ஸ்டாலின் ஏதாவது ட்வீட் போட்டு இருக்கிறாரா? தமிழுக்கு திமுகவினர் மட்டுமே உரிமையானவர்கள் என்பது போல பேசுகின்றனர். பாஜக தமிழ்ப் பற்று இல்லாதவர்கள் என காட்ட முயற்சிக்கின்றனர். இதற்கான வெளிப்பாடுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது. ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா என முதல்வர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
தமிழைச் சொல்லி மக்களை ஏமாற்றினோம். இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். மற்றொரு மொழியை சொல்லி தமிழை யாரும் சிறுமைபடுத்த முடியாது. மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும். ‘இந்தி இசை’ என விமர்சனம்: என்னை கூட ‘இந்தி இசை’ என விமர்சிக்கின்றனர். தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. திமுகவினரின் குழந்தைகள் எத்தனை பேர் தமிழை படிக்கின்றனர்.
தமிழ்த்தாய் வாரம் கொண்டாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து விடுபட்டதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்ததாக காட்ட முயற்சிக்கின்றனர். தெரியாமல் செய்த தவறை பெரிதாக்குகின்றனர். எதையாவது பூதாகரமாக செய்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். இந்த இரட்டை வேடத்தை கண்டிக்கின்றோம்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்தி தினத்தை வாழ்த்தி பேசி விட்டு இப்போது இந்தியை எதிர்த்து பேசுகிறார். தமிழ் மொழிப்பாடத்தில் சில மாணவர்கள் தேர்ச்சி பெறுவது இல்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளி பலகையில் உருது மொழியில் எழுதுகிறார். இது மும்மொழியா அல்லது நான்கு மொழியா என்பதை அவர் விளக்க வேண்டும். சின்ன பிரச்சினையை பெரிதாக்க முயல்கின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவறுகளை திருத்த திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மகிழ்ச்சி. ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சொன்னது போல சனாதானத்தை எதிர்த்தவர்கள் காணாமல் போவார்கள். கோவையில் தொடர்ந்து வெடிகுண்டு புரளி வந்து கொண்டு இருக்கிறது. இதுபோன்ற புரளிகளை காவல் துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
ஏன் இந்தியை தடுக்கின்றனர்? – வடமாநிலத்தில் தமிழ் படிக்கின்றனர். இங்கு ஏன் இந்தியை தடுக்கின்றனர். வளரும் குழந்தைகளுக்கு மொழிகளை கிரகித்து கொள்ளும் தன்மை இருக்கிறது. திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக நீட் தேர்வை குறைசொல்ல முடியாது. நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த வேண்டும். நீட் மையம் செல்லாமலே மாணவர்கள் தேர்வாகி இருக்கின்றனர். சென்னையில் ஏதோ சின்ன மழைக்கு செய்த பணிகளை பெரிதாக பேசுகின்றனர்.
தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை விடப்பட்டது வரவேற்கதக்கது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். ஆளுநர்களுடன், முதல்வர்கள் இணக்கமான சூழ்நிலையினை கொண்டு வர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் தமிழக ஆளுநரை அழைத்து என்ன பிரச்சினை என முதல்வர் கேட்டிருந்தால் எளிதாக இப்பிரச்சினை முடிந்து இருக்கும்” என்று அவர் கூறினார்.