புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குண்டு மிரட்டல் விடுப்போருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
கடந்த 13-ம் தேதி முதல் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கும், உள்நாட்டில் பயணிக்கும் விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டன.
கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏர் இந்தியாவுக்கு மட்டும் 27 மிரட்டல்கள் வந்துள்ளன. இண்டிகோ நிறுவனத்துக்கும் அதிக அளவில் மிரட்டல் வந்துள்ளது. இதனால், விமானங்களை தரையிறக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புரளியால் ரூ.3 கோடி செலவு: தவிர, இதுபோன்ற குண்டு மிரட்டல் புரளிகளால் விமானத்தை தரையிறக்குவதற்கான எரிபொருள் செலவு, விமான நிலைய கட்டணம். பயணிகளுக்கான இழப்பீடு என சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும், விமான நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது. இதன் அடிப்படையில், மிரட்டல் குறித்து முழு விவரம் அளிக்குமாறு விமான நிறுவனங்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது. “இப்போது நடைமுறையில் உள்ள சட்டப்படி (பிரிவு-3), விமானத்துத்துக்குள் பயணிப்பவர்கள் இடையூறு ஏற்படுத்த முயன்றால் அவர்களை தண்டிக்க முடியும். அதேநேரம், விமானத்துக்கு வெளியில் இருப்பவர்கள் இடையூறு செய்ய முயற்சித்தாலும் அவர்களையும் தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதுபோல, செல்போன், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அது புரளி என தெரியவந்தாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்ய வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் வேண்டும்” என்றார்.