மும்பை: இந்திய தேர்தல் ஆணையத்தின் மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது. இது மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது என்பதை உறுதி செய்யும் பாஜகவின் சதி என்று சிவசேனாவின் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவசேனாவைச் (உத்தவ் அணி) சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்பதை அமித் ஷாவுடன் அக்கட்சியும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. அதனால் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி விவாதித்து முடிவெடுக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான ஒரு யுக்தி இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை மகா விகாஸ் அகாதி (எம்விஏ) ஆட்சியமைக்க உரிமை கோர தவறினால் அடுத்த ஆறு மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
மகா விகாஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. எம்விஏ ஆட்சி அமைக்கும் வாய்ப்பை குறைக்கும் வகையில் திறம்பட மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நவம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதாவது, சிவ சேனா (உத்தவ் அணி), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சில சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் இருக்கும். இது நியாயமற்றது.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் போலவே உள்ளது. தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆதரிக்கிறது. ஆனால் ஹரியானா தேர்தலில் இந்த இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த போது மவுனமாக இருக்கிறது.
மக்களவைத் தேர்தலின் போது பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 200 பேரவைத் தொகுதிகளில் ரூ.15 கோடியை விநியோகிக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டிருந்தார் என்று ரவுத் குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிராவின் தற்போதைய அரசின் பதவி காலம் நவம்பர் 26ம் தேதி நிறைவடைகிறது. மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு நவம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.