தீவிரவாதிகளின் தாக்குதலால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை

இம்பால்: மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தின் மீது தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர், “ஜிரிபாம் நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள போரோபெக்ரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தின் மீது இன்று அதிகாலை 5 மணி அளவில் தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசியும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களின் இந்த தாக்குதலுக்கு துணை ராணுவப் படையினரும் காவல்துறையினரும் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. வன்முறை வெடித்ததால் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

போரோபெக்ரா பகுதி, அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் நிறைந்த நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததை அடுத்து இதுபோன்ற பல தாக்குதல்களை் இப்பகுதியில் நடந்துள்ளன.” என தெரிவித்துள்ளார்.

மணிப்பூரின் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் மோதலுக்கு அமைதி தீர்வு காணும் நோக்கில் இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.