24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன.

இதற்கிடையில், தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தங்களில் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. பல இடங்களில் வாகன நிறுத்தங்களுக்கான புதிய ஒப்பந்ததாரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி கொண்டுவர, படிப்படியாக ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கிடையே, கோட்டூர்புரம், செவ்வாப்பேட்டை சாலை, கொருக்குப்பேட்டை சரக்கு கொட்டகை, மதுராந்தகம், பெரம்பூர், அரக்கோணம், பரங்கிமலை, திண்டிவனம், தடா, தரமணி, காட்பாடி உட்பட 24 இடங்களில் வாகன நிறுத்த வசதிக்கான ஒப்பந்ததாரர்களை விரைவில் தேர்வு செய்து, அங்கெல்லாம் விரையில் வாகன நிறுத்தங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. தற்போது, இதற்கான செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.