“ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கல… இது ட்ரைலர் தான்” – பிரேமலதா விமர்சனம்

ஆம்பூர்: “ஒரு நாள் பெய்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் குளம் போல் மழை நீர் தேங்கியது .இது வெறும் ட்ரெய்லர் தான்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக்21) நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம் பள்ளிதெரு பகுதியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியிலும், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் தேமுதிக கிளைசெயலாளர் சங்கரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரு நாள் பெய்த மழை வெள்ளத்துக்கு சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதிப்பட்டனர். இது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான். மெயின் பிக்சர் டிசம்பர் மாதம் தான். அப்போது பெய்யும் மழைக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு தயாராக இருக்கப் போகிறது என்பது அப்போது தான் தெரியும்.

ஒரு நாள் மழைக்கே, தமிழக அரசின் சாதனையென்று சொல்லிக் கொண்டு இருக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது சாதனை கிடையாது. அடுத்து வருகின்ற பெரு மழைக்கு தயாராக வேண்டும் என்பதுதான். ஒரு நாள் பெய்த மழைக்கு மீனவர்களின் படகுகளையும், தீபாவளிக்காக பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். படகு மற்றும் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போது தான் தமிழகத்தில் பார்க்கிறேன்.

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்துக்கு தூர்தர்ஷன் ஊழியர்கள் தவறு செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டுவிட்டனர். இதற்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் ஆளுநரை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தினத்துக்கும் சுதந்திர தினத்துக்குமான தேதியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோல தவறுவதும் சகஜம் தான்.

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம், வெளி மாநில மது விற்பனை என பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் நிலவுகிறது. மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது, விவசாயம் இல்லை, நெசவுத்தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது. இதையெல்லாம் தமிழகத்தில் மாற்ற வேண்டும்.

திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இதுவரைக்கும் நீட் தேர்வு ரத்துக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? ஆகையால் இந்த அரசு வெறும் வாய் வார்த்தை அரசியல்தான் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியின் போது தேமுதிக மாவட்டச் செயலாளர் ஹரி கிருஷ்ணன், ஆம்பூர் நகரச் செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.