“அப்பாவிகளை கொன்று அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி” – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் சாடல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்களைக் கொலை செய்து அங்கு அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் இன்னும் முயற்சிக்கிறது என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில், உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை சுட்டுக் கொன்ற நிலையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த காவல்துறை தியாகிகள் தினக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் சின்ஹா கூறுகையில், “நேற்று கந்தர்பாலில் துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதிகிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கும் பிற அதிகாரிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நேற்றைய பயங்கரவாத தாக்குதலை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். அண்டையில் உள்ள நாட்டிலிருந்து நமது நாட்டுக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. அவர்கள் இன்னும் அப்பாவி மக்களைக் கொன்று இங்கு அமைதியை சீர்குலைக்க இன்னும் முயற்சித்து வருகின்றனர்.

இங்கு நாம் போதை பொருள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்துவிதமான அச்சுறுத்தல் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், குற்றவாளிகளைத் தப்பவிடக்கூடாது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக நமது படை வீரர்கள் வீரத்துடன் போராடி வருகின்றனர். அவர்களை பெருமைபடுத்தும் விதமாக இந்தத் தியாகத் தூண் (Balidan Stambh) கட்டப்பட்டது. அவர்களின் தியாகம் உன்னதமானது.

கடமையின் போது உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுடைய குடும்பத்தினரின் கல்வி, சுகாதாரம், காப்பீடு மற்றும் இதர விஷயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும். அவர்களின் வளமான எதிர்காலத்துக்காக நாம் அவர்களுடன் துணை நிற்போம்.

பாதுகாப்பு இல்லாத எந்த ஒரு தேசமும் வளர்ச்சியடைய முடியாது. எந்த ஒருசம்பவம் நடந்தாலும் அந்தச் சுமையை காவலர்கள் தான் தாங்க வேண்டியுள்ளது. எனவே நமது பாதுகாப்புப் படையினரின் தியாகங்களை மதித்து அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். படையினர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் நாம் அவர்களை வணக்கம் செலுத்தவேண்டும்.” என்று சின்ஹா பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.