இது உங்கள் பூமியல்ல… மன்னர் சார்லசுக்கு எதிராக கொந்தளித்த ஆஸ்திரேலிய பெண் எம்.பி.

கேன்பெர்ரா,

இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு இன்று சென்று உரையாற்றினார். அவர் பேசி முடித்ததும், செனட் சபையின் பெண் உறுப்பினரான லிடியா தோர்ப், காலனித்துவ ஒழிப்புக்கான கோஷங்களை எழுப்பினார். அவையில் இருந்தவர்களின் கவனம் தன்னை நோக்கி திரும்பும்படி மாற்றினார்.

அவருடைய கூச்சலால் அவையில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் ஆவேசத்துடன் மன்னர் சார்லசை நோக்கி, எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். அதனை திருப்பி கொடுங்கள். எங்களிடம் இருந்து திருடியவற்றை எங்களிடமே திருப்பி தாருங்கள் என சத்தம் போட்டார்.

இது உங்களுடைய பூமி அல்ல. நீங்கள் என்னுடைய அரசரும் அல்ல என குறிப்பிட்ட அவர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர்வாசிகளை ஐரோப்பிய குடியேறிகள் இனப்படுகொலை செய்து விட்டனர் என கடுமையாக பேசினார். மன்னர் சார்லசின் முன் அவர் இப்படி பேசியதும் சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்த்தனர்.

ஆஸ்திரேலியா, 100 நாடுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒட்டுமொத்த சமூகமும் புலம்பெயர்ந்து சென்றனர். 1901-ம் ஆண்டு அந்நாடு சுதந்திரமடைந்தபோதும், ஒருபோதும் முழு அளவில் குடியரசு நாடாக மாறவில்லை. அதன் தலைவராக மன்னர் சார்லஸ் நீடித்து வருகிறார்.

தோர்ப் 2022-ம் ஆண்டு உறுப்பினராக பதவியேற்கும்போது, அப்போது ஆஸ்திரேலியாவின் தலைவராக இருந்த ராணி 2-ம் எலிசபெத்துக்கு எதிராக கடுமையாக பேசினார். காலனி ஆதிக்கத்திற்கான, ராணி 2-ம் எலிசபெத்துக்கு உண்மையாக இருப்பேன் என பதவியேற்றபோது அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக செனட் அதிகாரி குறுக்கிட்டு, அட்டையில் அச்சிடப்பட்டவற்றை மட்டுமே வாசிக்கவும் என தோர்ப்பை தொடர்ந்து கேட்டு கொண்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.