புதுடெல்லி: “கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 16 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டும் போதுமா? என்னுடைய பதில் இல்லை என்பதுதான்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தனியார் ஆங்கில ஊடகம் நடத்திய சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியவதாவது: “நான் சந்திக்கும் மக்களில் பலரும் என்னிடம் பேசும்போது, ‘இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறிவிட்டது. எத்தனையோ மைல்கற்களை கடந்தாகிவிட்டது. சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனாலும் ஏன் இன்னும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 16 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இது மட்டும் போதுமா? என்னுடைய பதில் இல்லை என்பதுதான். இது மட்டும் போதாது. இன்று உலகின் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த இளைஞர் சக்தியால் நம்மை வானளவு உயர்த்த முடியும். நாம கண்ட கனவு மற்றும் நாம் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்காக நமக்கு ஓய்வோ ஆசுவாசமோ கிடையாது.
ஒவ்வொரு அரசாங்கமும் தாங்கள் செய்த பணியை முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மரபு உள்ளது. ஆனால் இனிமேல் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து அதன் மூலம் மகிழ்ச்சியடைய முடியாது. இனிமேல் வெற்றியின் அளவுகோல் நாம் எதை சாதிக்க விரும்புகிறோம் என்பதுதான். இந்தியா இப்போது ‘முன்னோக்கு அணுகுமுறை’யைக் கொண்டுள்ளது. இந்திய நூற்றாண்டைப் பற்றி நாம் விவாதிக்கிறோம். உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா நம்பிக்கையின் சுடராக உள்ளது. இந்தியாவுக்கு முன் பல சவால்கள் உள்ளன. ஆனாலும் நாம் இங்கே ஒரு நேர்மறை உணர்வை உணர்கிறோம்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.