இலங்கை பொலிசுக்குச் சொந்தமான மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா தொலைத்தொடர்புக் கோபுரங்களைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (21.10.2024) நடைபெற்ற அமைச்சரவையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை பொலிஸ் தொடர்பாடல் வலையமைப்பைப் பேணிச் செல்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக இத் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2024-2026 நடுத்தரக் கால வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் தேவையான நிதியை ஒதுக்கி குறித்த தொலைத்தொடர்புக் கோபுரங்களைத் திருத்தம் செய்வதற்காக ஆலோசனைச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படவுள்ளது.
குறித்த தொலைத்தொடர்புக் கோபுரங்களைத் திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை திறந்த போட்டி விலைமுறிக் கோரல் முறைமையைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும் நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.