Vettaiyan: `சின்ன வயசுல படையப்பா பாடலைதான் அதிகமாக பாடுவேன்; இப்போ அவர் படத்துல பாடிட்டேன்' – பாலாஜி

அனிருத் தான் இசையமைக்கும் படங்களின் மூலம் பல சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான `வேட்டையன்’ திரைப்படத்தில் இடைபெற்றிருந்த `க்ளீன் ஷாட்’ பாடலின் மூலம் பாலாஜி சுயாதீன இசைக்கலைஞரை பயன்படுத்தியிருந்தார் அனிருத். `வேட்டையன்’ திரைப்படத்தின் ஆல்பம் வெளியானதும் இவருடைய `க்ளீன் ஷாட்’ பாடல்தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ் எங்கும் நிறைந்திருக்கிறது. ரஜினியின் இன்ட்ரோ காட்சியிலேயே இந்த பாடல் இடம்பெற்றிருந்தது பாலாஜிக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. வாழ்த்துகளை கூறி ஒரு ஸ்மால் சாட் போட்டோம்.

“சுயாதீன இசைக்கலைஞராக உங்களுடைய பயணத்தை எப்போது தொடங்குனீங்க?”

“2008-ல தான் என்னுடைய இந்த பயணம் தொடங்குச்சு ப்ரோ. அப்போ எனக்கு வயசு 16. அந்த நேரத்துல அதிகமான ஆங்கில ரேப் பாடல்கள் கேட்பேன். அந்த வடிவம் என்னை ரொம்ப ஈர்த்தது. அவங்க ரேப் வரிகளை பயன்படுத்துற விதமும் எனக்கு பிடிச்சிருந்தது. அதன் பிறகு என்னுடைய ஸ்டைல்ல நான் தனியாக ரேப் எழுத தொடங்கினேன். பல சுயாதீன பாடல்கள் பண்ணினேன். இத்தனை ஆண்டு உழைப்புக்குப் பிறகு இன்னைக்கு இங்க இருக்கேன். சுயாதீன இசைக்கலைஞராக இருந்த அந்த பயணம் ரொம்ப சவாலானது. எந்த சப்போர்ட்டும் கிடைக்காது. அந்த பாடல்களை வெளியிடுறதும் கொஞ்சம் கடினமானதுதான். நாமே பாடலை கம்போஸ் பண்ணி, நாமே பாடல் வரிகளை எழுதி அந்த பாடலுக்கான அத்தனை வேலைகளையும் நாமே பார்க்க வேண்டியதாக இருக்கும்.”

Rap Singer Balaji

`க்ளீன் ஷாட்’ பாடல் எப்படி அமைஞ்சது?

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய ஒரு ஸ்டேஜ் பெர்ஃபாமென்ஸ் அனிருத் பர்தர் டீம்ல இருக்கிற ஒருத்தர் பார்த்துட்டு என்கிட்ட வந்து பேசி என்னுடைய நம்பரெல்லாம் அப்போ வாங்கினாரு. அதன் பிறகு இப்போ `வேட்டையன்’ படத்துக்காக கூப்பிட்டாங்க. இந்த மாதிரி சூப்பர் ஸ்டார் நடிக்கிற திரைப்படம்னு சொன்னதும் நான் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிட்டேன். இப்போ இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிட்டு இருக்கு. ரஜினி சாரோட இன்ட்ரோ சீன்லையே இந்த `க்ளீன் ஷாட்’ பாடல் வந்ததுனால மக்கள் இந்த பாடலையும் கொண்டாடுறாங்க.”

“இந்த தொடக்கம் உங்களுக்கு எப்படியான நம்பிக்கையை கொடுத்திருக்கு?”

“முதல்ல இந்த ப்ராஜெக்ட் பற்றி எடுத்து சொன்னதும், எனக்கு ஷாக் ஆகிடுச்சு. அதே சமயம் பயமாகவும் இருந்தது. பல லெஜெண்ட்ஸ் இருக்கிற ஒரு திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதப்போறோம்னு அதுல இருக்கும் பொறுப்புகளைப் பற்றி சிந்திக்க வச்சது. இந்த பாடல் படத்துல வருமா? வராதா? என்ன முடிவு எடுப்பாங்கனு எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. ஆனா, அவங்களோட வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைதான் கொடுத்தது. அனிருத் ப்ரதர் டீம்ல இருக்கிறவங்களுக்கு என்னுடைய ராப் பகுதி பிடிச்சிருந்தது. இது எனக்கு பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பைக் கொடுத்த அனிருத் ப்ரதருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.”

வேட்டையன்

“இந்த பாடலுக்கான வேலைகள்ல உங்களுக்கு என்னென்ன டாஸ்க் இருந்தது ?”

“இதான் பாடலுடைய டிராக், இந்த மாதிரியான விஷயங்கள் பாடலில் எதிர்பார்க்கிறோம்னு சொன்னாங்க. எனக்கு அதே நேரத்துல சுதந்திரமும் கொடுத்தாங்க. ஒரு பவர்ஃபுல்லான விஷயத்தை எதிர்பார்த்தாங்க. நான் இந்த பாடலை பண்ணினதும் அனிருத் ப்ரதர் கேட்டுட்டு அவருக்கு பிடிச்சிருந்ததாக சொன்னாரு. இந்த ராப் பகுதி தலைவரோட இன்ட்ரோ சீன்லதான் வரப்போகுதுனு எனக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க. ஆனா, அது எந்த வடிவுல வரபோகுது, எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகுதுனு நான் யோசிச்சேன். அதுவும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குனு படம் வந்ததும் நான் புரிஞ்சுகிட்டேன். தலைவர் பல தலைமுறைகளுக்கும் ஊக்கம் கொடுத்திருக்கார். ஜென் -சி உட்பட பலரும் ரஜினி சாரை கொண்டாடுறாங்க. அவரோட எனர்ஜி எனக்கு மோட்டிவேஷன் கொடுக்குது. சின்ன வயசுல `என் பேரு படையப்பா’ பாடலைதான் அதிகமாக பாடிட்டு இருப்பேன். அப்போ இந்த நடிகரோட படத்துல நம்ம பாடுவோம்னு நினைச்சதுகூட கிடையாது. இன்னைக்கு அவர் படத்துலையும் ஒரு பாடல் பாடிட்டேன்! இதை இப்போ வரைக்கு என்னால நம்ப முடியல.”

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.