புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிக்காக 50,000 கூட்டங்களை ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) நடத்துகிறது. இதற்கு முன் ஹரியாணாவிலும் பாஜக வெற்றிக்காக ஆர்எஸ்எஸ் கூட்டங்கள் நடத்தி இருந்தது கவனிக்கத்தக்கது.
பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். இதன் தொண்டர்கள் உழைப்பு இன்றி பாஜகவுக்கு எந்த்த தேர்தலிலும் முழு வெற்றி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் அங்கு முகாமிட்டு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பாஜகவுக்காக பல வியூகங்கள் அமைக்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் பெரும் உதவியால் பாஜகவுக்கு தேர்தலில் வெல்வது எளிதாகிறது. இந்த வகையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்காகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சுமார் 50,000 சிறு, சிறு கூட்டங்கள் துவக்கி உள்ளனர். வாக்குச்சாவடிகள் அளவிலான இக்கூட்டங்களில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பொதுமக்களிடம் பாஜகவுக்காக வாக்களிக்க வித்திட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் ஆழமான கால்களை பதித்து வைத்துள்ளது. இதன் தலைமையகமும் அம்மாநிலத்தின் நாக்பூரில் அமைந்துள்ளது. இதனால், மகாராஷ்டிராவின் வாக்காளர்களுடன் தமது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சந்திப்பு, பாஜகவுக்கு தேர்தலில் பலன் தரும் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இதற்குமுன், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், தம் அரசியல் பிரிவான பாஜகவிற்காக பணியாற்றினர். தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்பாகவே ஹரியானாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியத் தலைவரான மோகன் பகவத் சில கூட்டங்களை நடத்தி இருந்தார்.
இதன் பலனாகவே, ஆளும் கட்சிக்கு எதிரான சூழலில் தோல்வி முகத்துடன் இருந்த பாஜக எதிர்பாராத வெற்றியை பெற்றது. எனினும், அதற்கு முன்பாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சில மனக்கசப்புகள் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக, பாஜகவுக்காக வழக்கம் போலான தேர்தல் பணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இறங்கவில்லை. இதனால், மக்களவை தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை. எனினும், கூட்டணியின் ஆதரவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவி அமர்ந்தார்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றி 2029 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இங்கு பிரதமர் மோடியையே முன்னிறுத்தி பாஜகவும் அதன் கூட்டணிகளான முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாதக் காங்கிரஸும் பிரச்சாரம் செய்கின்றனர். இக்கட்சிகளின் கூட்டணி, மஹாயுதி எனும் பெயரில் தேர்தல் களத்தில் உள்ளது. இதை எதிர்க்கும் எதிர்கட்சிகள் வரிசையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா யுபிடி பிரிவு, சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன.
இந்த எதிர்க்கட்சி கூட்டணி மஹா விகாஸ் அஹாடி எனும் பெயரில் மஹாயுதிடன் மோதுகிறது. இரு கூட்டணிகளுக்கு இடையே, மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளிலும் நேரடி போட்டி உருவாகி உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ஒவ்வொரு கட்சிகளும் வெளியிடத் துவங்கி விட்டன. ஒரே கட்டமாக நவம்பர் 20-ல் நடைபெறும் வாக்குப்பதிவு முடிவுகள் நவம்பர் 23-ல் வெளியாக உள்ளன.