சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகள் ஏப்ரல் முதல் இயக்கம்: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “சென்னையில் மாசு இல்லாத பொது போக்குவரத்து சேவையை அளிக்கும் விதமாக நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை மொத்த விலை ஒப்பந்த மாதிரி (Gross Cost Contract) இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான டெண்டரில் மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் OHM Global Mobility Private Ltd., (Subsidiary of Ashok Leyland Ltd & SWITCH Mobility Automotive Limited) நிறுவனத்துடன் மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, SWITCH Mobility Automotive Limited நிறுவனத்தின் மூலம் மின்சார பேருந்துகள் தயார் செய்து இயக்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, 12 ஆண்டுகள் பேருந்துகளை பராமரித்து இயக்குவது, உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது, ஓட்டுநரின் பணியமர்த்துவது உள்ளிட்டவை ஒப்பந்ததாரரின் பணி. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்துநர் நியமிக்கப்பட்டு, வழக்கமான கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம். ஒப்பந்ததாரருக்கு கிமீ ஒன்றுக்கு குளிர்சாதன வசதியில்லாத மின்சாரப் பேருந்துகளுக்கு ரூ.77.16, குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளுக்கு ரூ.80.86 தொகையை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது டீசல் பேருந்துகள் இயக்குவதற்கு கிமீ ஒன்றுக்கு ரூ.116 செலவிடப்படுகிறது. இந்த புதிய திட்டத்தால் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான மூலதன செலவுகள் (சுமார் ரூ.875 கோடிகள்), உதிரி பாகங்கள், பராமரிப்பு செலவுகள், ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஊதிய செலவுகள் தவிர்க்கப்படுகிறது. இம்மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தால் பொது மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்க முடியும். இந்த பேருந்துகள் முதல்வரின் உத்தரவுப்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

இப்பேருந்துகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 180 கிமீ இயக்க இயலும். குளிர்சாதன வசதியில்லாத 400 மின்சாரப் பேருந்துகளும், குளிர்சாதன வசதியுடன் கூடிய 100 மின்சாரப் பேருந்துகள் என மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் பெரும்பாக்கம், தண்டையார் பேட்டை-1, பூந்தல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர்-2 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைத்திடும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.